நைல் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது,
பெரும் சூரப்புயலின் சுகினம்
அந்த இடத்தின் அமைதியை
பெரிதாக பாதிக்கவில்லை...
ஒசைரஸின் பேரன்பு மலர்ந்திருந்தது,
அழகாய்... கரையோர பூக்களாய்!
அடிமைகளின் பசி அங்கே
அழகிய பிரமிடுகளாய் வளர்ந்து கொண்டிருந்தது,
நாணற் சுவடிகளில் வரலாறு
வனப்பாக அச்சேறிக்கொண்டிருக்க,
வடித்த வாழைச் சிலையாய் அமர்ந்திருந்த
கிளியோபாட்ராவின் அழகிய நகங்களில்,
சீஸரின் வீரம் கூர் மழுங்கிக் கிடந்தது...
பெரும் மணல் காட்டில் ஒற்றை மலர் அவள்!
கவுரவிக்கப் படாத வெற்றிகள்
அங்கே வெற்றுப் புன்னகை பூத்தன சிலைகளாய்!
மாயங்கள் நிறைந்த
அந்த மஞ்சள் வெளியின்
மாலை நேரம் மனதை படையெடுத்து வென்றது...
சேவகி ஒருத்தி
பார்வையால் பழரசம் வார்த்தாள்,
நல்லிரவின் நெடும் பாதையில்
நிலவொளி மட்டும் பயணித்தது,
அனுபிஸ் சிலையின் நிழல் பிரமிடின் மேல் உறங்கிக் கொண்டிருந்தது,
நிலவொளியின் கானல் நீர் ஒட்டகங்களை ஓடியாடச் செய்தது...
அந்தப்புரம் அமைதியாக இருந்தது,
நெருப்பில் விட்டில்கள் வெடிக்கும் சப்தம் நெஃபர்டிடியின் உறக்கம் கலைக்க,
உலாவ வந்தவளுடன் அளவளாவிக் கொண்டிருக்க,
உறக்கமில்லா என் இரவுகளில் அவ்விரவும் ஒன்றானது...
இது எதையும் கண்டு கொள்ளாமல்
நைல் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது!!!...
- தமிழ்கவிராஜன்
Comments
Post a Comment