உஷ்....உஷ்ஷ்ஷ்......என்ன வெயிலு???
முடிலடா சாமி....கொரோனா-க்கு பயந்து வெளிய போறதுக்கு பதிலா இந்த வெயிலுக்கு பயந்தே போகாம இருக்கனும் போலயே, என்று முணுமுணுத்து கொண்டு வீட்டினுள் நுழைந்தான் இந்திரன்.
இரண்டு கையிலும் பை நிறைய காய்கறிகள், பழங்கள், மளிகை என அனைத்தும் நிரம்பி வழிந்தது.
சோஃபாவில் அமர்ந்து விட்டு...
"ஜானு.... ஜானு... ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வர்யா... ரொம்ப தாகமா இருக்கு....", என்றான்.
மனைவி, "இதோ கொண்டு வரேன்... உட்காருங்க..." என்றாள்.
தண்ணீரை மடமடவென பருகிவிட்டு டம்ளரை கீழே வைத்தான். வாங்கி வந்த பொருட்களை எல்லாம் அவளிடம் கொடுத்து சரி பார்த்துக்கச் சொன்னான்.
இந்திரனுக்கு இரண்டு குழந்தைகள். ஒன்று தமிழன் நான்கு வயதிலும்; இரண்டு தமிழினி இரண்டு வயதிலும் உள்ளனர்.
"அப்பா....எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க..." என்று இருவரும் ஓடி வந்து அவன் மீது ஏறிக் கொண்டனர்.
அப்பொழுது அவன் தொலைக்காட்சியை போடுகிறான்.
"மீண்டும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று செய்தி அறிக்கை வெளியாகிறது.
அதைப் பார்த்துக் கொண்டிருந்தவன்...இன்னும் எத்தனை நாள்தான் இப்படியே போகுமோ....நடுத்தர வர்க்கம் ரொம்ப மோசமான நிலையில் இருக்கு.... என்ன பண்ணி சமாளிக்க முடியும்னு தெரியல...என புலம்பிக் கொண்டே அறைக்குள் சென்றான்.
அடுத்த நாள் காலையில்....
"ஏங்க... இந்த லிஸ்ட்டில் இருக்கிற பொருள்களை வாங்கிட்டு வந்திருங்க..."
"ஏண்டி...நேத்து தானே அத்தனை வாங்கிட்டு வந்தேன்..."
"அதுலா போகத்தான் இதுலா எழுதிருக்கேன்...வாங்கிட்டு வாங்க..."
"முடியல... போய்ட்டு வாறன்" என்று சொல்லிவிட்டு மாஸ்க் போட்டுகிட்டு கிளம்பினான்.
வெளியில் இருந்த தன் பைக்கை அவளை நினைத்து உதைப்பது போல் நினைத்து படால்னு உதைச்சான்.... வண்டியை டுர்...டுர்ர்ர்...டுர்ர்ர்ர்ர்.... என்று முறிக்கிக் கொண்டு சென்றான்.
வீடு திரும்பியவனுக்கு அதிர்ச்சி....
தன் இரண்டு வயது குழந்தை தமிழினி கீழே தவறி விழுந்ததால் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவளை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர் இந்திரனும் ஜானுவும்...
அவன் சென்றதோ, தனியார் ஆஸ்பத்திரிக்கு. அங்கு அவனை குறிப்பிட்ட தொகையை உடனடியாக கட்டச் சொல்லினர்.
உடனே, தன் வங்கி கடன் அட்டையை பயன்படுத்தினான். ஆனால் அவனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி...!
"சார்...கார்டு லிமிட் முடிஞ்சு போச்சு...வேற கார்டு கொடுங்க" என்று பணிப்பெண் கூறுகிறாள்.
அதிர்ச்சியுடன் பார்த்தான்... இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் தயங்கி நின்றான்.
உடனே, தன் உடன் வேலை செய்யும் நெருங்கிய நண்பருக்கு ஃபோன் செய்தான்.
ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து பணத்தை செலுத்தி குழந்தைக்கு சிகிச்சை செய்துவிட்டு வீடு திரும்பினர் அனைவரும்...
வீட்டிற்குச் சென்றவுடன் இந்திரனும் அவன் நண்பனும் சோஃபாவில் அமர்ந்தனர். ஜானு தமிழினியை அழைத்துக் கொண்டு உறங்கச் சென்றாள்.
அப்போது அவன் நண்பன்...
இந்திரனிடம், "ஏண்டா.... இப்படி ஆத்திர அவசரத்துக்கு கூட பணமில்லாம செலவு செஞ்சுட்டயா...??" என்றான்.
"தெரியலடா... எப்படி எல்லா செலவாச்சுனு...", என்றான் இந்திரன்.
"அதுக்குத்தான் பட்ஜெட் ப்ளானிங் ரொம்ப அவசியம்" என்கிறான் அவன் நண்பன்.
உடனே இந்திரன், அது எப்படி போடுறது...???
சம்பளத்தை வாங்குனதும் எதுக்கு எவ்வளவு பணம் வேணும்னு உன் மனைவியோட சேர்ந்து ஆலோசித்து எதுக்கெல்லாம் முன்னுரிமை கொடுக்கனும்னு முடிவு பண்ணனும். பால், காய்கறி, மளிகை இப்படி அத்தியாவசிய பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கனும் என்றான்.
சிறிது நிறுத்தியவன்....மீண்டும் தொடர்ந்தான்...
அது மட்டும் இல்லாம இப்ப வேற பெட்ரோல், டீசல் விலை... அப்பறம் சமையல் எரிவாயு-னு இவைகளோட விலை ஏற்றத்தால செலவு ரொம்பவே எகிறுகிறது.
கடைக்குப் போறயா நடந்து போ...
சமைக்குறீங்களா என்னென்ன பொருளா வேணுமோ எல்லாம் முன்னாடியே எடுத்து வெச்சுகிட்டு பண்ணுனா எரிவாயு மிச்சம் பண்ணலாம் என்று அவன் நண்பன் உரைத்துக் கொண்டிருக்கும் போது ஜானு படுக்கை அறையில் இருந்து வெளியே வந்தாள்.
அவளும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.
மீண்டும் தொடர்ந்த அவன் நண்பன்...
அத்தியாவசிய பொருட்களுக்கு தவிர வேறு பொருட்களுக்கு செலவு செய்யறத குறைத்தாலே போதும் அதிகம் சேமிக்கலாம். மாதந்தோறும் இப்படி சம்பளத்துல இருந்து அவசரத் தேவைக்குனு ஒரு குறிப்பிட்ட தொகையை தனியா எடுத்து வெச்சிடனும். நெருக்கடியான காலக்கட்டத்தில நமக்கு உதவறது இந்த சேமிப்பு மட்டும் தான். இது உன் குழந்தைகளுக்கான படிப்புச் செலவு இல்ல வேற எதுனா உடனடி தேவைக்கு நிச்சயம் உதவும். அதுவுமில்லாம இன்னைக்கு இருக்கற இந்த சூழலுக்கு சேமிப்புங்கறது மிக மிக அவசியம் என்று நண்பன் மீது கொண்ட அக்கறையுடன் பேசினான்.
"அண்ணா.... தோசை சுடுறனே.. சாப்பிட்டு போங்களே..." என்று கேட்டாள் ஜானு.
"இல்லமா... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... நா கிளம்புறேன்" என்று கூறிவிட்டு எழுந்தான்.
வெளியே வந்தவன்... இந்திரன், ஜானுவிடம், " இனிமேலாவது மாசம் மாசம் நான் சொன்ன மாதிரி பட்ஜெட் ப்ளானிங் போடுங்க... ஒவ்வொரு மாசமும் போடும் போது போன தடவ தேவையில்லாம பண்ண செலவுகளை நினைத்துப் பார்த்து, அந்த செலவுகளை எப்படி குறைக்கலாம்னு யோசிங்க... இப்படி பட்ஜெட் போட்டாலே கடனில்லாத நிம்மதியான வாழ்க்கை வாழலாம்..." என்று கூறிவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
இந்திரனும் ஜானுவும் அவன் கூறிச் சென்ற வார்த்தைகளை நினைத்துப் பார்த்தபடியே வீட்டினுள் நுழைந்து கதவை அடைத்தனர்.
கொரோனா அனைவருக்கும் சுத்தம் சுகாதாரம் என பலவற்றைக் கற்றுக் கொடுத்தது போல அன்றாட சிக்கனத்தோட தேவையையும், சேமிப்போட அவசியத்தையும் எல்லோருக்கும் உணர்த்துகிறது.
சேமிப்போம் சிக்கனத்தோடு! வாழ்வோம் மகிழ்ச்சியோடு!
- பா.அருள்மணிகண்டன்
Comments
Post a Comment