மாலை ஆறு மணிக்கு மேல் அந்த கிராமத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள். அதனாலேயே அந்த கிராமத்திற்கு ஆறு மணிப்பட்டி எனப் பெயர் வைக்கப்பட்டது.
இந்த கிராமத்தின் பெயரைக் கண்டு பலர் கேலி செய்துள்ளனர். ஆனால் நேரில் இங்கு வந்து பார்த்துவிட்டு பயந்து போனவர்கள் தான் அதிகம். உள்ளே நுழைந்ததுமே ஒரு மயான அமைதி மனதுக்குள் தொற்றிக்கொள்ளும். வழி எங்கும் இரு பக்கமும் பெரிய மரங்கள் இருக்கும். நாம் நடக்கும் போதே நம்மை விழுங்கிவிடுவது போல தோன்றும். சிறிது தூரம் கடந்தபின் எந்த மரங்களும் இல்லாமல் வரண்டு போய் பாலைவனமாக தோற்றமளிக்கும். அதன் பின் அங்கிருக்கும் வீடுகளை காண முடியும், எதுவுமே அழகாக இருக்காது. பழங்காலத்து கட்டிடமாகத் தான் இருக்கும். இடிந்து விழும் நிலைமையில் தான் இருக்கும். அந்த வீடுகளையடுத்து ஒரு பெரிய மாளிகை போன்ற வீடுடன் அந்த கிராமம் நிறைவு பெறும்.
அந்த கடைசி வீட்டிற்கு மட்டும் யாரும் செல்லக் கூடாது என்று ஒரு சட்டம் ஒன்று அந்த கிராமத்திற்கு உண்டு. அதற்காகவே பெரிய பள்ளம் ஒன்று அங்கு தோண்டப்பட்டிருக்கும். சுற்றிலும் முள்வேலிகள் இருக்கும். மீறி யாரும் அதை உள்ளே சென்றால் தண்டனை தரப்படாது. மாறாக அந்த வீட்டுக்குள்ளேயே தண்டனை காத்திருக்கும்.
கடந்த ஐம்பது வருடத்தில் முப்பது பேர் இங்கு காணாமல் போயிருக்கின்றனர். அதில் ஏழு பேர் மட்டுமே பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர். மற்றவர்கள் என்ன ஆனார்கள் என யாருக்கும் தெரியாது.
பத்திரிக்கையாளர் மூர்த்தி பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். மணி அப்போது ஆறு மணி இருபத்தைந்து நிமிடங்கள். கண்டெக்டரிடம், ”ஆறு மணிப்பட்டிக்கு ஒரு டிக்கெட்”,என்றார்.
அவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ”இந்த நேரத்துல பஸ் அங்க போவாது. அதுக்கு முன்னாடி இருக்க ஸ்டாப்ல இறக்கிவிடுறேன்”, என்றார் கண்டெக்டர்.
இது நடக்கும் என எதிர்பார்த்திருந்த மூர்த்திக்கு பெரிய அதிர்ச்சியாக அமையவில்லை.” சரி’, என சொல்லி சீட்டை வாங்கிக்கொண்டார்.
“நீங்க அந்த கிராமமா ?“
“இல்ல. நா பத்திரிக்கையில வேல பாக்குறே. ஒரு வேலையா அந்த கிராமத்துக்கு போறேன்.”
“நீங்க அந்த வீட்ட பத்தி எதுவும் ஆராய்ச்சிப் பண்ணப் போறீங்களா ?“
“ஆமா. மொதல்ல அந்த கிராமத்த பத்திதா. அதுகப்புறம் இந்த வீட்ட பத்தி. வீடு தான் மெயின் கண்டென்ட்.” இவர் சொல்லி முடித்ததும் கண்டெக்டரின் கண்கள் அகல விரிந்தது, ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியோடு மூர்த்தியை பார்த்தார்.
“உங்களுக்கு தெரியாதது ஒன்னுமில்ல. இதோட அங்க எத்தன பேரு காணாம போயிருக்காங்க தெரியுமா ?“
“தெரியும். அத பத்தி புலணாய்வு பண்ணதா நா வந்துருக்கேன்.”
“உங்கள் இஷ்டம் சார்”, என கண்டெக்டர் சொல்லிமுடிக்க, மூர்த்தி இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது.
வானம் நன்றாக இருட்டிக் கொண்டிருந்தது. ஏற்கனவே இந்த இடத்தின் பாதையை நன்கு விசாரித்து வைத்திருந்ததால் வழியை கண்டுபிடித்து செல்வது கடினமாக அமையவில்லை.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டமே இல்லை. தனது டார்ச்லைட்டை கையில் தயாராய் வைத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினார். சில நிமிடங்களில் முழுவதுமாய் இருட்டிவிட்டது. ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்துச்சென்றார். அவர் சென்ற வழியில் இருபக்கமும் முட்புதர்கள் தான் இருந்தது. அடிக்கடி ‘சரசர’ வென்ற சத்தம் கேட்டபடி இருந்தது. பாம்புகள், பூச்சிகள் என நிறைய ஒளிந்திருக்கும் இடம் அது.
நடந்து சென்ற வேளையில் திடீரென ஒரு மனிதனின் குரல் கேட்டது போல இருந்தது. சட்டென திரும்பி, ”யாரு?“ என கேட்டார். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. பின்னர் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்.
மணி ஏழு. ஆறுமணிப்பட்டியின் நுழைவாயிலை அடைந்தார். அவர் வைத்திருந்த டார்ச்சின் வெளிச்சம் அங்கிருந்த இருட்டை ஈடு செய்யமுடியாமல் தவித்தது.
தூரத்தில் இருந்த வீடுகளின் இடையே சொல்லிக் கொள்ளும்படியான வெளிச்சம் இருந்தது. அந்த கிராமத்தில் கோயில்கள் எல்லாம் இல்லை. அமைதி மட்டும் ஒவ்வொரு நொடியும் பேசியபடி இருந்தது. அதன் வார்த்தைகளில் ஒரு வேகம் தெரிந்தது. யாரும் இங்கு இருக்க வேண்டாம், ஓடிவிடுங்கள் என கூறுவது போலிருந்தது.
முதலில் இருந்த வீட்டின் கதவை தட்டி கூப்பிட்டார். பதில் எதுவும் வரவில்லை. அவர்கள் எரிந்துகொண்டிருந்த விளக்குகளை அணைத்து விட்டனர். அடுத்த வீட்டில் கதவை தட்டினார். அங்கும் அதே நிலை தான். யாரிடம் என்ன கேட்பது என தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கண்கள் அந்த மாளிகை வீட்டை பார்த்தது. ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால் இருக்கும் வெளிச்சம் அங்கு தென்பட்டது. அங்கு செல்லலாமா? வேண்டாமா? என யோசித்தார். மூளை அவருக்கும் முதலில் கொடுத்த கட்டளை, ”செல்”.
அந்த வீட்டை நோக்கி செல்லத் தொடங்கினார். இவரின் காலடி சத்தம் கேட்டு வழியில் உள்ள அத்தனை வீட்டின் விளக்குகளும் ‘அணைந்துக் கொண்டன. வீடுகள் இருக்கும் இடத்தை கடந்து வந்துவிட்டார். திரும்பிப் பார்த்தார், ஒவ்வொரு வீடாக விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கியது. மூர்த்திக்கு பெரிய மர்மமாக இருந்தது.
மூன்று நிமிடத்தில் அந்த வீட்டின் அருகே சென்றார். ஆனால் அவரால் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை. பெரிய பள்ளமும் முள்வேலிகளும் அவரை தடுத்தது. மாற்று வழி எதுவும் இருக்குமா என சுற்றி சுற்றி பார்த்தார். ஆனால் எந்த பக்கமும் வழியில்லை. வீட்டின் பின்வாசலை பார்த்த படி நின்றுக் கொண்டிருந்தார். அப்போது முதல் மாடியில் வலப்பக்க சன்னல் வழியாக ஒருவன் தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை மூர்த்தி கண்டார். அதிர்ந்து போய் மீண்டும் கண்களை விழித்துப் பார்த்தார். எந்த மாற்றமும் இல்லை. ஒருவன் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். மூர்த்திக்கு இதயம் ‘படபட‘வென்று துடிக்கத் தொடங்கியது. சுதாரித்துக் கொண்டு தனது கேமிராவை எடுத்து புகைப்படம் எடுக்கும் பொத்தானை அழுத்த முற்பட்ட நேரத்தில் அவரது தலையில் நச்சென யாரோ பலமாகத் தாக்கினர். கேமிரா கீழே விழுந்து லென்சு தனியாக கழன்று கொண்டது. சுயநினைவை இழக்கும் நொடியில் தனது கையிலிருந்த ரத்தத்தையும், சன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த அவனையும் கடைசியாகக் கண்டார்.
- தொடரும்…
Comments
Post a Comment