நல்லா இருந்த ஊரும் நாலு மக்கள் நலத் திட்டமும்

சமீபத்திய நான்கு மக்கள் நலத் திட்டங்களும், அது சார்ந்து எழுப்பிக் கொண்டிருக்கும் கிளை பிரச்சனைகளும் தான் லட்சத்தீவு பற்றி நான் இங்கு எழுதக் காரணமும், அதை நீங்கள் படிக்கக் காரணமும். இதற்கு முழு முதல் காரணம் டிசம்பர் மாதம் லட்சத்தீவின் நிர்வாகியாகப் பொறுப்பேற்ற ஸ்ரீ பிரஃபுல் கோடா பட்டேல். இவர் தான் லட்சத்தீவை மாலத்தீவாக மாற்றுவேன் என்ற முனைப்புடன் வந்திருக்கிறார். சிறப்புத் தகவல் என்னவென்றால், பிரஃபுல் அவர்கள் குஜராத் மாநிலத்தில் நமது ஸ்ரீ மோடி அவர்களின் ஆட்சியில் துணை உள்துறை அமைச்சராகப் பொறுப்பாற்றியிருக்கிறார்.

லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திற்கு டெல்லி மாதிரியோ, புதுச்சேரி மாதிரியோ அந்த ஊர் மக்களால் தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் தலைமை வகிக்க இயலாது, மத்திய அரசு நேரடியாக நிர்வாகியை நியமிக்கும். அப்படி நியமிக்கப்பட்டவர் தான் பிரஃபுல் அவர்கள்.


லட்சத்தீவில் 2019 - UIDAI கணக்கெடுப்புப் படி 73,183 பேர் வசிக்கிறார்கள், அதில் 96% இஸ்லாமியர்கள். அவர்களில் 95% பழங்குடியினர் (இஸ்லாமியராக மாறிய பழங்குடிகள்). 32 சதுர கிலோமீட்டர் அளவில் 36 தீவுகள் அடங்கியிருக்கிறது. மீன் பிடித்தல், தென்னை தான் முக்கியத் தொழில்கள், விவசாயம் செய்வதற்கு நிலப்பற்றாக் குறை. இந்த அளவு அடிப்படைத் தெரிந்தால் போதும், அந்த நான்கு திட்டங்கள் மக்கள் நலனில் எவ்வளவு அக்கரையுடன் செயல்படப் போகிறது என்பதை உணர்வதற்கு.

முதலாவது, லட்சத்தீவு மேம்பாட்டு அதிகார ஒழுங்குமுறை (Development Authority Regulations), சாலை அமைக்க, கட்டிடம் கட்ட, சுரங்கம் தோண்டி தாதுக்கள் எடுக்க என அரசு, மக்களின் எந்த நிலங்களை வேண்டுமானாலும் மக்கள் வளர்ச்சிக்காக எடுத்துக் கொள்ளலாம். அங்குள்ள அகட்டித்தீவில் ஒரே ஒரு விமான நிலையம் தான் இருக்கிறது. நீங்களே சொல்லுங்கள், பல பெரிய நிறுவன தொழில் அதிபர்கள் வந்து செல்ல ஒரே ஒரு சிறிய விமான நிலையம் போதுமா?! பல விமான நிலையங்கள் கட்ட வேண்டாமா?

குடியாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நியமித்த நிர்வாகியால் கொண்டு வரப்பட்ட வரைவு இது. அந்த ஊர் மக்களால் இதனை எதிர்க்க முடியாது. கொஞ்ச நேரம் செய்தி தொலைக்காட்சியில் விவாதிக்கலாம், வெளிநாட்டு வலைதளமான டுவிட்டரில் போய்க் கிறுக்கி வைக்கலாம், தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளிதழ்களில் நடுபக்கத்தை நிரப்ப எதாவது கட்டுரை எழுதலாம். அந்த அளவோடு இருந்து கொள்ள வேண்டும்.

அப்படி அதையும் மீறி எதிர்த்தால் அதற்காகத் தான் இரண்டாவது மசோதா என்று நீங்கள் தேவையில்லாமல் அரசின் மக்கள் நலத்திட்டத்திற்குப் பொய் சாயம் பூசி வைக்காதீர்கள்.

அந்த இரண்டாவது மசோதா, சமூக விரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் ஒழுங்குமுறை (Prevention of Anti-Social Activity Regulations).

குற்றங்களில் ஈடுபடுவோர், சமூக நலனுக்குக் குந்தகம் ஏற்படுத்துவோர் என நிர்வாகி எவரை குறிப்பிட்டாலும் அவரை ஓராண்டு வரை சிறையில் அடைக்கும் அதிகாரம்.

தேசிய குற்றப் பதிவு அமைப்பகம் (NCRB), 2019 - இல் குறிப்பிட்டது, அந்த ஒரு வருடத்தில் கொள்ளை, கற்பழிப்பு, கொலை, கடத்தல், ஆகியன லட்சத்தீவில் நடந்த எண்ணிக்கை பூஜ்யம். அதே ஆண்டில் மொத்தமே 16 வன்முறை குற்றங்கள் தான் நடந்திருக்கிறது, அதில் 12 குற்றங்கள் அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்திய போது பதியப்பட்டவை. போதைப் பொருள் குற்றங்கள் மொத்தமே நான்கு, அதுவும் அவர்களது சொந்தப் பயன்பாட்டிற்கு வைத்திருந்த குற்றம், போதைப் பொருள் கடத்தலோ, வியாபரமோ 2019 - இல் ஒன்று கூட நடக்கவில்லை.

இப்படி இருக்கையில் 'சமூக விரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் ஒழுங்குமுறை தேவை தானா?' என்றதற்கு, "ஆம் தேவை தான், இப்போது குற்றங்கள் குறைவு தான் என்றாலும், சுற்றுலா தளமாக வளர்ந்து வரும் லட்சத்தீவில் பின்னாடி குற்றங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கையாகக் கொண்டு வருவது தான் இந்தத் திட்டம்" என லட்சத்தீவின் தற்போதைய செயலாளர் அஸ்கர் அலி தெரிவித்திருக்கிறார்.

நன்றாகத் தானே தெரிவித்திருக்கிறார். எதற்காக நேரத்தை விரையம் செய்து இப்படிக் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். வாருங்கள் மூன்றாவது மக்கள் வளர்ச்சிக்கான திட்டத்தைப் பார்ப்போம்.

லட்சத்தீவு விலங்குகள் பாதுகாப்பு ஒழுங்குமுறை (Lakshdweep Animal Preservation Regulations), பசு வதை செய்வது தண்டனைக்குரிய குற்றம். பசுவை ஒருவர் வதைப்பது மட்டுமில்லை, பசுவின் இறைச்சியை ஒருவர் வாங்கினாலோ, விற்றாலோ, வீட்டில் வைத்திருந்தாலோ அதுவும் 10 வருட சிறை மற்றும் 5 லட்சம் அபராதத்திற்குரிய குற்றம். இதுவரை அங்குள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவில் பசு இறைச்சி கொடுத்து வந்ததும் ரத்துச் செய்யப்பட்டது. மேலும் பிற (பசு மற்றும் எருது தவிர) விலங்குகளை மதத்தின் அடிப்படையில் வெட்ட வேண்டும் என்றால் அதிகாரியிடமிருந்து ஒப்புதல் பத்திரம் வாங்க வேண்டும்.

"எதற்காக இந்தத் திடீர் மசோதா?!" கேட்டதற்கு, "சத்தான பால் தரக்கூடிய, விவசாயத்திற்குப் பயன்படக்கூடிய விலங்குகளைப் பாதுகாக்கவே இந்தச் சட்டம். மேலும் அவைகள் தரமான இனவிருத்திக்குப் பயன்படும், அதற்காகத் தான் இந்தத் தடை" என்று அரசு விளக்கியிருக்கிறது.

இதில் போய் 96% இஸ்லாமியர் அங்கு வசிக்கிறார்கள், அது இது என்று விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்து எடுக்கப்பட்ட இத்திட்டத்திற்கு மதச்சாயம் பூச வேண்டாம் என்று நானும் வலியுறுத்துகிறேன், பா.ஜ.க-வின் தேசிய துணை தலைவர் அப்துல்லாகுட்டி அவர்களும் வலியுறுத்துகிறார்.

மேலும் "2020-இல் எருமை இறைச்சி ஏற்றுமதியில் உலகிலேயே முதலிடம், பசு இறைச்சி ஏற்றுமதியில் நான்காம் இடம் என இந்தியா பெருமைப் பட்டுக்கொள்கிறதே! அது என்ன, லட்சத்தீவில் இருக்கும் பசுக்களை மட்டும் பாதுகாப்பது?! அங்கு மட்டும் எதாவது வித்யாசமான பசு ரகம் இருக்கிறதா? அவை அழிந்து வருகிறதா?!" என்று நமக்கு இருக்கும் வேலைக்கு நடுவில் இதையெல்லாம் யோசித்துக்கொண்டு மற்றவர்களையும் குழப்பாதீர்கள்.

நான்காவது, பஞ்சாயத்து அறிவிப்பு மசோதா (Draft Panchayat Notification), இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பில்லை. பெண்களுக்கு 50% உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இட ஒதுக்கீடு.

இதற்குப் போய் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கிறீர்கள்? மத்திய அரசு எதாவது திட்டம் கொண்டு வந்தாலே அதை எதிர்க்க வேண்டும் என்ற கடமை எதாவது இருக்கிறதா?!

செயலாளர் அஸ்கர் அலி தெரிவிக்கையில் "2011 மக்கத்தொகை கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை அடர்த்தி லட்சத்தீவில் 2149/சதுர.கிமீ ஆக உள்ளது இதுவே தேசிய சராசரி 382/சதுர.கிமீ ஆக இருக்கிறது. இந்த மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவே இந்த முடிவு".

ஏன் தேசிய சராசரியைப் பார்க்கிறீர்கள், டையு - டாமன் மற்றும் தாதர் நாகர் ஹவேலி, தில்லி, புதுச்சேரி, சண்டிகார் என மற்ற யூனியன் பிரதேசத்தைவிடக் குறைவாகத் தானே இருக்கிறது (அவையெல்லாம் மக்கள் அடர்த்தியில் லட்சத்தீவைவிட அதிகமே) என்று வீண்வாதம் வைப்பவர்கள், அவர்கள் சுய உள்நோக்கத்துடன் செயல்படுபவர்களே.

இது போக லட்சத்தீவின் சரக்குகளைக் கொச்சியின் பேப்பூர் துறைமுகத்திலிருந்து பா.ஜ.க ஆளும் மாநிலமான கர்நாடகத்தின் மங்களூர் துறைமுகத்திற்கு மாற்றியது, கரையோர இஸ்லாமிய மீனவர்களை அங்கிருந்து விரட்டியது, மாட்டு இறைச்சியை மதிய உணவாகச் செய்து வந்த அங்கன்வாடி தொழிலாளர்களை வேலைவிட்டு நீக்கியது எனப் பலவாறு பேசிக்கொண்டே போகிறார்கள். எது நடந்தாலும் மக்களின் நலனுக்கே அரசு செய்யும் என்ற எளிய நம்பிக்கை கூட இல்லாமல் வன்முறையைத் தூண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மசோதா அனைத்தும் இன்னும் சட்டம் ஆக்கப்படவில்லை, மக்களின் கருத்து கேட்பதற்கு அவகாசம் கொடுத்து வைக்கப்பட்டிருக்கிறது, மசோதாவில் முரண் இருந்தால் அரசுக்குத் தெரிவிக்கலாம், அரசு அதை ஆய்ந்து அரசுக்குப் பிடித்ததைச் செயல்படுத்தும்.

சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு போதும் ஆளும் அரசு ஈடுபடுவதில்லை, மக்கள் நலமே அவர்களின் திடமான நோக்கம்.

என்னை மாதிரி யார் வேண்டுமானாலும் எதையாவது எழுதலாம், பேசலாம், உங்களுக்கு அந்த மசோதாக்கள் குறித்து என்ன தோன்றுகிறது என்று உங்களுக்கான நிலைப்பாட்டை ஆய்ந்து எடுங்கள். லட்சத்தீவுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்று இருக்காதீர்கள். லட்சத்தீவில் அரசு ஏற்படுத்தும் நல்லதிற்கும் தீயதிற்கும் நமக்கும் பங்கு உண்டு, அவர்களுக்கான நேரடித் தலைமை ஏற்படுத்தியதில் நம்முடைய வாக்கும் உள்ளடக்கம். என்ன செய்வது?, அசோகர் மற்றும் அக்பரின் புகழுக்கான காரணங்களை ஔரங்கசீப் மனநிலையிலிருந்து உணர்வது கொஞ்சம் கடினம் தான்.

- சா.கவியரசன்.


Comments