விண்வெளியில் ஆராய்ச்சிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் விண்வெளியில் குப்பைகள் தொடர்ந்து குவிக்கப்படுவதாலும் நாம் எல்லோரும் சர்வதேச ரீதியாக இணைந்து இந்த விஷயத்தில் பொறுப்பாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். இதேநேரம் சீன நாட்டின் ராக்கெட் பூமியை நோக்கித் திரும்பும் போது விண்வெளியில் பழுதடைந்து போய் இருந்தது. இதுவரை மௌனம் சாதித்த சீன ஊடகங்கள் மே 7-ஆம் தேதி தமது லோக் மார்ச் -5பி (Long March 5-B) ராக்கெட் பழுதடைந்து இருப்பதாகவும் இது வழக்கமாக நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு என்றும் ஊடகப் பேச்சாளரான வாங் வின்பின் குறிப்பிட்டதாகத் தெரிவித்திருந்தன. அமெரிக்கா இதைச் சுட்டிக்காட்டும் வரை சீன நாட்டு ஊடகங்கள் மௌனம் சாதித்து இருந்தன.
இதன் மூலம் விண்வெளியில் குவிக்கப்படும் செயற்கைக் கழிவுகள் இனிவரும் காலங்களில் பூமியின் சுற்றுச்சூழல் பாதிப்படைவதற்கு முக்கியக் காரணமாக அமையலாம் என நம்மை நம்ப வைக்கின்றது. இயற்கை மாற்றங்கள் காரணமாக ஏற்கனவே எண்ணற்ற விண்கற்கள் விண்வெளியில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு அழகான பூங்காவில் உணவு பொட்டலங்களை நாம் அனைவரும் உபயோகித்து விட்டு அவற்றை அப்புறப்படுத்தாமல் சென்று விட்டால் எப்படிக் காட்சி அளிக்குமோ.... அதே சூழல் இப்பொழுது விண்வெளியில் நாம் பார்க்க முடியும். காரணம் சீன நாடு போன்ற ஒவ்வொரு நாடுகளும் இனிவரும் காலங்களில் தமக்கான விண்வெளி நிலையங்களை (Space Station) தனித்தனியாக விண்வெளியில் அமைக்கப் போகின்றன. தமக்கான விண்கலங்களை அதிகளவில் உபயோகிக்கப் போகின்றன. வேற்றுக் கிரகங்களுக்குப் பயணிக்கும்போது இந்த விண்வெளி நிலையங்கள் தங்கிச் செல்லும் இடமாகவும் இருக்கப்போகின்றன. அப்படியான காலத்தில் சில பொது விதிமுறைகள் எல்லா நாடுகளும் கவனத்தில் கொள்ளாவிட்டால் வெகு விரைவில் விண்வெளி குப்பைகள் நிறைந்த இடமாக மாறிவிட வாய்ப்புண்டு. குப்பைகளை அகற்றுவது என்பது எந்த நாட்டிற்கும் இலகுவான காரியமல்ல.
சீன நாடு தனக்கான சொந்தமாக ஒரு விண்வெளி நிலையத்தை விண்வெளியில் நிறுவ ஆரம்பித்துவிட்டது. அதற்கு முதற்கட்டமாக அதற்குத் தேவையான பொருட்களைக் கொண்டு செல்வதற்கு என ராக்கெட்டை லோங் மார்ச் -5பி (Long March 5-B) விண்வெளிக்கு அனுப்பி இருந்தது. சென்ற ஏப்ரல் மாதம் அனுப்பப்பட்ட சீனாவின் ராக்கெட் லோக் மார்ச் -5பி (Long March 5-B) பூமியை நோக்கி திரும்பி வரும்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாகச் செயலிழந்து போனது.
அதனால், தரைக்கட்டுப்பாட்டை மீறி உடைந்து போயிருந்தது. சிறிய பாகங்கள் ஈர்ப்பு விசை காரணமாகப் பூமியை நோக்கி வரும் போது எரிந்து போனாலும் முக்கியமான பகுதிகளான டேங்க் மற்றும் த்ரஸ்டர்கள் (Tanks and Thrusters) பூமியை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருந்ததை அமெரிக்காவின் விண்வெளி நிலையம் ஒன்று சுட்டிக்காட்டியிருந்தது. தரையில் வந்து விழுந்தால் அதனால் பாதிப்பு ஏற்படும் என்பதையும் குறிப்பிட்டு இருந்தது. பூமியில் கடற்பரப்பு அதிகமாக இருப்பதால் அநேகமாகக் கடலில்தான் விழும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அந்த 18 டன் எடை கொண்ட ராக்கெட் பூமியின் கவர்ச்சிக்குள் வந்ததால், பூமியை நோக்கி இழுக்கப்பட்டது, இல்லாவிட்டால் அது விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்க வேண்டி வந்திருக்கும்.
விளைவுகள்:
இப்படியான செயற்கை குப்பைகள் கட்டுப்பாடற்று விண்வெளியில் குவிந்தால் பூமியில் எதிர்மாறான
பருவநிலை மாற்றங்கள் அடையலாம். மேலும், இவை புவி ஈர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு நிலப்பரப்பில் விழுந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடந்த காலத்தில் நடந்த விண்வெளி சம்பந்தமான சில முக்கியச் சம்பவங்கள்:
சென்ற மே மாதம் 8ஆம் தேதி சீனாவின் லோங் மார்ச் 5 பி (Long March 5-B) ராக்கெட்டின் 30 மீட்டர் நீளமும் 5 மீட்டர் அகலமும் கொண்டவை. அவை செயலிழந்த நிலையில் புவியீர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு இந்திய பெருங்கடலில் மாலத்தீவுக்கு அருகே விழுந்ததாகச் சீனா அறிவித்தது. ஏற்கனவே விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் போலச் சீனா தனக்காக ஒரு விண்வெளி நிலையத்தை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கொண்டு சென்ற ராக்கெட் லோங் மார்ச் 5 பி (Long March 5-B) தான் திரும்பி வரும்போது எந்திர கோளாறு காரணமாக உடைந்து போயிருந்தது. 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியை சுற்றிக்கொண்டு வினாடிக்கு 7.8 கிலோ மீட்டர் வேகத்தில் தரையை நோக்கி வந்த லோங் மார்ச் 5 பி (Long March 5-B)ராக்கெட் இந்திய பெருங்கடலில் விழுந்தது.
மேல் நாட்டு ஊடகங்கள் இதைப் பெரிய விஷயமாக எடுத்தாலும் சீனா இதைப் பெரிதுபடுத்துவதில்லை. இது ஒரு தவிர்க்க முடியாத எதிர்பாராத நிகழ்வு என்பதைச் சீனா சுட்டிக்காட்டியது. அமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 (Space X Falcon) திரும்பி பூமியின் ஈர்ப்புக்குள் வந்ததையும் சில ஊடகங்கள் சுட்டிக் காட்டின. இது போன்ற சில நிகழ்வுகள் ஏற்கனவே நடைபெற்று இருக்கின்றன என்பதனையும் சீன ஊடகங்கள் தெளிவுபடுத்தி இருந்தன. எனவே, சீனாவைச் சுட்டிக்காட்டிய சில ஊடகங்கள் மௌனம் சாதிக்க வேண்டி இருந்தது. "முன்பும் இது போல அமெரிக்காவின் ஸ்கைலாப் (skylab), சோவியத் யூனியனின் சல்யூட்(Salyut 7), மற்றும் மிர் விண்வெளி நிலையம் போன்ற மிகப்பெரிய விண்கலங்களும் கட்டுப்பாடு நிலையில் பூமியில் வந்து விழுந்தன", என்பதை சீன ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
"தொடக்கக் காலங்களில் சோவியத் யூனியனும் அமெரிக்காவும் தான் விண்வெளி போட்டியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எல்லாம் பெரிது படுத்தாத விடயத்தை இப்போது ஏன் பெரிதுபடுத்துகிறார்கள்", என்று சீனா கேள்வி எழுப்பியிருந்தது. விண்வெளி ஆய்வில் முன்னோடியாக இருந்த ரஷ்யா விண்வெளிப் போட்டிகள் தற்காலிகமாக ஒதுங்கி இருப்பதால் தற்போது அமெரிக்காவும் சீனாவும் விண்வெளி போட்டிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவுக்குப் போட்டியாகச் சீனா செவ்வாய் கிரகத்திலும் தனது ரோபோவை பாதுகாப்பாகத் தரையிறக்கி இருக்கின்றது.
சுமார் 42 வருடங்களுக்கு முன் அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையமான ஸ்கைலாப் (Skylab) 1979 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பூமியை நோக்கி வந்தது ஆஸ்திரேலியாவுக்கு அருகே இந்திய பெருங்கடலில் விழுந்தது. இது 82 அடி நீளமும் 56 அடி அகலம் 66 அடி உயரம் கொண்டது. பூமியிலிருந்து சுமார் 270 மைல் தூரத்தில் விண்வெளியில் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஸ்கைலாப் 93 நிமிடங்களுக்கு ஒருமுறை விண்வெளியில் பூமியைச் சுற்றி வந்தது. விண்வெளி ஆய்வுக்கு மிகவும் உதவியாக இருந்த ஸ்கைலாப் எந்திர கோளாறு காரணமாகச் செயலிழந்து விண்வெளியில் கைவிடப்பட்டது. அவற்றை உடனடியாக வேகமாகச் சரிசெய்ய அப்போது அமெரிக்காவிடம் போதிய வசதி இல்லாமல் இருந்தது. புவியீர்ப்பு விசையால் இழுக்கப்பட்டுப் பூமியில் வந்து விழுந்தது. சில பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்திலும் அலபாமாவில் உள்ள காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கைலாப் போலவே சோவியத் யூனியனில் சல்யூட்-7 பழுதடைந்ததால் புவியீர்ப்பின் விசையால் இழுக்கப்பட்டுத் தரையில் விழுந்தது. 1971ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சல்யூட்-7 (Salyut 7) முதலாவது விண்வெளி நிலையம் என்ற பெயர் பெற்றது. இந்த வரிசையில் 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விண்வெளி நிலையமான சல்யூட் 7 விண்வெளியில் இயங்கத் தொடங்கியது. 16 மீட்டர் நீளமும் 4.15 மீட்டர் அகலமும் கொண்டது. 19.21 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றி வந்தது சுமார் ஆறு வருடங்கள் விண்வெளியில் பயன்பாட்டில் இருந்தது. இவை மிகவும் உபயோகமாக இருந்தது என்று கூறுகிறார்கள் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள். தொழில்நுட்பக் கோளாறு காரணங்களால் செயலிழந்து கைவிடப்பட்டது. அவை பழுதடைந்த நிலையில் புவியீர்ப்பு விசையால் இழுக்கப்பட்டுப் பசுபிக் பெருங்கடலில் விழுந்தது. அதன் சில பாகங்கள் அர்ஜென்டினாவில் கண்டெடுக்கப்பட்டன. இந்த விண்வெளி நிலையத்தைக் கருப்பொருளாக வைத்து ஆங்கிலப் படம் ஒன்றும் 2017ஆம் ஆண்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக ரஷ்யாவின் மிர் விண்வெளி நிலையம் 1986ஆம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி விண்வெளியில் இயங்க தொடங்கியது. 15 வருட சேவை இன் பின் செயலிழந்த நிலையில் கைவிடப்பட்டது. 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி புவியீர்ப்பில் அகப்பட்டுப் பசுபிக் பெருங்கடலில் விழுந்தது. சுமார் 250 மைல் உயரத்தில் விண்வெளியில் 17,885 மைல்கள் வேகத்தில் 91.9 நிமிடத்திற்கு ஒருமுறை பூமியைச் சுற்றி வந்தது. இது 62 அடி நீளமும் 100 அடி அகலமும் 90 அடி உயரமும் கொண்டது. 1995ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா விண்கலங்களும் இந்த ரஷ்ய விண்வெளி நிலையத்துடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினர். 1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொருட்களைக் கொண்டு சென்ற விண்கலம் ஒன்று மோதியதால் எந்திர கோளாறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலை:
இதுபோன்ற செயல் இழந்த விண்கலங்கள் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை விண்வெளியில் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த அளவு 10 சென்டிமீட்டர் ஐ விடப் பெரியதாக உள்ள சுமார் 34 ஆயிரம் துண்டுகளும் இதேபோல் விண்வெளியில் கொட்டிக்கிடக்கின்றன. சுமார் 5 லட்சம் சிறிய செயற்கை கழிவுகளும் விண்வெளியில் கிடக்கின்றன. சுமார் 8000 மெட்ரிக் டன் எடையுள்ள சிறிய உலோக துண்டுகளும் காணப்படுகின்றன. இவை அனைத்தும் சுமார் 1200 மைல்களுக்கு மேல் விண்வெளியில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் புவியீர்ப்பு விசையால் இழுக்கப்படும் பொழுது ஒரு துப்பாக்கி குண்டு விட 5 மடங்கு வேகமாகப் பூமியை தாக்க கூடிய சக்தி உடையவை. இந்தக் குப்பைகளை (Space Junk/Space Debris) எனவும் ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இந்த விண்வெளி குப்பைகள் விண்வெளி போக்குவரத்திற்கு மட்டுமல்ல, புவியின் சுற்றுச் சூழலுக்குப் பாதுகாப்பானது அல்ல என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்று. 1970ஆம் ஆண்டுகளிலிருந்து மனிதனால் அனுப்பப்பட்ட குப்பைகள் பூமியில் வந்து விழத் தொடங்கி இருக்கின்றன. இவை மக்கள் வாழும் இடங்களின் மேல் விழுந்தால் உயிர் சேதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பலவித நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை இவை வழிவகுக்கலாம். ரஷ்யாவில் நிலபரப்பில் விழுந்தபோது பல மைல் தூரத்திற்குக் கதிர்வீச்சினால் பாதிப்படைந்தது. அதனால் அவர்கள் ஆறு கோடி மில்லியன் டாலருக்கு மேல் அதைத் துப்புரவு செய்யச் செலவு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் விண்வெளி குப்பைகளால் அதிகம் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. அடுத்தத் தலைமுறையினருக்கு இதனால் பாதிப்புகள் ஏற்படலாம்.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து விண்வெளியில் செயலிழந்த பொருட்களை, செயலிழந்த பாகங்களை விரைவில் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள முனைய வேண்டும்.
- அன்வர் சதாத்
Nalla irundhuchu 🙌
ReplyDelete