தேசிய கல்வி கொள்கை 2019- விஜயகுமார்


              முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியான கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழு 2017 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அமைக்க மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. அண்மையில் இந்த நிபுணர் குழு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளது. மேலும் ஜூன் 30 ஆம் தேதி வரை இவ்வறிக்கை குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் மக்கள் தங்கள் கருத்துக்களை  nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் வாயிலாக பதிவு செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.
 தேர்தல் அறிக்கை
               தற்போதுள்ள பாடத்திட்டங்கள் அனைத்தும் 1986 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கல்விக் கொள்கைகளின் படியே அமைந்துள்ளது.அதன் பிறகு 1992 ஆம் ஆண்டு சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது பாடத்திட்டங்கள் அனைத்தும் நடப்பு நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்படும் மேலும் காலத்திற்கேற்றவாறு புதிய அறிவியல் தொழில்நுட்பங்கள் பள்ளி பாடங்களில் சேர்க்கப்படும் என்று மோடி தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தார்.அதன்படியே  2014 ஆம் ஆண்டு டிஎஸ்ஆர் சுப்ரமணியன் தலைமையிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு 2016 ஆம் ஆண்டு தனது பரிந்துரைகளை அரசிடம் வழங்கியது. இந்த புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுக்கு மக்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்த நிலையில் கஸ்தூரிரங்கன் தலைமையிலான  குழு 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இக்குழு டிஎஸ்ஆர் சுப்ரமணியன் கமிட்டி மற்றும் மக்களின்  பரிந்துரைகளை ஏற்று புதிய கல்விக் கொள்கைக்கான  வரைவை ஜூன் 1 ஆம் தேதி  மத்திய அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது .
புதிய கல்விக் கொள்கை
தேசிய கல்வி ஆணையம் அமைப்பது, ஆசிரியர்  நியமனத்தில் மாற்றம், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம், கல்வி உரிமைச்சட்டம்1986ல் திருத்தம் (3முதல்18 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி )  போன்ற பல நல்ல திட்டங்கள் வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு
பல நல்ல திட்டங்கள் கல்விக் கொள்கையில் இருப்பினும் பள்ளிகளில் மும்மொழி கொள்கை பின்பற்றப்படும் என்ற அறிவிப்பால்  பெரும்சர்ச்சை கிளம்பியது.

 மும்மொழி கொள்கை
இக்கொள்கை யின் படி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளி மாணவர்கள் மூன்று மொழிகளை கற்க வேண்டும். ஹிந்தி பேசும் மாநிலங்களில் முதல் மொழியாக ஹிந்தியையும் இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தையும் மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட இந்தியமொழிகளை தேர்வு செய்யலாம் .
ஹிந்தி பேசாத மாநிலங்களில் முதல்மொழி தாய் மொழியாகவும் இரண்டாவது மொழி ஆங்கிலமாகவும் மூன்றாவது மொழியாக ஹிந்தியினை மாணவர்கள் கட்டாயம் பயில வேண்டும் என வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும்எதிர்பை தெரிவித்தனர் . கடும்எதிர்ப்பை அடுத்து மூன்றாவதுமொழியினை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என திருத்தம் செய்யப்பட்டது.
            மேலும் ஹிந்தி திணிக்கும்  எண்ணம்  மத்திய அரசுக்கு இல்லையென்றும் இது வரைவு அறிக்கையே  தவிர மக்கிளிடம் கருத்து கேட்ட பிறகு தான் அமல்படுத்தப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.
பண்பாட்டை வளர்க்கும் கொள்கை
பல மொழிகள் பேசும் குடியரசு இந்தியாவில் மாணவர்கள் தாய் மொழி தவிர மற்றுமொரு இந்திய மொழியினை தெரிந்திருக்க வேண்டும் என்பது அரசின் நிலைப்பாடு. மொழி என்பது வார்த்தை உச்சரிப்புகளால் கட்டமைக்கப்பட்டது அல்ல .
 மாறாக இது தனி மனிதனுடைய உணர்ச்சிகள், கலை மற்றும் கலாச்சார பண்பாட்டை ஒருங்கே வெளிப்படுத்தும் ஊடகமாகும்.  மாணவர்கள் பிற மாநில மொழிகளை கற்கும் பொழுது பிற மாநில மக்களை புரிந்துகொள்வார்கள். வருங்கால இந்தியாவில் மாநிலங்களுக்கிடையிலான உறவுகள் வலுப்பெறும்.
        மும்மொழி   கொள்கையின் நன்மைகள் இவ்வாறு இருக்க ஒரு குறிப்பிட்ட மொழியினை மட்டுமே மாணவர்கள்  தேர்வு செய்ய வேண்டும் என கட்டாயபடுத்துவது அநீதியாகும்.
  அமல்ப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் 
        மொழிகளை கற்று தரும் ஆசிரியர்களின் தட்டுப்பாடு. உதாரணமாக தமிழகத்தில் குஜராத்தி மொழியினை கற்று தர வேண்டுமெனில் தமிழ் மற்றும் குஜராத்தி ஆகிய இரண்டு மொழியினையும்  தெரிந்த ஆசிரியர்கள் மட்டுமே கற்று தர இயலும். இம்மாதிரியான சூழலில் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவது இயலாத காரியம் . அதற்கு முன்பாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்திய மொழி ஆசிரியர் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும் . மொழித் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆசிரியர்கள் தகுந்த மாநிலங்களில் பணி அமர்த்தப்பட வேண்டும். இதனால்  இக்கொள்கையை அமல் படுத்துவதில் தாமதம் ஏற்ப்பட்டாலும் தரமான முறையில் செயல்படுத்த இயலும்.
ஹிந்தி திணிப்பு
            மத்தியில் கட்சியும் ஆட்சியும் மாறினாலும் தென்னந்திய மாநிலங்களின் மீதான ஹிந்தி திணிப்பு கொள்கை மட்டும் மாறவில்லை. இந்தியா முழுவதும் ஹிந்தி என்ற டெல்லியின் நிலைப்பாட்டில் அணு அளவும் மாற்றம் இல்லை என்பதை தான் தேசியக் கல்வி கொள்கை  வரைவு விளக்குகிறது .
             1937 ஆம் ஆண்டு தமிழகத்தில் ராஜாஜி தலைமையிலான அரசு ஹிந்தி மொழியை பாடத் திட்டத்தில் கட்டாயமாக்கியது‌. நீதி கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த முடிவு  கைவிடப்பட்டது. 1950 ல் குடியரசு இந்தியாவின் அலுவல் மொழியாக ஹிந்தியையும் இணை மொழியாக ஆங்கிலத்தையும் 15 ஆண்டுகளுக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. 1965 ல் ஹிந்தி மொழி நிரந்தரமாக இந்தியாவின் அலுவல் மொழியாக இருக்கும் என்ற நிலை ஏற்ப்பட்ட போது தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் கடும்எதிர்ப்பு கிளம்பியது.  குறிப்பாக தமிழகத்தில் ஹிந்தி மொழி எதிர்ப்பு போராட்டம் இளைஞர்கள் மத்தியில் வலுப்பெற்றது. இதற்கு முக்கியக் காரணம் அப்போதைய திமுக தலைவர்  அறிஞர் அண்ணாவின் பரப்புரைகளே. பல்வேறு கட்ட போராட்டம் மற்றும் உயிர் தியாகங்களுக்கு பிறகு ஆங்கிலம் ஹிந்தி ஆகிய இரு மொழிகளுமே இந்தியாவின் அலுவல் மொழியாக நிரந்தரமாக விளங்கும் என 1967 ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான அரசு திருத்தம் கொண்டு வந்தது.
          பல மொழி கலாச்சாரங்கள் மற்றும் பல்வேறு வகையான புவியியல் அமைப்பை உள்ளடக்கியது தான் இந்திய துணைக் கண்டம். இருப்பினும் ஒரே மொழியினை நாடு முழுவதும் கொண்டுவர முயல்கின்றனர் மத்தியில் ஆளும் வட மாநில கட்சிகள்.  ஒரே மொழி ஒரே இந்தியா என்பது கனவிலும் நடைபெறாத ஒன்று. இதனை உணர்ந்து இனியாவது ஹிந்தி திணிக்கும் மோகத்தை மத்திய அரசுகள் கைவிட வேண்டும். இல்லையெனில் மற்றுமொறு ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மத்திய சர்க்கார் சந்திக்க நேரிடும்.

Comments

Post a Comment