உலகின் மிகப் பிரம்மாண்டமான பனிப்பாறை உடைந்தது

 

பூமியின் தென் பகுதியில் உள்ள மிகப் பெரிய கண்டமான அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் நிறைந்து காணப்படுகின்றன. புவி வெப்பமயமாதலை இந்தப் பனிப்பாறைகள் தடுத்து வருகின்றன. எனினும் மனிதனின் நவீன வாழ்வியல் முறைகளால் காலநிலையில் வெப்பம் அதிகரித்து இந்தப் பனிப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகத் தொடங்கியுள்ளன. இதனால் கடல் நீர் மட்டம் அதிகரித்துப் பல கடற்கரையோரப் பகுதிகள் நீரினுள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அண்டார்டிகாவில் 4320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மிகப் பெரிய பனிப்பாறை ஒன்று உடைந்து வெடெல் கடலில் மிதக்க தொடங்கியுள்ளது. புதிய பனிப்பாறைக்கு ஏ - 76 (A - 76) எனப் பெயரிடப்பட்டுள்ளது. வெடெல் கடலானது அண்டார்டிக் கடற்கரையின் ஆழமான விரிகுடாவாகும். இதுவே அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு முனையாகத் திகழ்கிறது.

இந்தப் பனிப்பாறை உடைவு நிகழ்வானது பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வேயால் (British Antarctic Survey) முதலில் கண்டுபிடிக்கப்பட்டு அமெரிக்கா நேஷனல் ஐஸ் சென்டரால் (US National Ice Centre) கோப்பர்நிக்கஸ் சென்டினல் - 1 செயற்கைக்கோள் பதிவு செய்த புகைப்படத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

சென்டினல் - 1 ரேடார் விண்கலம் உலகின் இரண்டு துருவமுனைகளையும் ஆராய்வதற்காகச் சி பேண்டில் (C Band) இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் துருவமுனைகளின் செயல்பாட்டை இது மேற்பார்வை செய்து வருகிறது.



  ஏ - 76 பனிப்பாறை 170 கிலோ மீட்டர் நீளமும் 25 கிலோ மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் உடைந்த ஏ - 74 பனிப்பாறையை விடத் தற்போது உடைந்துள்ள பனிப்பாறையே பெரியதாகும். ஏ - 74 பனிப்பாறை 1270 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாகும்.

  ஏ - 76 பனிப்பாறை ஸ்பானிஷ் தீபகற்பமான மெஜொர்காவை விடப் பெரியதாகும். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை விட நான்கு மடங்கும், இந்திய நகரங்களான புதுதில்லியை விட மூன்று மடங்கும் மும்பையை விட ஏழு மடங்கும் பெரியதாகும்.

  அண்டார்டிகாவைச் சுற்றி இரண்டு மிகப் பெரும் பனி அடுக்குகள் உள்ளன. முதலாம் இடத்தில் ரோஸ் பனி அடுக்கும் இரண்டாவதாக ரோனி பனி அடுக்கும் உள்ளன. பனி அடுக்குகள் என்பது நிரந்தரமாக மிதக்கும் பல பனிப்படலங்களின் சேர்க்கை ஆகும். இவை நிலப்பகுதிகளுக்கும் கடலுக்கும் இடையே இயற்கை அரணாக விளங்குகிறது. இந்தப் பனி அடுக்குகள் பெருங்கடலின் ஒரு பகுதியாக உள்ளதால், கடல் நீர் மட்டம் உயர காரணமாகாது. ஆனால் அனைத்து பனி அடுக்குகளும் ஒட்டுமொத்தமாகச் சரிந்தாள் கடல் நீர் மட்டம் அதிகரிக்கும்.

  ஒவ்வொரு வருடமும் பனி அடுக்குகள் 100 மீட்டர் முதல் பல மைல்கள் வரை வளரும் தன்மை கொண்டவை. அப்படி வளர்கையில் பனிக்கட்டிகளில் விரிசல்கள் உண்டாகி துண்டுகளாக உடையும். இது இயற்கை சுழற்சியின் ஒரு பகுதியாகும்.

  கடல் நீர் மட்டம் உயர்வதற்குப் பனிப்படலம் உருகுவது என்பது 5 சதவீத காரணமே என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது கடல் நீர் மட்டம் உயர மூன்றில் ஒரு பங்கு காரணம் பனிப்படலம் உருகுவதுதான் என்ற நிலை வந்துவிட்டது. பருவ நிலை மாற்றமே அண்டார்டிகாவில் பனி அதிகளவில் உருகுவதற்குக் காரணம் என இம்பியன் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பருவ நிலை மாற்றத்திற்கு இந்தப் பகுதி சற்று வித்தியாசமாக வினையாற்றுவதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. கடல் நீரின் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் அந்த நீர் பனிப்படலத்தின் முனையைத் தொடும் போது அண்டார்டிகாவில் பனி அதிகளவு உருகுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது எதிர்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடலோர வெள்ளம் ஏற்படும். தற்போதைய வேகத்தில் அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்தில் பனிப்படலம் உருகுவது தொடர்ந்தால் 2100 ல் கடலோர வெள்ளத்தால் 40 கோடி மக்களின் உயிர் கேள்வி குறியாகும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

  இது போன்ற மிகப்பெரிய பனிப்பாறைகள் உடைதல் என்பது அரிதாக நடைபெறும் நிகழ்வு என்பதால் நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

- ப. சிவசைலஜா

 

 

 

 

Comments