வரலாறு வந்த கதை - 2 : எளிதான இலக்குகள்

 நீல நிற கடல்நீர் தொட்டுவிடத் துடிக்கும் அந்தக் கடற்கரையோர குகை அமைந்துள்ள இடம் கிழக்கு ஆப்பிரிக்கா. சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் முதல் மனித இனம் வாழ்ந்த இடமாக அந்த இடத்தை அடையாளப்படுத்திக் கொள்ள 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கால் தட படிமங்கள் கிடைத்து உள்ளன.

 அந்தக் காலுக்குச் சொந்தகாரர் ஒரு பெண். வரலாறு நமக்குக் காட்டும் முதல் மனித மூதாதையர் ஒரு பெண். சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண்மையை முதலில் செய்யத் தொடங்கியதும் பெண் தான். இப்படிச் சில முக்கியமான தொடக்கங்களாய் அவர்கள் இருந்த போதிலும், வெளிச்சத்தைக் கொடுக்க தீக்குச்சி நெருப்புக்கு இறையான கதையாய் பெண்கள் நாகரிக வளர்ச்சியின் தொடர்ச்சியில் சிக்குண்டு விட்டார்கள் .



இனம், மதம், சாதி எனப் படிநிலை வேறுபாட்டிற்குப் பயன்படுத்தப்படும் நஞ்சுக்கருத்துகள் இருந்தாலும் இன வேறுபாடுகள் சில நாடுகளிலும் மத வேறுபாடுகள் சில நாடுகளிலும் தான் வழக்கத்தில் உள்ளது. ஆனால், உலகில் அனைத்து நாடுகளிலும் உள்ள ஒரே படிநிலை வேறுபாடு "பாலினம்" தான்.

மதம், இனம், சாதி என அனைத்தும் பெண்களைத் தான் குறிவைத்து உருவாக்கப்பட்டு உள்ளது என்ற போதிலும் பாலினத்தைச் சுட்டிக்காட்டி பெண்கள் ஒடுக்கப்படுவது பரிணமித்துக் கொண்டே வருகிறது. பழங் கற்காலத்தில் ஆண்களுக்கான வேலை எனவும் பெண்களுக்கான வேலை எனவும் வரையறுக்கப்பட்டிருந்தாலும், ஆண்-பெண் இடையே ஏற்ற தாழ்வு கலாச்சாரம் தொடங்கியது வேளாண் புரட்சி தொடங்கிய புதியகற்காலம் தொட்டுத்தான்.

மற்ற இனக்குழுக்களிடம் இருந்து உணவு தானியங்களைக் காப்பாற்ற உடல் வலிமை முன்னிறுத்தப்பட்டது. இதைப் பயன்படுத்தி ஆண்கள் சமுதாயத்தில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றனர். வரலாறு நெடுங்கும் தொடர்ந்து நடந்த போர்கள் மேற்கூறிய காரணத்திற்காக அவர்களை மேலும் வலுவாக்கியது. கி.மு 1200 ஆம் ஆண்டை சார்ந்த சீனா கல்வெட்டு இவ்வாறு கூறுகிறது. "ஹவோவின் பேறு அதிர்ஷ்டகரமாக அமையுமா?", அதற்குப் பதிலளிக்கும் கல்வெட்டு "டிங் தினத்தில் பிறந்தால் அதிர்ஷ்டம், ஜினங் தினத்தில் பிறந்தால் பெரிதும் சுபமாக அமையும்", எனக் கூறுகிறது. அடுத்தக் கல்வெட்டு கூறுவதாவது, "மூன்று வாரம் கழித்துக் குழந்தை பிறந்தது, நல்ல நாளில் தான் பிறந்தது. ஆனால் ஹவோவிற்கு அதிர்ஷ்டம் இல்லை, பிறந்தது பெண் குழந்தை".

மேற்கூறிய கூற்றுகள் எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணும் அளவுக்குச் சில சமுதாயங்களில் பெண் என்பவள் ஆணின் (தந்தை, கணவன், சகோதரன்) சொத்தாகக் கருதப்பட்டாள். அந்தக் கருத்தின் விளைவின் உச்சமாகப் பாலியல் பலாத்காரம் என்பது அடுத்தவரின் (ஒரு ஆணின்) சொத்தை அத்துமீறி அடையும் குற்றமாக மட்டுமே கருதப்பட்டது. இதை விடக் கொடுமை யாரும் உரிமைக் கோராத பெண், பலாத்காரம் செய்யப்பட்டால் அது குற்றமாகாது.

புகழ் பெற்ற மதத்தின் புனித நூல் சொல்கிறது மணம் முடிக்கப் பெறாத ஒரு கன்னி பெண்ணை ஒரு ஆடவன் பலாத்காரம் செய்தால் அவன் அந்தப் பெண்ணின் தந்தைக்கு 50 ஷேக்ள்ஸ் கொடுத்தாக வேண்டும். அதன் பின் அந்தப் பெண் அவனின் மனைவி ஆகிவிடுவாள். இதைப் படிக்கும் போது முன்னோர் காலத்தில் நடந்த முட்டாள்தனமாகத் தெரியும். ஆனால் 2006 வரை 56 நாடுகளில் கணவன் மீது மனைவி பாலியல் வன்கொடுமை குற்றம்சாட்ட முடியாது . ஜெர்மனியில் கூட 1997 யில் தான் திருமணத்திற்கு உட்பட்ட பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்கச் சட்டரீதியான வழிவகை செய்யப்பட்டது.

இதெல்லாம் ஏதோ ஆண்கள் மட்டுமே பெண்களுக்குச் செய்த அநீதி அல்ல, இதற்குப் பெண்களும் தான் காரணம். சோழ நாட்டு கற்புக்கரசி கண்ணகி தன் கணவனை மயக்கிய மாதவி மேல் கோபம் கொள்ளாமல், தன்னைத் தவிர்த்து பிற பெண்ணை நாடி சென்ற கோவலன் மீதும் கோபம் கொள்ளாமல் அரசன் தவறாக நீதி வழங்கிவிட்டான் என மதுரை எரிந்து போகச் சாபம் விடுத்தாள். தன் கணவனையே தெய்வமாக வணங்கும் பெண், பெய் என்று சொன்னால் மழை பெய்யும் எனச் சொல்லும் திருக்குறளுக்கு ஏற்ப கற்புள்ள பெண் ஒருத்தி கூடவா மதுரையில் இல்லை. மற்றொரு பெண்ணுடன் வாழ தன்னைப் பிரிந்து வாழ்ந்த கணவனுக்காகப் பாண்டிய நாட்டுப் பெண்களைக் கலங்கபடுத்திவிட்டாள், கண்ணகி. 

இப்படிபட்ட இதிகாசங்கள் மூலம் பெண்களின் சிந்தனைகளையே தன் விருப்பம் போல் ஆண்கள் மாற்றிவிட்டனர். அதை ஈடேற்ற கண்ணகி போலக் கணவனுக்கு வக்காலத்து வாங்கிப் பெண்கள் உலகில் ஒற்றுமை இல்லாத வர்க்கமாக மாறிவிட்டனர். பெண்களைப் பிரதிநிதித்துவப்-படுத்திப் பேசும் வாய்ப்பு கிடைக்கும். பெண்கள் தங்கள் சுயலாப (அரசியல் தேவைகள், தன்னை முன்நிறுத்துதல்) தேவைகளை விட்டொழித்து, ஒரு பணக்கார வீட்டில் சொத்துக்களை அடைகாக்கும் அந்தப் பாவப்பட்ட பெண்ணுக்கும் ஒரு நீதி கேளுங்கள்.

ஏன் என்றால்?

சொத்துக்களை எண்ணி குறிவைக்க,

அது கிடைக்கும் வரை துன்புறுத்த,

சாதி செருக்கை கர்பப்பையில் அடைவைக்க,

அது தவறும் போது

உயிர் அறுக்க,

அமரக்காதல் புரிய,

அதை அவள் மறுத்தால்

அமிலத்தை எரிய,

ஊதியம் நிரம்பப் பணி செய்ய,

மனபிரழ்வினால் காம இச்சை நோக்கில் கொலை செய்ய,

அவள் தான் எளிதான இலக்கு!!!!



Comments