உலகின் உயர்ந்த உளவுத்துறை மொசாத்

 இல்லுமினாட்டி, உளவுத்துறை எனும் வார்த்தைகளைக் கேட்கும் போதே ஏதோ ஒரு இனம்புரியாத பயம் மனதிற்குள் எழத் தொடங்குகிறது. உலகில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கு, ஆதிக்க நாடுகளும் அதன் அரசியல் பின்னணியும் தான் காரணம் என்றால் அது மிகையாகாது.

அத்தகைய ஆதிக்க நாடுகளையே ஆட்டம் காண வைத்தது 20,000 ச.கீ பரப்பளவே கொண்ட ஒரு சிறிய நாட்டின் உளவுத்துறை. ஆம் அது இஸ்ரேல் நாட்டின் மொசாட் தவிர்த்து வேறு யாராக இருக்க முடியும். "காற்று புகாத இடத்திலும் கூட மொசாத் உளவாளிகள் புகுந்து தகவல்களைச் சேகரிக்கும்" என்கிறார்கள் உலக அரசியல் வல்லுநர்கள். 

விறுவிறுப்புக்கு சிறிதளவும் பஞ்சமில்லாத ஒரு திரைப்படத்தை ஒத்த பல நிகழ்வுகளை நடத்தி காட்டிய மொசாட் குறித்துத் தான் இந்த மாத கட்டுரை விவரிக்கிறது. இதை படிப்பதற்கு முன் சென்ற மாத இதழில் வெளியான ஆசியாவின் அத்திப்பட்டி கட்டுரையைப் படித்துவிடுங்கள். கதைக்கு அடித்தளம் அங்க தான் இருக்கு. உலகின் மிகப்பெரிய உளவுத்துறைகளில் மூன்றாவது இடத்திலும், சக்தியில் முதலிரண்டு உளவுத்துறைகளை விடவும் மிகவும் வலுவானதாகவும் இன்றளவும் திகழ்கிறது மொசாட் எனும் ஜாம்பவான்.      



மொசாட் உளவுத்துறை இஸ்ரேல் எனும் நாடு உருவான பின்பு தோற்றுவிக்கப்பட்டதல்ல. மாறாக, இஸ்ரேல் எனும் நாடு உருவாகவே மிகப்பெரிய பங்காற்றிய மொசாட்-லி-அலிபெட்(Mossad-le-alibett) எனும் இரகசிய அமைப்பு தான் இன்றைய உருமாற்றம் பெற்ற மொசாட். இது உருவாக்கப்படும் போது அண்டை நாடுகளிடமிருந்து இஸ்ரேலை பாதுகாப்பதே அதற்குப் பிரதான கடமையாக இருந்தது. பின்னாளில் தன் செயல்பாடுகளை உலகளவில் பெருக்கி கொண்டு ஆட்டம் காட்டியது அந்த ஜாம்பவான். இதன் சுவாரஸ்யமான செயல்பாடுகள் சிலவற்றை இங்கு விரிவாகக் காண்போம்.

உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையான யூதப்படுகொலை ஹீட்லரால் நிகழ்த்தப்பட்டது. இஸ்ரேல் எனும் தனிநாடு உருவான பின்பு அந்தப் படுகொலை நிகழ்த்த காரணமாக இருந்த அனைவரையும் தேடி தேடி கொன்றது மொசாட். இந்த வேளையில் ஹீட்லரின் படைத்தளபதி அடோல்ஃப் ஏச்மென் ஜெர்மனியில் இருந்து அர்ஜெண்டினா தப்பி ஓடி மெக்கானிக் ஆகப் பதுங்கி வாழ்ந்திருந்தார். சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு இவரை மோப்பம் பிடித்த மொசாட் உளவாளிகள் அவரை அர்ஜெண்டினா அரசு அறியாதவாறு போலி பாஸ்போர்ட் கொண்டு இஸ்ரேலுக்கு நாடு கடத்தினார்கள். பின்னாளில் இஸ்ரேல் இதைப்பற்றித் தெரிவிக்கும் வரை யாரும் இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து அறிந்திருக்கவில்லை. அர்ஜெர்டினாவின் இறையாண்மையை மதியாமல் 1962 ஜீன் 1ல் அடோல்ஃப் ஏச்மென் தூக்கில் ஏற்றியது இஸ்ரேல் அரசு. மற்றொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால்... அடோல்ஃப் ஏச்மென் தான் இஸ்ரேலால் தூக்கிலிடப்பட்ட முதல் மற்றும் கடைசி நபர் ஆவார். இந்த சம்பவத்தைப் பின்னாளில் ஆப்ரேஷன் ஃபைனல் (Operation Final) எனும் திரைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார்கள் ஹாலிவுட் தயாரிப்பாளர்கள். 

ஆள் கடத்திய மொசாட் இந்தமுறை வித்தியாசமாக விமானக் கடத்தலில் ஈடுபட்டது. ஆம் ரஷ்யாவின் போர்விமானம் MIG 21ன் செயல்பாடுகள் குறித்து அறிய அமெரிக்கப் போன்ற ஆதிக்க நாடுகள் முயன்று தோற்றாலும் இஸ்ரேல் ஈராகில் இருந்து வெற்றிகரமாக 1966 ஆகஸ்ட் மாதம் MIG 21 போர் விமானத்தைக் கடத்தியது. இந்த விமானக் கடத்தல் பின்னாளில் அரபு நாடுகளுடனான போரின் போது இஸ்ரேலின் இருப்பைத் தக்க வைக்க மிகுந்த உதவியாய் இருந்ததாகச் சொல்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.   

இன்னுமொரு முக்கிய நிகழ்வோடு இந்தக் கட்டுரையை முடிக்க விழைகிறேன். 1972 ல் ஒலிம்பிக் போட்டிகள் ஜெர்மனி நாட்டின் முனிச் நகரத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக இஸ்ரேல் நாட்டு வீரர்கள் தங்கள் பரம எதிரி நாடான ஜெர்மனி செல்ல ஆயத்தமானார்கள். இதைச் சாதகமாகப் பயன்படுத்திப் பாலஸ்தீனிய விடுதலை போராட்ட அமைப்புகளில் ஒன்றான கருப்பு செப்டம்பர் (Black September) அமைப்பு இஸ்ரேல் நாட்டின் 6 பயிற்சியாளர்களையும் 5 வீரர்களையும் கடத்தி பிணயக் கைதிகளாக வைத்து இஸ்ரேல் சிறையில் இருக்கும் அப்பாவி பாலஸ்தீன மக்களை விடுவிக்கக் கோரிக்கை வைத்தது. ஆனால் அப்போதைய இஸ்ரேல் அரசு அதற்கு ஆர்வம் காட்டாததால் இரு வீரர்களைக் கொன்ற கருப்பு செப்டம்பர் அமைப்பு மீதமுள்ளவர்களை நாடுகடத்த திட்டமிட்டு முனிச் விமானத் தளம் சென்றது. ஆனால் அங்குத் தான் அவர்களுக்கு ஆபத்துக் காத்திருந்தது. அவர்களைச் சுற்றிவளைத்த ஜெர்மனி அதிரடிப்படையின் தாக்குதலால் இஸ்ரேல் வீரர்களும் 5 கருப்பு செப்டம்பர் அமைப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டு மீதம் 3 கருப்பு செப்டம்பர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இந்த ஜெர்மனி தாக்குதல் மொசாடின் திட்டம் என்றும் சொல்லப்படுகிறது. 13 இஸ்ரேலியர்கள் இறப்பை பொறுக்காத இஸ்ரேல் அரசு அதற்குப் பழிவாங்க Operation wrath of God தொடங்கி அதன் மூலம் அனைத்துக் கருப்பு செப்டம்பர் இயக்கத்தவர்களையும் கொன்று குவித்தது. சுமார் 20 வருடங்கள் நடந்த இந்தத் தாக்குதல் அனைத்துக் கருப்பு செப்டம்பர் அமைப்பினரையும் கொன்ற பிறகே அடங்கியது. "இவ்வாறு யாரையும் கொல்லும் அதிகாரமே பிற நாட்டு உளவுத்துறைகளிடமிருந்து மொசாடை தனித்துவபடுத்திக் காட்டுகிறது".

மொசாட் இந்திய அரசியலையும் ஒரு கை பார்க்காமல் விடவில்லை. இந்திய அரசியலின் முக்கியத் திருப்பமான ராஜீவ்காந்தி கொலையில் மொசாடின் பங்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதை உறுதிபடுத்தும் விதமாக அப்போது PLO(பாலஸ்தீன் விடுதலை இயக்கம்)ன் தலைவர் யாசர் அராஃபத் "ராஜீவ்க்கு எதிராகச் சதிவலை பின்னப்படுகிறது" என அப்போதைய இந்திய பிரதமர் சந்திரசேகரிடம் எச்சரித்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் விடுதலை புலிகள் இயக்கத்திற்கும் சிங்கள இராணுவத்திற்கும் ஆயுத வியாபாரத்திற்காக மொசாட் பயிற்சியளித்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் 2009ல் நடைபெற்ற மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலிலும் ஆயுத வியாபாரத்திற்காக மொசாட் பாகிஸ்தான் பிண்ணனியில் இருப்பதாக அப்போது பத்திரிக்கையாளர்கள் சந்தேகம் எழுப்பினர். 

இவ்வாறு மொசாட் அரங்கேற்றும் பல நிகழ்வுகளை அவர்களே சொன்னால் ஒழிய வெளியே தெரிய வாய்ப்புகளே இல்லை. இந்த கட்டுரையைப் படிக்கும் நீங்களோ அல்லது எழுதும் நானோ கூட மொசாட் உளவாளிகளின் பார்வையில் இருக்கலாம். அவர்கள் ஸ்லீப்பர் செல்களை விட மிகுந்த இரகசியமாகச் செயல்படுவார்கள். 2030 ல் உலகமே இஸ்ரேலுக்குக் கீழ் என்றாகும் நிலை வரும் என்று சொன்னால், அதை நம்பாமல் இருக்க முடியவில்லை. உலகின் எல்லா மூலைகளிலும் மொசாட் உளவாளிகள் நிறைந்திருப்பர் என்பது நிதர்சனமான உண்மை. இதற்கு உதாரணமாக நம் நாட்டு அரசியலின் முக்கியத் தலைவர் ஒருவரும் மொசாடின் உளவாளி என்ற வதந்திகளும் காற்றில் பரவாமல் இல்லை. சரி.. உளவுத் துறையாவது உருட்டு கட்டையாவது... நம்ம தட்டுல சாப்பாடு வந்திருச்சு. சாப்பிட்டு தூங்குவோம்!!!.....



Comments