வாழ்க்கையைத் தேடி

 வாழ்க்கை - துணைக்காலோடு துவங்கி, இடையில் பல ழகரங்களில் வழுக்கி, ஒற்றுகளோடு ஒற்றி, இறுதியில் எப்படிக் 'கை'க் கூடுகிறது என்பது தான் வாழ்க்கை. வாழ்க்கையைப் பற்றி எழுதுமளவிற்குப் போதிய அறிவும் அனுபவமும் இல்லாத போதிலும், அது குறித்த சான்றோரின் வரிகளை ஊன்றுகோலாய்க் கொண்டு இந்தப் பதிவை எழுத விழைகின்றேன்.



மக்கள் வாழ்க்கையை அனுகுகின்ற முறையை வைத்து பெரும்பாலான மக்களை மூன்று பிரிவுக்குள் அடக்கி விடலாம். முதலாவது பிரிவில் உள்ள மக்கள், தங்கள் வாழ்வில் ஒரு இலக்கு, இலட்சியம் அல்லது நோக்கம் எதையாவது தீர்மானித்துக் கொண்டு அவற்றை அடைவதையே வாழ்வின் ஈடேற்றமாக எண்ணுவர். இரண்டாவது பிரிவில் உள்ளவர்கள், வாழ்வின் எதிர்காலம் குறித்த பார்வையே இல்லாமல் நிகழ்காலத்தை மனம் விரும்பியபடி மகிழ்ச்சியாகக் கழிப்பவர்கள். மூன்றாவது பிரிவினர், கால ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருப்பவர்கள். அவர்கள் விரும்பிய பாதையில் ஓடுவதற்கும் சூழல் அமையாது; ஓடாமல் ஒய்யாரமாய் ஓய்வெடுக்கவும் காலம் அமையாது. இதை வாசிக்கும்போது, 'நானும் மூணாவது பிரிவுதாங்க' என்று உங்கள் மனம் அப்பாவியாகச் சொல்வது எனக்குக் கேட்கிறது. ஆனால்,சற்று நிதானித்துச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் உண்மையிலேயே குடும்பச் சூழலால் இலக்கை விட்டு திசைமாறி ஓடுகிறீர்களா? இல்லை கவலை ஏதுமின்றிக் காலம் கடத்துகிறீர்களா? என்று.

‌’ நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய்.... நீ வாழ்ந்து மறைந்ததற்கு அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல்’’ என்கிற சுவாமி விவேகானந்தரின் வரிகளும், "இளைஞர்களே கனவு காணுங்கள்", என்ற ஐயா கலாமின் மணிமொழிகளும்.... மனித வாழ்க்கை, இலட்சியம் நோக்கியப் பயணமாக அமைய வேண்டும் என்று வரையறை செய்கிறது.

"விலங்குகளிலேயே மனித இனம் ஒன்று தான்.... 'வேலை' செய்யவேண்டிய நிலையில் உள்ளது. இதுதான், உலகிலேயே மிகவும் பரிகாசத்துக்குறிய விடயம் என்று நான் நினைக்கிறேன். மற்ற விலங்குகள், தாங்கள் வாழ்வதன் மூலம் வாழ்வை நடத்துகின்றன. ஆனால், மனித இனம் ஒன்று தான் அப்படி வேலை செய்தால் தான் வாழ முடியும்; இப்படிச் செய்தால் தான் வாழ முடியும்,என்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். வேலை பெரிதானால், சவால் பெரிதாக இருக்கும்; அதை,அற்புதம் என்று வேறு நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனித இனம் இத்தகைய எண்ணத்தைக் கைவிட்டு, சுலபமான, சுகமான வாழ்க்கையை ஏராளமான ஓய்வு நேரத்தோடு நடத்தி வருவது நல்லது " என்று ஜப்பானிய இயற்கை வேளாண் விஞ்ஞானி, மசானபு ஃபுகோகா கூறுகிறார். இந்த வரிகள், நம்முடைய நிலைப்பாட்டை எல்லாம் சுக்கு சுக்காக உடைப்பது போல் தெரிந்தாலும்;இதன்,உள்ளார்ந்த அர்த்தம் வேறு. ஃபுகோகா மக்களை வெட்டியாகப் பொழுதைக் கழிக்கச் சொல்லவில்லை; இலக்கைத் தேடி ஓடுகையில் வாழ்க்கையைத் தொலைத்து விடாமல் இருக்க எச்சரிக்கிறார்.

"வாழ்க்கை" என்ற பயணத்தில் இலக்கு, அவசியம் தான். ஆனால், இலக்கை அடைவது மட்டுமே இலட்சியம் அல்ல; சக பயணிகளோடு அன்பைப் பரிமாறிக் கொள்ளுதலும், சாளரம் வழியே இயற்கையின் எழிலில் இளைப்பாறுதலும், அவ்வப்போது இசை ராஜாக்களின் இசையில் மூழ்குதலும், மொத்தத்தில் பயணிக்கின்ற பொழுதுகளை அழகாக்குவதில் தான், வாழ்க்கைப் பயணத்தின் இரகசியம் ஒளிந்திருக்கிறது. சிறு வயதில் நமக்குள்ளே ஆர்ப்பரித்த ஆசைகளும் கனவுகளும் பின்னாளில் பாதையின் கடினம் அறிந்து, மூளையில் முடங்கிப் போய்க் கிடக்கும். தோண்டி எடுப்போம்! 

இலக்கை அடைக்கிறோமோ?..... இல்லையோ?.... பயணத்தை ரசித்த வண்ணம் புதிய பாதையில் நடைபோடுவோம்!!!!.....

- சிவபாலன்


Comments