உலகத்தில் மனிதர்கள் தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நுண்ணுயிரிகள் தோன்றிவிட்டன. மனிதர்கள் தோன்றி நாகரிகம் அடைந்த பின்பு நம் வாழ்விலும், நோய் எதிர்ப்புச் சக்தியிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன, எனினும் அவை மனிதர்களிடம் மட்டும் ஏற்படவில்லை, நுண்ணுயிரிகளும் மாற்றங்களுக்கு உட்பட்டு பல வகையில் வீரியம் மிக்கதாக மாறி மனிதர்களுக்கு பல நோய்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்நூற்றாண்டின் ஆறாத வடுவாக மாறியுள்ள கொரோனா நோய், அதன் முதல் அலை முடிந்ததும், சற்றே தனிந்தது என்று பெருமூச்சு விடும் நேரத்திற்குள் தனது இரண்டாம் அலையை வீசி பல உறவுகளை சிதைத்துவிட்டது. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்களை மியூகோர்மைகோசிஸ் என்னும் கருப்பு பூஞ்சை நோய் பாதித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நோய்த் தொற்றால் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
இந்நோய் மனிதர்களுக்கு அரிதாகவே காணப்படும், அதுமட்டுமின்றி ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது என்பதே இப்பொழுது சற்று பயம் தனிய வைத்தது. இந்நோய் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்தவர்கள், இரத்தத்தில் சர்க்கரை உள்ளவர்கள், உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் உள்ளிட்ட சிலரையே தாக்கிவந்தது.
இந்நோயினால் மூச்சுப்பாதை மற்றும் கண்களில் பூஞ்சைகள் வளர்ந்து, அவை நரம்பு மண்டலம், நுரையீரல் மற்றும் மூளையை பாதித்து கண்பார்வையை பறிக்கும் அல்லது தீவிர நிலையில் மரணம் கூட ஏற்படுத்தலாம்.
இப்பொழுது இந்நோய் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மேலும் ஒரு தலைவலியாக மாறியுள்ளது. ஏனெனில் அவர்களை கொரோனாவில் இருந்து காப்பதற்கு ஸ்டிராய்டு மருந்துகள் செலுத்தப்படும். அவை ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை குறைத்து விடுவதால், நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறது அதோடு இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரித்து கருப்பு பூஞ்சை நோய் வர காரணமாக அமைகிறது.
அறிகுறிகள்:
ஆரம்பத்தில் தீவிர தலைவலி, முகத்தில் வலி ஏற்படுதல், முகம் வீங்குதல், கண்கள் வீங்குதல், மூக்கடைப்பு, மூக்கில் இரத்தம் வருதல், கரும்புள்ளிகள் தென்படுதல் போன்ற பல அறிகுறிகள் தென்படும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகினால் இந்நோய் தாக்கியதை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை பெற்று குணமடைய முடியும்.
சிகிச்சை முறைகள்:
பொதுவாக இந்நோயின் தாக்கத்தை பொறுத்தே சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன. தாக்கம் அதிகமாக இருக்கும் போது, முதலில் பூஞ்சை எதிர்ப்பு மருந்தான ஆம்போடெரிசின்-பி வாய்வழியாக அல்லது நரம்பு வழியாக கொடுக்கப்படுகிறது.
பின்னர் உடலில் அதிக அளவில் பூஞ்சை தொற்று இருந்தால், பாதிக்கப்பட்ட திசுக்களை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில் அவை மூளையை பாதித்து மரணம் ஏற்படுத்தலாம்.
முன்னெச்சரிக்கைகளும் முன்னெடுப்புகளும் :
- இந்நோய்க்கான காரணிகளான பூஞ்சைகள் வளராமல் தடுக்க சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- வெளியே செல்லும் போது அல்லது வீட்டு வேலை செய்யும் போது முககவசம் அணியவேண்டும்.
- நிலத்தில் நடக்கும் போது காலனிகளை அணியவேண்டும்.
- தூசிகள் நிறைந்த இடங்களையும் வீட்டின் காற்று புகாத இடங்களையும் தவிர்ப்பது நல்லது.
- மருத்துவர்களின் அறிவுரைகள் இல்லாமல் ஸ்டிராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்ள கூடாது.
- இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
- கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
- கருப்பு பூஞ்சையின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலம் நோயில் இருந்து விடுபடலாம்.
இந்தியாவில் பூஞ்சை எதிர்ப்பு மருந்தான ஆம்போடெரிசின்-பி யின் உற்பத்தி மிக குறைவாக உள்ளதால் மத்திய அரசு அதன் இறக்குமதியை அதிகரித்துள்ளது. அதோடு நிற்காமல் நம் நாட்டில் அந்த மருந்தின் உற்பத்தியை அதிகரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக விலையில்லாமல் வழங்கி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயைக் கண்காணிக்கவும் மக்களுக்கு விரைவாக சிகிச்சை செய்யவும் ஒரு குழு அமைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு, அதோடு கருப்பு பூஞ்சை சிறப்பு சிகிச்சை மையத்தையும் தொடங்கியது வரவேற்கத்தக்கது. அதோடு சேர்த்து கிராம மக்கள் வரை இந்நோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கொண்டு சேர்த்தால் இந்நோயின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது.
கருப்பு பூஞ்சை நோய் விரைவாக கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறையும் என்பதால் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.
- அருணகிரி
Comments
Post a Comment