வரலாறு வந்த கதை - பகுதி-1

 கி.பி  1206 ஆண்டு முதல் 1290 வரையிலான காலம் வரை டெல்லி சுல்தானியத்தை அடிமைகளும் அவர்களது வாரிசுகளும்  ஆண்டு வந்தனர். அவர்கள் அடிமை வம்சம் என்றே அழைக்கப்பட்டனர். இப்படி அடிமைகள் ஆண்டான் ஆவதும் ஆண்டான் அடிமை ஆவதும் மாறி மாறி வரலாற்றில் நடந்தேரியது. ஆனால் ஒருவரை தன் சுலபத்துக்காகப் பயன்படுத்தும் இந்த ஆண்டான் அடிமை முறை மட்டும் மாறவே இல்லை .

அப்படிப் பட்ட இந்த முறை எப்படி பிறந்தது?? எப்படி பரிணமித்தது???.

உலகில் உள்ள மக்களை ஆண்டானாகவும் அடிமையாகவும் பிரித்துப் பார்க்க வழி செய்தது நிலமே. நிலம் தோன்றியப் பின் தான் மனிதன் தோன்றினான்  சொல்லப்போனால் நிலம் தான் மனிதன் தோன்ற அனைத்துச் சாதகமான சூழ்நிலைகளையும் தந்து மனிதனைப் பிரசவித்தது. அத்தகைய நிலத்தை தன் நிலமென உரிமைக் கோரியது மட்டுமின்றி அதை சமத்துவம் இன்றி பிரித்துக் கொண்டான். பரிணாம வளர்ச்சி படி மனிதனின் மூதாதையரான குரங்குகளிடம் கூட சுரண்டல், ஆண்டான்-அடிமை முறை போன்ற வழக்கங்கள் இல்லை, ஏன் குறிப்பிட்ட காலம் வரை மனிதர்களிடம் கூட இந்த வழக்கங்கள் இல்லை.

ஆனால் இதை எல்லாம் மனிதன் தன்னையே அறியாமல் செய்ய தொடங்கியது சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவன் செய்ய தொடங்கிய ஒரு புதிய உயிர்வாழும் தந்திரத்தின் விளைவு தான். 



அந்த தந்திரம்   தான் வேளாண்மை. நாடோடியாக உணவு தேடி அலைந்து கொண்டு இருந்த ஆதிமனிதன் காட்டில் எந்த பழம் கிடைத்ததோ அதை உண்டான். ஆனால் வேளாண்மை செய்யத் தொடங்கி இந்த பழம் இப்போது கிடைக்க வேண்டும் என்று திட்டமிட்டப்  போது சுரண்டல் சாத்தியமானது. குடும்பம் சார்ந்த குழுவாக சுற்றித் திரிந்த மனித இனம், பல குடும்பங்கள் சார்ந்த சமுதாயக் குழுவாக ஆற்றங்கரைகளில் குடியேறினான். 

இவ்வாராக பல சமுதாயக் குழுக்கள் உருவாகின, வேளாண்மை பொய்த்துப் போகும் பட்சத்தில் வேட்டையாடி அல்லது காடுகளில் உணவு சேகரிக்கும் உத்திகளை காலப்போக்கில் மறந்துப் போன குழு வேளாண்மையில் வெற்றிப் பெற்ற குழுவைத் தாக்கி தானியங்களைக் களவாட முயற்சிக்கும். களவு முயற்சியை தவிர்க்கும் பொருட்டு அந்த குழுக்களில் காவல் பிரிவு தோன்றியது.

அவர்களின் முழு நேர பணி காவல் மட்டும் தான், அதனால் அந்த பிரிவின் தலைவரிடம் விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட பங்கு அளிக்கப்பட்டது . 

குழுவினரின் நில பரப்பு முழுவதும் காவல் பிரிவு தலைவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. காலங்கள் உருண்டு ஓடின சுமார் கி.பி 3000 ஆண்டு வாக்கில் நாகரிகங்கள் தோன்றின. குழுவின் நிலப்பரப்பு மட்டுமின்றி குழுவினரும் காவல் தலைவரின் கட்டுப்பாட்டுக்கு வந்தனர். சில காவல் தலைவர்கள் தங்களை அரசர்களாகவும் கடவுளாகவும் நினைத்துக் கொண்டனர். இப்படியாக நிலம் என்பது அரசனுக்கு சொந்தமானதாக மாறியது. குப்தர் காலத்து பகற்பூர் செப்பேடு அரசர் தான் நிலத்தின் ஒரே உரிமையாளர் எனக் கூறுகிறது.

  கி.மு முதலாம் நூற்றாண்டில் இந்தியாவின் தக்காண பகுதிகளை ஆண்டு வந்த சாதவாகனர்கள் எனும் அரச மரபினர் பௌத்த குருமர்களுக்கும், பிராமணர்களுக்கும் நிலங்களைத் தானமாக வழங்கினர். இது இந்திய சமுதாய வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப் படுகிறது.

இந்தியாவில் வரணசரம முறை துளிர்விட தொடங்கியப் போது நில தானங்கள் நிலம் இருப்பவர் (உயரிய வகுப்பு எனச் சொல்லிக்கொள்பவர்)இல்லாதவர் (சாதியின் பெயரால் ஒதுக்கப் பட்டவர்கள்) எனும் பாகுபாட்டை உருவாக்கி சாதி வேரூன்ற வழிவகுத்தது.

நிலம் இருப்பவரிடம் (நிலப் பிரபுக்கள்), இல்லாதவர் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆண்டான்-அடிமை முறையின் இந்திய பிரதியாக வரணசரம அமைப்பு பரிணமித்தது. நில பிரபுக்கள் தங்கள் உரிமையை கொண்டு செழித்தனர் ஆனால் மக்களை காக்கும் கடமையை மறந்தனர்.

ஜவஹர்லால் நேரு தன் உலக சரித்திரம் புத்தகத்தில் ஆண்டான் அடிமை முறை பற்றிக் கூறும் போது "ஐரோப்பாவில் இருந்த சில காட்டுமிராண்டி இனக் குழுக்கள் சுதந்திரமாக வாழும் எண்ணம் கொண்டவர்கள் அவர்கள் எப்படி இந்த முறைக்கு அடங்கிப் போனார்கள்" என ஆச்சரியம் அடைந்தார் .

அதே ஆச்சரியம் தான் நமக்கும்.

மனிதன் பரிணமித்த நாள் முதல் யானை, சிங்கம், பல விஷ ஜந்துக்கள், மேலும் பெயர் தெரியாத காலப் போக்கில் அழிந்துப்போன மிருகங்கள் என அனைத்தையும் எதிர்த்துப் பிழைத்து வந்தவன் சக மனிதனிடம் எப்படி அடிமை ஆனான் ???

உலகின் முதல் வளர்ப்பு மிருகம் (domesticated) மனிதன் தானோ??

ஆண்டான் அடிமை முறை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு தரப்பைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

-தொடரும்...

- உதயநிதி


Comments