இளநிலை பட்டம் பெற்றபிறகு, மாணவ மாணவிகளுள் 50 சதவீதம் பேர் கோச்சிங் கிளாஸ் மற்றும் இதர வேலை வாய்ப்புகளைத் தேடிச் செல்வார்கள். மீதமுள்ள 40-50 சதவீத மாணவ மாணவிகள் மேற்படிப்புப் படிக்கச் செல்வார்கள். குறிப்பாக இளநிலை வேளாண்மை பட்டம் பெற்ற பிறகு முதுநிலை வேளாண்மை படிப்பவர்கள் பலர். இதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவ மாணவிகள் நன்கு படித்துத் தயார் ஆவார்கள். இப்படிப்பட்ட நுழைவுத் தேர்வினை பல பல்கலைக்கழகங்கள் நடத்தி வந்தாலும்..... அவற்றுள் மிகவும் முக்கியமாகக் கருதப்படுவது "பனாரசு இந்து பல்கலைக்கழகம் (BHU)". BHU நடத்தும் நுழைவுத் தேர்வினை எதிர்கொள்வதற்காகப் பல மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த ( BHU ) பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார் என்று அடுத்த வரியை படிக்கும் போது நிச்சயமாக நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் தான் "மதன்மோகன் மாளவியா". இந்தப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிக்க இவர் முயற்சி மேற்கொண்டிருந்த சமயம், எத்தனையோ சிக்கல்கள், எத்தனையோ இடர்பாடுகள். "இந்த பல்கலைக்கழகத்தை நிர்மாணித்தே தீருவது", என உறுதியோடு செயல்பட்டார், மதன்மோகன் மாளவியா.
அந்தச் சமயம் மாளவியாவுக்குப் பண நெருக்கடியும் ஏற்பட்டது. மாளவியா தளர்ந்து விடவில்லை. பிறகு ஊர் ஊராகச் சென்று பல செல்வந்தர்களையும் வணிகர்களையும் சந்தித்துப் பல்கலைக்கழகம் கட்ட நிதி திரட்டினார். அப்போது அவர் நிதி வசூல் செய்வதற்காக ஹைதராபாத் நவாப்பிடமும் சென்றார்.
"என்ன தைரியம் இருந்தால்.... இந்து பல்கலைக்கழகம் கட்டுவதற்கு என்னிடமே வந்து நிதி கேட்பாய்?" என்று கண்கள் சிவக்க உறுமிய நவாப், தான் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி மதன்மோகன் மாளவியா மீது வீசினார். பதில் பேசாமல் நவாபின் அரண்மனையை விட்டு வெளியேறிய மாளவியா, நேராகக் கடை வீதிக்கு வந்தார். நவாப் தன் மீது வீசிய செருப்பைப் பொது மக்களிடம் ஏலம் விட ஆரம்பித்தார். நவாப்பின் செருப்பு என்பதால் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொருவரும் விலை கேட்டார்கள். அதற்குள் இந்தச் செய்தி நவாப்புக்கு போக.... அவருக்குப் புதிதாக ஒரு சங்கடம் பிறந்தது.
"தன்னுடைய செருப்பு சொற்ப விலைக்கு ஏலம் போனால் அது தனக்குத்தானே கேவலம் ஆகிற்றே", என்று நினைத்தார்,நவாப். உடனே தன் சேவகன் ஒருவனிடம் பெரிய பணமூட்டை ஒன்றைக் கொடுத்து, "நீ போய் என் செருப்பைப் பெரிய தொகைக்கு ஏலம் எடு", என்று அனுப்பினார். இப்படி நவாபின் ஒற்றைச் செருப்பை அவருடைய சேவகன் மூலம் ஒரு பெரிய தொகைக்கு நவாப்புக்கே ஏலத்தில் விற்பனை செய்தார் மாளவியா. அந்த பணத்தைப் பனாரசு இந்து பல்கலைக்கழகம் கட்ட பயன்படுத்திக் கொண்டார். ஒரு கொள்கையுடனும் குறிக்கோளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும், எனது அன்பிற்குரிய வாசகர் பெருமக்களுக்கு... இந்த நிகழ்வின் மூலம் நான் சொல்ல விரும்புவது, இதுதான்.
ஒருவனை முன்னேறவிடாமல் தடுப்பது எது தெரியுமா...? அவனுடைய திறமையின்மையோ தகுதிக் குறைவோ கூட அல்ல; "இனி தனக்கு வாய்ப்பே இல்லை, விடிவு காலமே இல்லை", என்று ஒருவர் ஒரு முடிவுக்கு வருவதுதான்.
"OPPORTUNITY IS NOWHERE", என்று சோர்ந்து போக வேண்டாம்.
"OPPORTUNITY IS NOW HERE", என்று அதைச் சரியாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்லுங்கள்...!
இதை வாசித்த பிறகு உங்களின் அழகிய முகத்தில் தெரியும் அழகிய முகமலர்ச்சியை, என் எழுதுகோல் எனக்கு உணர்த்திவிட்டது!!!...
- ச.ஃபிசா
Arumai 🥳
ReplyDelete