அவர் அவள் அவன் - சிறுகதை

      ட்டில் போட்ட சோறு காய்ந்துபோய்விடும் அளவிற்கு ஃபேன் சுற்றிக்கொண்டிருந்தது. ஆனால் அந்த ஃபேன் அவ்வளவு வேகமாகச் சுற்றவில்லை.அங்கு நிலவிய அமைதி அப்படி ஒரு பிம்பத்தைக் கொடுத்திருந்தது. பல நாட்களாக இதே கதையாகத் தான் இருந்தது. இன்று கொஞ்சம் அதிகம் எனலாம்.
"சாப்டுங்களேன். எவளோ நேரோ இப்டியே வச்சுட்டு இருப்பீங்க?" 
அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. கண்களாலேயே பேசுவது என்பார்களே, அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் அவரது பார்வை இருந்தது. அந்த பார்வையில் எதையோ இழக்கப்போகிறோம் என்ற பயம் வெட்டவெளிச்சமாய்த் தெரிந்தது. வேறு யாரையும் அல்ல. அவர் முன் அமர்ந்திருந்த அவளையும், வெறுத்தே போயிருந்தாலும், பெற்ற மகன் என்பதால் அவனையும் தான். கண்ணீர் விட்டு அழவேண்டும் என யோசித்தாலும், அழுகையும் வருவதில்லை. எல்லாம் முடிந்துவிட்டது என நினைத்துக்கொண்டு, ஏதாவது ஒரு அற்புதம் நிகழ்ந்துவிடாதா என்ற ஏக்கம் கண்ணில் தெரிந்தது. வாயடைத்து வார்த்தைகளைத் தேடாமலும் உட்கார்ந்திருந்தார்.
 
"என்னங்க... "
 
"..."
 
"இப்படியே அமைதியா இருந்தா என்னங்க அர்த்தம்",என அவர் வாயிலிருந்து வார்த்தைகளை வாங்கிச் சேகரிக்க வேண்டும் என ஏங்கிக்கொண்டிருந்தாள் அவள். ஆனால் அதைக் கொடுப்பதில் துளி அளவும் உற்சாகம் இல்லாமல் துவண்டு போய்கிடந்தார் அவர்.
 
"உங்கள கல்யாணம் கட்டுன நாள்ல இருந்து இன்னிக்கி வர. இப்படி உட்கார்ந்து பார்த்ததே இல்லங்க", என மீண்டும் மீண்டும் அவரைத் துருவிக்கொண்டே இருந்தாள்.
 
"..."
 
"எதாச்சுப் பேசுங்களே ! "
 
  அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த அவரின் உடலில் சட்டென ஏதோ ஒரு உணர்ச்சி! கோபமா ? இல்லை விரக்தியா? எனச் சரியாகத் தெரியவில்லை. மூளை கொடுத்த உத்தரவின்படி, காலுக்கு அருகில் இருந்த தட்டை எடுத்து ஒரு வீசு வீசினார். சுவரில் பட்டுத்தெரித்துச் சோற்றுப் பருக்கைகள் அறையில் ஆங்காங்கே சிதறிக்கடந்தன. அவள் முகத்திலும் சில பருக்கைகள்.
 
  அடுத்த நொடி நீண்ட நேரம் கழித்து வாயைத் திறந்தார்.
"நாளக்கி சாயங்காலோ சாவப் போறே ! இப்ப இந்தச் சோத்த திங்கிறது தா ஒனக்கு முக்கியமா ? "
 
  அவள் எதுவும் பேசாமல் அமைதியாய் அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளும் கண்களில் தான் பேசினாள். ஆனால் இவரால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அமைதியாய் அங்கிருந்து எழுந்து சுத்தம் செய்யத் தொடங்கினாள்.
 
"நா ஒருத்தன் இங்க கத்திட்டு இருக்கேனே கேக்குதா ? "
 
மீண்டும் ஒரு பார்வைப் பார்த்தாள். அதுவும் என்னவென்று புரியவில்லை.ஆனால் அந்தப் பார்வையைப் பார்த்தபின் மீண்டும் அவளைச் சீண்டாமல் இருக்கவேண்டும் என்று தோன்றியது.ஆனால் அது எப்படித் தோன்றியது என விளங்கவில்லை.பார்வை அப்படி அல்லவா !
 
கதவை தட்டும் சத்தம் கேட்டது.இருவரும் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
 
"அவனா தான் இருப்பான்.போயி தொற",என்றார் அவர்.
 
"கதவு தொறந்து தா இருக்கு.வா உள்ள",என அவர்களின் மகனிடம் கூறினாள்.
 
பூமியில் கால் சரியாகப் பதியாமல். அங்குமிங்கும் தள்ளாடியபடி, ஒற்றைக்கால் செருப்புடன், உடலில் கீழே விழுந்து அடிப்பட்ட தழும்புகள். காசு வைக்கும் அளவிற்கு வசதியில்லாததாலோ என்னவோ, பாக்கெட்டே இல்லாத அழுக்குச்சட்டை. கால்கள் தள்ளாடிய விளைவாய் தொப்பென்று கீழே விழுந்தான். மது உண்ட நாற்றம் மூக்கை மூடச் சொல்லி அறிவுறுத்தியது. குடியினால் கெட்டு வாழ்வை சீரழித்த பட்டியலில் இவன் இடம்பெற்று பல வருடங்கள் ஆகிவிட்டது.
 
"இவன் ஒரு தனி உலகத்துல வாழுறான் டி. கடைசியா ஒருவாட்டியாச்சு இவன நல்லா இருக்குறத பாத்துட்டு உசுர விட்டுரணும். கடவுளே! இதலாம் நடக்காதா ? ",என்றார் அவர்.
 
  புரியாத மொழியில் யாருக்கோ தன் வார்த்தைகளை அனுப்புகிறேன் என்ற நினைப்பில் தன் நிலை அறியாமல் உளறிக்கொண்டிருந்தான்.அ ந்த அறையை முழுவதுமாகச் சுத்தம் செய்திருந்தாள். அவர் அருகில் அமர்ந்து,
"கண்டத யோசிக்காம இத சாப்டுட்டு போயி படுங்க. நாளக்கி ஆப்ரேஷன் சாயங்காலம் நடக்கும். உங்களுக்கு ஒன்னு ஆவாது",என ஒரு ஆரஞ்சு பழத்தை அவரின் கையில் பதித்தாள்.
 
"உரிச்சி தரட்டா ? ",என அவள் கேட்டுக்கொண்டே உரித்துச் சுலைகளை அவருக்கு ஊட்டத் தொடங்கினாள். அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. தூரல் இல்லாமல் சில நேரம் திடீரென மழை பொழியும், அது போலக் கண்கள் வழியாய் மழையைப் பொழியத் தொடங்கினார். அவர் கண்ணீரை தன் சேலையை வைத்து தாங்கிக் கொண்டிருந்தாள் மறுபுறம் அவள். அவளுக்கும் கண்ணீர் வந்தது தான்.ஆனால் அதை எதிர்காலத்துக்குத் தேவைப்படுமோ என்று நினைத்து சேமித்துவைத்திருந்தாள் போல. அழவில்லை !
 
  மீண்டும் அவருக்கு வலி வந்துவிட்டது. வயிற்றைப் பிடித்துக்கொண்டு கீழே சாய்ந்தார். வாய் வழியே கதறல்களை வெளியனுப்பாமல் அடக்கிக்கொண்டார். மிகவும் மோசமாகச் சிரமப்பட்டார். அவரை தோள்பிடித்து எழுப்பிப் படுக்கையறைக்கு அவள் அழைத்துச்சென்றார். அவர் துன்பப்பட்ட நேரம் அவன் அந்தப்பக்கம் சிரித்துக்கொண்டிருந்தான். மது செய்த மாயம் என்றாலும், அதை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மனதுக்குள் பயங்கரமாக உறுத்தியது.
 
கொஞ்ச நேரம் கழித்து ஆசுவாசமாகி வலி நின்றது. "நாளக்கி பணம் எப்படி ரெடி பண்றது. இப்ப வர ஒரு லட்சம் தான் இருக்கு. இன்னும் மூனு லட்சம் வேணுமே ! "
 
"நா ஒரு எடத்துல சொல்லியிருக்கேன். நாளக்கி எப்படியும் கிடைச்சிரும்", என அவள் சொல்லிக்கொண்டிருந்த போதே அவர் வாயின் ஓரமாய்க் குருதி வழியத் தொடங்கியது. வள் அருகே வைத்திருந்த கைக்குட்டையை எடுத்துத் துடைக்கத் தொடங்கினாள்.அ ந்த இரவு அந்தக் குருதி படிந்த கைக்குட்டையோடு முடிந்தது.
 
மறுநாள் அவர் கண்விழித்தபோது சன்னல் வழியே சூரியக் கதிர்கள் அவர் மேல் மோதிக்கொண்டிருந்தது. அவள் எங்கே எனத் தேடினார். தூரத்தில் அவள் நின்றுகொண்டிருந்தாள்.
 
"என்னங்க. கிளம்புங்க. உங்கள ஹாஸ்பிட்டல்ல விட்டுட்டு நா போய்ப் பணத்த வாங்கிட்டு வரே"
 
"அவளோ பணம் யாரு தரேனு சொன்னது? "
 
"அதலாம் எதுக்குங்க கேட்டுட்டு இருக்கீங்க   சரி என்று எழுந்து குளித்துவிட்டு இருவரும் கிளம்பினர். வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டு அந்த வீட்டை கடைசியாய்ப் பார்ப்பது போல அவளின் கையோடு அவர் கைகோர்த்து ஒரு பார்வையிட்டார்.
  இவள் சிரித்துக்கொண்டே ,"வாங்க போலாம் ",என்றாள்.
 
  மருத்துவமனையை வந்தடைந்தனர். இவரின் விவரங்களை எல்லாம் சரியாகக் கூறிவட்டு அவரை அமரவைத்துவிட்டுச் சென்றாள். அவரை அவள் ஒரு பார்வை பார்த்தாள். இந்த முறை அவருக்குக் கொஞ்சம் புரிந்தது. அந்த பார்வையின் அர்த்தங்கள் அவருக்கு மெல்ல விளங்கியது. இதுவாக இருக்கவும் வாய்ப்பு இருக்கலாம் என்ற அச்சம் தொற்றிக்கொண்டது. அதுவாக இருந்துவிடக்கூடாது என்று மட்டும் மௌனமாய் வேண்டிக்கொண்டார்.
 
  இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆனது.ஆ னால் அவளை இன்னும் காணவில்லை. இவருக்குச் சில சிகிச்சைகளை அரைமணிநேரமாகக் கொடுக்கத் தொடங்கியிருந்தனர். டாக்டர் உள்ளே வந்து ஆப்ரேஷனை தொடங்கலாம் என்றும், தைரியமாக இருக்கச் சொல்லி தெம்பூட்டினார்.
 
"டாக்டர்! "
 
"சொல்லுங்க "
 
"நா இன்னும் பில் பே பண்ணலயே. எப்படி ஆரம்பிக்கிறீங்க"
 
"இல்லயே.நீங்க பணம் கட்டியாச்சே. உங்க வைஃப் தான் பே பண்ணிருக்காங்க"
 
"அப்படியா ? நா கொஞ்சம் வெளிய போகலாமா ? "
 
"நோ. ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கு. எழுந்திருக்கக் கூடாது"
 
  என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார். அவரை அமைதியாய் இருக்கச் சொல்லி படுக்கவைத்து மயக்க நிலைக்குத் தள்ளினர். கண்கள் மயக்கத்தில் மூடிக்கொண்டு நினைவுகளுக்கு ஒரு திரை போட்டுப் படம் காட்டியது. முப்பது வருடங்களுக்கு முன்னர் முதல் முதலாய் அவளை நேரில் கண்டு ஒரு க்ரீட்டிங் அட்டையைக் கொடுத்து "ஐ லவ் யூ ", என்று சொன்ன காட்சி இயற்கை மாறாமல் ஓடிக்கொண்டிருந்தது. சுயநினைவை இழக்கும் கடைசி நொடிவரை அவள் அதைச் செய்திருக்கக்கூடாது என்று மட்டும் வேண்டிக்கொண்டிருந்தார்.
  கண்விழித்தார்!
  முதலில் மங்கலாகத் தெரிந்தது. அவள் தான் அமர்ந்திருக்கிறாள் என்று தெரிந்தது. பின் மெல்ல மெல்ல தெளிவாகத் தெரிந்தது. அவள் அருகே அமைதியாய் அமர்ந்திருந்தாள். வயிற்றில் தையல் போட்டுக் கட்டுப்போடப்பட்டிருந்தது தெரிந்தது. இவர் நினைத்தது தான் நடந்திருக்கும் என எண்ணி மிகவும் வறுத்தப்பட்டார்.
 
"எங்க போயிருந்த ? "
 
"எங்கயும் இல்ல. உங்க கூடத் தான் இருக்கேன்"
 
"இப்போ நேரம் என்ன ? "
"உங்களுக்கு நேத்து ஆப்ரேஷன் நடந்துச்சு. இன்னிக்கி காலையில தான் கண்ணு முழிக்கிறீங்க"
 
"வயித்துல என்ன தையல் ? ",என்ன கண்கள் கலங்கியபடியே கேட்டார்.
 
"நேத்து நா ஒரு எடத்துக்குப் போயிருந்தேன். இதான் அந்த எடம் என்று ஒரு சீட்டை காட்டினாள். அதில் இவளின் அத்தனை விவரங்களும் போடப்பட்டிருந்தது. அவளின் கிட்னி தானம் பற்றிய விவரம் அது. கண்கள் கலங்கிப்போய் அழுதுகொண்டே…
 
"ஏண்டி என்கிட்ட ஒருவார்த்த கூடச் சொல்லாம இப்படி ஒரு காரியம் பண்ணிட்ட ? "
 
"உங்களுக்காக இத கூடச் செய்யமாட்டேனா னு தா முடிவெடுத்துப்போனேன். ஆனா நடந்த விசயம் எல்லாம் வேற"
 
"என்னாச்சு ? "
 
"பதினஞ்சு வருஷம் முன்னாடி ஒரு காதல் ஜோடிய காப்பாத்தி நம்ம வீட்லயே வச்சிருந்து கல்யாணம் செஞ்சு வச்சோம்ல "
 
"ஆமா "
 
"அந்தப் பையன் தா எனக்கு ஆப்ரேஷன் செய்ய வந்தாரு"
 
"அப்புறம் என்னாச்சு ? "
 
"எவளோ பணம் வேணும்னு கேட்டு அவரே கொடுத்துட்டாரு. இத எங்களால திரும்பக் கொடுக்க முடியாது வேண்டாம்னு தா சொன்னே. திரும்பலாம் கொடுக்க வேண்டாம்னு சொல்லிக் குடுத்தாரு "
 
"எவளோ நல்ல மனசு பாத்தியா. என்னிக்கோ செஞ்ச புண்ணியம் எப்படி வந்து காப்பாத்துதுனு. இந்த பணத்த எப்படியாச்சு திரும்பிக் குடுத்திரனும். சரி, நீ ஏ அப்புறோ தையல் போட்ருக்க?"
 
"பணத்த வாங்கிட்டு திரும்பி வந்துட்டு இருந்தப்ப ஒரு விபத்து. உடம்பெல்லாம் சிராய்ச்சி விட்ருச்சி. வயித்துல தான் தையல் போடுற மாதிரி ஆகிருச்சு ! "
 
"பணத்த யாரு கட்டுனது ? "
 
"நம்ம மவன் தான். உங்கள வந்து பார்க்கனும் னு தான் இருந்தான். ஆனா அதுக்குள்ள எனக்கு இரத்தம் தேவப்பட்டு அவன கூப்பிட்டுருக்காங்க. ஆனா அவன் குடிக்கிறது னால அவன் இரத்தத்த எடுத்துக்க முடியாதுனு சொல்டாங்க"
 
"எப்படி எடுக்க முடியூ ? பூரா நேரமும் குடிச்சிட்டு இருந்தா ? "
 
"இனி நா குடிய கொஞ்சம் கொஞ்சமா விட்டுடுறே பா ", கதவை திறந்து வந்து கூறினான்.அவனது பார்வையில் ஒரு அர்த்தம் புதிதாய் தெரிந்தது. அவர் அருகே அமர்ந்துகொண்டு,
 
"சாரி பா ",என்றான்.
 
பரவாயில்லை என்பது போல ஒரு பார்வை பார்த்தார். எங்கிருந்தோ படர்ந்து வந்து நிம்மதி என்பது மனம் முழுவதும் படர்ந்து கொண்டது போல உணர்ந்தார்.
  மூவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.ஒவ்வொருவருக்கும் ஒருவகைக் காரணம். குடியைவிட்டு இனி வாழ எடுத்த முடிவு - இவனுக்கு. அவர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் என்ற நிறைவு -இவளுக்கு. அவர் நினைத்தது அவளுக்கு நடக்காதது - இவருக்கு.
  அவர் சிந்திய கண்ணீரை அந்தக் குருதி படிந்திருந்த கைக்குட்டையால் துடைந்தாள். ஆனால் அதில் ஒரு மாற்றம். அந்த குருதி சுத்தம் செய்யப்பட்டு இப்போது பளிச்சென்று இருந்தது. இப்போது கண்ணீரின் நிறமற்ற திரவத்தில் குளித்தவாறு இருக்கிறது.
 
  அவரும்,அவளும்,அவனும் நலம்!
 
- ராட்சசன்
(ர.ஹரிஷ்குமார்)
 

Comments

Post a Comment