ஜூலை மாத கவிதைகள்


ஊழி  தீண்டாக் காதல் 


ஊழிக்கால அலைகளை ரசித்துக்கொண்டே, 
விண்மீன்களின் முனுமுனுப்பை 
கவனித்துக் கொண்டிருக்கிறேன்,

வானம் மெதுமெதுவாய் சாயமேறுகிறது,
நானும் மெதுமெதுவாய் காயந்துறக்கிறேன்,
மண்ணுமிழ்ந்த அனலாய் 
மேலெழுந்து மலை மேவி அமர்கிறேன்,
மேகப்புரவிகளின் மோகச் சிலிர்ப்பில் 
சாரல் சந்தமனாய் பொழிகிறது...

மேகங்களின் முத்தத்திற்கு 
சாட்சியாகின்றன மின்னல்கள்,
கடுங்குளிரில் அயராமல் கவிபாடி 
பாரிக்காக காத்திருக்கின்றன 
காட்டு முல்லைக் கொடிகள்...

மண் நனைத்து, 
மலை நனைத்து, 
மலைக்கோயில் சிலை நனைத்து, 
மரமீன்ற இலை நனைத்து, 
மாதுளங்குலை நனைத்து, 
மாநதியாய் பிறப்பெடுக்கும் மழை வெள்ளத்தில் 
மாங்கனிகள் தேன் சொரிந்து செல்கின்றன...

நீரில் தேனுன்ன சென்ற தேனீக்கள் 
மீனுக்கு இரையாக, 
மாங்கனிகள் மானுக்கு இரையாக, 
மானோ நாணுக்கு இரையாகிப் போகிறது...

இவ்வையம் இப்படியும் அப்படியுமாய் 
இயங்கிக் கொண்டே இருக்கிறது...

இதை எதையும் கண்டுகொள்ளாத என் மனமோ, 
ஆற்றங்கரை மரக்கிளையில், 
அற்புத மலர்ப்பொழிவில், 
நீரிலே கால் நனைத்து நித்தியமாய், அவளொடு ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது.


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!


பாறையில் தான் நீரும் ஊறும்,
பகலவனால் தான் மாரியும் பொழியும்,
மரண வலியில்தான் ஜனனம் நிகழும்,
புதைந்த விதைதான் மரமாய் மாறும்.

பறிக்காத மலரும் 
மறுநாள் வாடி தான் போகும்!
வாங்காத பொருளும் 
ஒரு நாள் விற்றுத்தான் போகும்!

பாதியாய் போன நிலா- மீண்டும்,
பௌர்ணமியாய் தோன்றுவதில்லையா?
எதிர்திசையில் காற்றடித்தும்- பருந்து,
தன் இரையை பிடிப்பதில்லையா?

நடக்க இருப்பவை நடந்தே தீரும்-எல்லாம்
நன்மைக்கே என்று மனமும் மாறும்!
நேற்றையும் நாளையையும் மறந்து போ-நாம்
இன்றைய தினத்தை கொண்டாடுவோம் வா! 

தற்கொலைதான் தீர்வெனில்?


யவரும் இல்லாமல் போயிருப்பர் உலகினில்
இதை கோழைத்தனமென்பதா?
இயலாமையென்பதா?
விரக்தியென்பதா?
பயமென்பதா?
மன உறுதியின்மையென்பதா?
தெளிவின்மையென்பதா?

நீ எதை தேடி ; உன் முடிவை தேடுகிறாய்!
என்ன உழைத்துவிட்டாய்; உன் முடிவை தேடுகிறாய்!
ஏன் சலித்து விட்டாய் ; உன் முடிவை தேடுகிறாய்!
ஓர் நொடி; உன் உயிர் நாடி உனதில்லை!
வாழ்க்கையை துச்சமென கருதி
உயிரை எச்சமென இழக்கிறாய்
பிறப்பும் உன் உரிமையல்ல
இறப்பும் உன் உரிமையல்ல
உன் கனா உறுதியென்றால்
நீ உழைத்திருப்பாய்!
இப்படி மடிந்திருக்கமாட்டாய்!
உன் இறப்பு இன்று பலருக்கும் , விரைவு செய்தி
நாளை????
                                     
- உ.மனுஷா ,  
இளங்கலை வேளாண் பட்டதாரி


திருநங்கை
நம்மிலே உலாவி....
நம்மிலே வரவாகி....
நம்மிலே நமதாகி.....
ஆணும் பெண்ணும் 
சரி நிகர் என்ற மெய்
இன்னும் வேரூன்ற.... 
இதிகாச புராணங்களில்
மௌன செயலாட்சி புரிந்த 
அணங்குகள்!

சொல்லாட்சி புது உருவெடுக்க....
எண்களில் அவதரித்து....
வளர்கையில் சிரமித்து.....
கைசேர்ப்பதில் புதுயுகம் பழக்கி....
நங்கை எனும் திருவுருமாய்
மெய்க்காத்து வழிநடத்த 
பார் வந்த இறைவர்களே!

ஆணென்ற மதிப்பையும் தந்து 
பெண்ணியம் போற்றும் "திருநங்கையர்கள்"
இதயங்கள் ஒன்றென
கைசேர்ப்பிக்கும் இசையில்
அவலங்கள் களைத்தெறிந்து
இயல்புகள் கற்பிப்போம்!


தருணங்கள்

வாழ்வில் 
சில தருணம்
சிந்திக்க வைத்து சிரிக்க வைக்கிறது!!!
சில தருணம்
அழ வைத்து ஆறுதல் சொல்கிறது!!! 
சில தருணம்
புண்ணாக்கி புலம்ப வைக்கிறது!!! 
சில தருணம் 
துள்ள செய்து துவள செய்கிறது!!!!!

நித்தம் ஒரு நொடி
எதையோ கடந்து
எதையோ சுமந்து
எதையோ மறந்து
எதையோ நினைத்து
கடிகார முள்ளோடு
நாமும் நகர்கிறோம்!!!
நம்மோடு நம்
நாடியும்
நடித்தே துடித்து
நகர்கிறது!!!!!








Comments