அன்று அவன் காலைப் பொழுதில் தன் மிதிவண்டியை மிதித்தபடியே மூச்சிறைத்து வந்தடைந்தான் தான் பயிலும் பள்ளிக்கு...
அன்றைய அவனின் உயர்நிலை கல்விக்கான வகுப்புகள் தொடங்கும் நாள். மிகச் சரியாகச் சிறிய முள் 9-ல் மற்றும் பெரிய முள் 12-ல் அடித்து நின்றது அங்குள்ள சுவர் கடிகாரத்தில்.
மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் எல்லாம் காலை வழிபாட்டிற்கு மைதானத்தில் திரண்டனர். பள்ளியின் முதல்வர் அனைவரின் முன்னிலையில் அவனையும் அவனுடைய பயில இணைந்தவர்களையும் பாராட்டி வரவேற்றார். அனைவரின் ஆழக்குரலும் இசைத்தது ஜனகனமன... முடிவுற்று ஒருவர் பின் ஒருவராய் தங்களுடைய வகுப்பறையை அடைந்தனர். அவனும் தன் வகுப்பறை அடைந்து தனக்கான மேசை ஒன்றை உரிதாக்கி அமர்ந்தான்.
வகுப்பாசிரியர் வந்ததும் வணக்கம் வைத்து அனைவரும் அமர்ந்தனர். வருகை பதிவேட்டில் பெயர்களை வாசித்தபடியே வர, அவர்களும் பதில் கூறவே, அவன் கையை உயர்த்தினான் "அருள் கணேஷ்" என்ற பெயர் ஒலித்த நொடியில்!!!
மீண்டும் ஒலித்தது ஒரு குரல்... "அப்பா" என்று அவனின் பின்பக்கமிருந்து... அவனும் ஆரவாரமில்லாமல் ஆசையாய் திரும்பி தன் குழந்தையைத் தன் கரம் கொண்டு அணைத்துக் கொண்டான் தன் தொடை அருகில்.
அந்தச் சிறுந்தளிர் கண்களில் 'என்ன'-வென்ற கேள்வி எழுவதை எண்ணி... "அம்மு" என்று அழைத்து அமர்த்திக் கொண்டான் தொடை மீது... வானிருந்து தேவதையே வரமாய் வந்ததாய் உணர்ந்த பூரிப்பு மகிழ்ச்சியில் உள்ளதை அவன் முகம் காட்டிக் கொடுக்கிறது. மீண்டும் நினைவுக்குள் நுழைகிறான், அவளைத் தட்டி அணைத்தபடியே.
அன்று முதல் நாள் வகுப்புகள் சிறப்பாக முடிந்தே ஆனந்தம் நிறைந்த இதயமாய் மீண்டும் மிதித்தபடியே மிதிவண்டி மிதமாய்ச் சுழன்றது மாலையில்... முகில் பின் வெட்கத்துடன் கதிரவன் சிவந்திருக்க....
மறுநாள் காலை அனைவரும் அமர்ந்திருக்க முதல் வகுப்பு முடிவுற்று இருந்த நிலையில் அவன் கண்களோ ஏதோ தேடி சென்றது எதார்த்தமாய்...
தென்றல் சன்னல் வழியாக வந்து அவன் முகம் கடக்க அந்நேரம் அங்கு அவன் கண்கள் நேர் மலர்ந்தது ஒரு முகம்... அவன் ஆசையாய் புன்னகைக்கப் பரிசாக அந்த முகமும் ஒரு நொடி இடைவிடாது பரிசலளித்தது புன்னகையில்....
மறுகணமே அவனும் அவளும் மொழிவழி முன்மொழிந்தார்கள் ஏதோ வருடங்கள் பல பழகியவர்களாய்.... ஆச்சரியம் அடைந்த உடன் இருந்தவர்கள் உரக்க சிரிக்க அவள் விலகிச் சென்றாள் "வருகிறேன்" என்று... அவன் கண்களும் அவள் வருவாள் மீண்டும் என்ற நம்பிக்கையில் பதிலளித்தது.
பசிபோக்கும் மணி ஒலிக்கத் தன் சாப்பாட்டை எடுத்து வேகம் கொண்டான் அவளிடம் நோக்கி.... கிடைத்ததோ ஏமாற்றம். உருக்கமாய் உண்டுவிட்டு வகுப்பறை அடைந்தால், நொடிகள் நகர்ந்தன நிமிடங்கள் ஓடின.... நான்கு மணி ஆயிற்று ஒலித்தது தூரத்தில் சத்தம் டிங்...டிங்...டிங்... என்று!!!!
அச்சமயம் தூரத்தில் அழைப்புச் சத்தம்... ட்ரிங்..ட்ரிங்...ட்ரிங்.... சட்டென மனம் விட்டுத் திரும்பினான். அங்கே மேசையில் தொலைபேசி அலறியது. தன் தொடை அமைந்திருந்த அம்முவை கீழே அமர வைத்து எழும்பினான். தொடர்ந்து ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்... என்று அலறிக் கொண்டு இருந்த ஃபோனை எடுத்தான்.
"மாமா! நான் வருவதற்கு இரவு ஆகிவிடும் அவளுக்கு உணவளித்து விடுங்கள் மறக்காமல்", என்றாள் தன் தாய் வீடு சென்று திரும்பிக் கொண்டிருந்த அவன் துணைவி.
"சரி" என்று மறுபதில் அளித்துவிட்டு "பத்திரம்" என்றான் அவளிடம் காதல் வெளிப்பாடாய்...
தொலைபேசி அதை மௌனமாக்கி திரும்பியவன் மூச்சிரைத்தான் அம்முவை நோக்கி...
மீண்டும் தன் இருப்பிடம் வந்தவன் அம்முவின் அருகில் அமர்ந்தான் தொலைதூரம் சென்ற தன் மனம் தேடி...
மீண்டும் நுழைந்தான் அவன் வகுப்பறை உள்ளே….
நான்கு மணிக்கு ஒலித்த பெல்லின் சத்தத்திற்குப் பிறகு அவன் முகம் பளிச்சென்று காணப்பட்டது. காரணம் ஏனோ??? நாளை மற்ற வகுப்புகளின் முதல் இடைக்காலத் தேர்வு நடக்கிறதாம், அதற்கு ஒத்துழைப்பாக அவனிடம் வந்தடைந்திருக்கிறது அவளது கால்கள்...
ஒரு தினப்பொழுதின் சோர்வும் அல்லாது உடன் செல்ல ஆயத்தமானான், இருவரும் புன்னகை சேர்த்து செயலாற்றினர்... ஓர் வகுப்பறை தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டு இருவரும் ஈடுபாட்டோடு வேலையைச் செய்யத் தொடங்கினர்...
அவன் கரும்பலகையைச் சுத்தம் செய்து தேர்வு எண்களைக் குறிப்பிட்டு விட்டு; எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தேர்வு எழுத ஏற்ற மேசைகளை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தான். அவள் மேசை மீது மாணவர்கள் சரியாக வரிசையாக அமர அடையாளமாய்ச் சுண்ணாம்புக் கட்டி கொண்டு அலங்கரித்தாள் தேர்வு எண்களால்...
இவற்றைச் செய்து முடிக்க மணி சரியாக 4:45 ஆயிற்று. பின் அவள் பள்ளி பேருந்தில் செல்ல அவன் அப்பேருந்து பின் தன் மிதிவண்டியில் நகர்ந்தான். அவன் செல்லும் வழியில் தான் அவள் வீடு...
பேருந்திலிருந்து இறங்கி காத்திருந்தாள்... அவன் மிதிவண்டி ஒலி கேட்க சட்டெனத் திரும்பினாள் அவனை நோக்க... மிதிவண்டியின் டயர் சாலையைத் தேய்த்து நின்றது...
அவள் தன் வீட்டை அறிமுகம் செய்து வைத்து விட்டு, "வா உள்ளே டீ குடிக்கலாம்... அப்புறம் போ", என்றுரைத்தாள்.
அவன் அவளிடம் "இல்லை... ஏற்கனவே லேட்டாயிடுச்சு நான் கிளம்புகிறேன் இன்னொரு நாள் வரேன்" என்று கூறி விட்டு கையை அசைத்து மிதிக்கத் தொடங்கினான் மிதிவண்டியை...
அவள் சிரித்த படியே "பார்த்து செல்" என்று கையசைத்தாள்...
இப்படியொரு சினேகம் பார்த்துக் கொண்ட சிறுபொழுதில் என்று எண்ணியபடி இருவரும்... அவன் மிதிவண்டியில், அவள் தன் தாய் மடியில்...!!!!
-தொடரும்...
Comments
Post a Comment