அன்புள்ள நாங்கள் மின்னதழுக்கு,

 அன்புள்ள நாங்கள் மின்னதழுக்கு,

                              நலம்,நலமறிய ஆவல், மூன்று வயதினை கடந்து நான்காம் வயதை எட்டப் போகிறாய் என்று கேள்விப் பட்டேன். இன்னும் நீ பல தலைமுறைகளை கடந்து ஜொலிக்க வேண்டும் என்பது எங்கள் எல்லோருடைய விருப்பம்! அரசியல், சினிமா, வேளாண்மை, பொருளாதாரம், அறிவியல் என்று நீ கையில் எடுக்காத துறை ஏதேனும் உண்டோ??? கதையாய், கவிதையாய், கட்டுரையாய், நீ ஒளிராத இடங்கள் தான் உண்டோ??? வெறும் கல்லாக இருந்த எங்கள் எழுத்துக்களை, சிற்பமாக மெருகேற்றினாய். பல இளம் எழுத்தாளர்களின் தாய்வீடும் நீ தான்! கத்தியின் முனையை விட பேனாவின் முனை மிக கூர்மையானது என்பதை மாதம் ஒரு முறை நிருபித்துக் கொண்டே இருக்கிறாய். ஓடி வந்து கை குலுக்க ஒருவருமில்லையா? நீயே குலுக்கிக் கொள், நட நாளை மட்டுமல்ல, இன்றும் நம்முடையது தான் நட என்ற மு.மேத்தாவின் வரிகளுக்கு ஏற்ப ஓய்வு இல்லாமல் உழைக்கும் ஒவ்வொரு நாங்கள் மின்னதழ் குழு உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த பாரட்டுக்கள். உன்னிடம் ஒன்று சொல்லட்டுமா? பெண்களுக்கான 33% சதவீத இட ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது, சூரியனை ஆராய ஆதித்யா-L1 யையும், நிலவின் தென்பகுதிக்கு சந்திராயன்-3 யையும், கடலுக்கு அடியில் ஆராய சமுத்திராயன்  திட்டத்தையும் வெற்றிகரமாக மேற்கொண்டுவிட்டோம், G-20 மாநாட்டை நம் இந்தியா தான் தலைமை ஏற்றி நடத்தியது, Drone மூலம் மருத்துவப் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் வசதியும் வந்து விட்டது, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தையும் கட்டி முடித்து விட்டோம், இதே இந்தியாவில் தான் மணிப்பூர் கலவரம் நடந்து மனதை பதைப்பதைக்க வைத்தது, திடீரென்று வரலாற்று நிகழ்வுகளை ஒன்று ஒன்றாக அடுக்க ஆரம்பித்து விட்டேன் என்று பார்க்கிறாயா? அது ஒன்றுமில்லை நேரு தன் மகள் இந்திராவுக்கு கடிதம் எழுதும் போது, அறிஞர் அண்ணா தம்பிகளுக்கு எழுதும் போது,மு.வ தங்கைக்கு எழுதும் போது அக்காலத்தில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை குறிப்பிடுவது உண்டு, வருங்கால சந்ததியினர் அன்றைய காலக் கட்டத்தை பற்றி புரிந்துக் கொள்ள எளிமையாக இருக்கும்,நாம் மட்டும் என்ன விதிவிலக்கா?? நமது கடிதப் போக்குவரத்தும் அந்த வரிசையில் ஒன்றாக இணையட்டுமே!!! உன்னுடன் கதைப்பதற்காக மில்லியன் கதைகள் காத்து கிடக்கின்றன, இன்னும் நீ எண்ணில் அடங்கா பல நட்சத்திர எழுத்தாளர்களை உருவாக்க வேண்டும். காலத்திற்கு தகுந்தாற்போல் உன்னை மாற்றி கொண்டு இன்னும் நிறைய தளங்களில் உன் வெற்றிக் கொடியை நாட்ட வேண்டும்.

 உன்னுடைய பதில் கடிதத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறேன்.

                                                                    நன்றி

இப்படிக்கு,  

மீ.சா                              

இடம்:  தென்காசி                                                                                 

நாள்: 21.05.2024




Comments