அந்த நாள் (1954) - திரை விமர்சனம்

 

 

தை சென்னையில் ஆரம்பிக்கிறது. 1943 ஆம் வருடம் அக்டோபர் 11 தேதி இரவு சென்னையின் மீது ஜப்பான் ராணுவம் விமானத் தாக்குதல் நடத்துகிறது,மறுநாள் காலை திருவெல்லிக்கேணியில் இருக்கும் ஒரு வீட்டில் துப்பாக்கி சத்தம் கேட்கிறது. விரைந்து பார்த்தால் ராஜன் (சிவாஜி கணேசன்) என்கிற ரேடியோ என்ஜினீயர் பிணமாகக் கிடக்கிறார்? அவரை யார் கொன்றார்? ஏன் ? எதற்கு? எனப் புலனாய்ந்து கண்டுசொல்லும் "Whodunit" வகைப் படம் தான் இந்த "அந்த நாள்".



  ராஜன் ஒரு ரேடியோ என்ஜினீயர். அமைதியானவர். அதீத புத்திசாலி. விஞ்ஞானி. அவருக்கு ஒரு குடும்பம். மனைவி உஷா (பண்டாரி பாய்) , தம்பி ,தம்பியின் மனைவி மற்றும் குழந்தை. இதெல்லாம் இருந்தாலும் கூட யாருக்கும் அறியாமல் கலாபக்காதலி அம்புஜம். கொலையை முதலில் பார்த்தது பக்கத்துக்கு வீட்டுக்காரர் சின்னையா.   முதலில் வெளியாட்களில் கொலை செய்திருக்க வாய்ப்பிருக்கிறதா எனப் போலீஸ் தேடுகிறார்கள். பின்னர் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் விசாரிக்கிறார்கள். போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்கக் குழப்பம் வருகிறது. ஓவ்வொருவருக்கும் வெவ்வேறு ஆட்கள் மீது பழி சுமத்துகிறார்கள். எல்லாருக்கும் ஒரு கதை இருக்கிறது. இறுதியில் யார் அதைச் செய்தார் என்பதை ட்விஸ்ட் & த்ரில்லுடன் நமக்குத் தந்திருக்கிறார் இயக்குனர் சு.பாலசந்தர்.

  திரில்லர் வகைப் படங்கள் என்றாலே தனிப் பிரியம் எனக்குண்டு. வெவ்வேறு மொழி த்ரில்லர் படங்கள் அலசிக்கொண்டிருந்த போதுதான் தமிழ் படங்களில் இந்தப் படம் கண்ணில் தென்பட்டது. கிட்டத்தட்ட படம் வெளிவந்து 67 வருடங்கள் ஆகிவிட்டது. தமிழில் முதலில் வெளிவந்த Neo-noir திரைப்படம். அதுமட்டுமில்லாது "Rashomon effect" என்னும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. "ரஷமோன்" (1950) என்கிற ஜப்பானிய படம் தான் இந்தப் பாணியைத் திரையுலகத்துக்கு அறிமுகப் படுத்தியது.அதை இயக்கியவர் Akira kurosawa . அந்தப் பாணி என்னவென்றால் நடந்த ஒரு சம்பவத்தை ஒவ்வொருவரும் அவர்களது பார்வையில் இருந்து கூறுவது.ஒவ்வொருவரும் வேறுவேறு மாதிரி கூறுவார்கள். இந்த ரஷமோன் படத்தை ஏதோ ஒரு சர்வதேச விழாவில் பார்த்த பாலசந்தர் அதைத் தமிழில் எடுக்க வேண்டும் என விரும்பினார்.அதை சாதித்தும் காட்டியிருக்கிறார்.

படத்தின் கதாநாயகன் நிச்சயமாகத் திரைக்கதை தான். புதிர்போலத் தான் பயணிக்கும். ஆளுக்கொரு காரணம்.யார் சொல்வது உண்மை ? யார் அந்தக் கொலையாளி ?என நம்மை யோசிக்க வைக்கும் போதே படம் வெற்றியடைந்து விட்டது.இரண்டு மணி நேரம் திரையில் இருந்து கண் அகலாது.படத்திற்குத் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியது ஜாவர் சீதாராமன்.அவரும் படத்தில் டிடெக்ட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

படத்தின் நாயகன் சிவாஜி கணேசன். முதல் காட்சியே இவர் இறப்பது போல் தான் அமைத்திருக்கும். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரம் கதை கூறும்போது இவரின் கதாபாத்திர வடிவமைப்பு முழுமையா புரியும். அற்புதமான நடிகன். நவரசமான நடிப்பு அனைத்தும் இதில் நடித்து அசத்தியிருப்பார். இவருக்கு இணையாகப் பண்டாரி பாயின் நடிப்பும் அபாரமாக இருக்கும். இணை நடிகர்கள் அனைவருமே சிறப்பாக நடித்திருப்பார்கள். 



  முக்கியமாக டிடெக்ட்டிவ் கதாபாத்திரமாக வரும் ஜாவர் சீதாராமன் மனதில் இடம் பிடிக்கிறார். காட்சிக்குக் காட்சி பதட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். அதற்க்கு பலம் சேர்க்கும் விதமாகவே இசையும், ஒளிப்பதிவும் அமைத்திருக்கும். சரஸ்வதி ஸ்டோர்ஸ் ஓர்சேஸ்ட்ரா தான் இசையமைத்திருக்கிறார்கள். அதுவே நமக்குக் காட்சியின் தீவிரத்தை உணர்த்தும். அந்த உணர்ச்சிகளின் கண்ணாடியாக மாருதி ராவின் ஒளிப்பதிவு. "Neo-noir" படமென்பதால், காட்சிகளில் ஒளிக்கு முக்கியப் பங்கு உண்டு. கதாபாத்திரங்கள் முகத்தில் இருக்கும் அனைத்து உணர்ச்சிகளும் நமக்கு ஒற்றிக்கொள்ளும் அளவிற்குத் திறமையாகப் படம் பிடித்திருப்பார். படத்தொகுப்பும் கச்சிதமாக இருந்தது.

ஏவிஎம் தயாரித்ததிலேயே சிறந்த படமாகத் திகழ்தது. ஆடல் பாடல் இல்லாத முதல் தமிழ் திரைப்படம் என Limca book of recordsல் தடம் பதித்துள்ளது. 100 சிறந்த இந்திய படங்களில் பட்டியலில் இந்தப்படம் இடம் பெற்றுள்ளது. இந்தப்படம் அதன் பின் வந்த பல திரில்லர் படங்களுக்கு முன்னோடியாக வழி வகுத்தது. இப்போதிருக்கும் நாம் கொண்டிருக்கும் Netflix, Amazon prime மற்றும் Hotstar போன்ற இணையச் சினிமா அறிவை வைத்து பார்ப்பதை தவிர்த்து, பார்க்கும்போது 67 வருஷத்துக்கு முன்னாள் இப்படி ஒரு படைப்பை தமிழ் சினிமாவிற்குக் கொடுத்திருக்கிறார்கள் என நினைக்கும்போது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது.

- பெர்வின் சந்திரசேகர்

 

 

Comments