வங்காள
தேச பிரதமர் திருமதி ஷேக்ஹசினா இரு தரப்பு பேச்சு வார்த்தைக்காக அக்டோபர் முதல் வாரம்
இந்தியா வரவிருக்கிறார். இப்பேச்சு வார்த்தையில் இரு நாட்டின் முக்கிய பிரச்சினையான
தீஸ்தா நதி நீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட
நிலையில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தீஸ்தா நதி நீர் பங்கீட்டு ஆலோசனை கூட்டத்தை
எதிர்த்து பேச்சு வார்த்தையில் கலந்து மாட்டார் என அம்மாநில வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பல்லாண்டுகளாக நீண்டு கொண்டிருக்கும் தீஸ்தா என்னும் நீண்ட நதியின் பங்கீட்டு
விவகாரம் தற்போதைக்கு நிரந்தர முடிவுக்கு வராது என்பது நிதர்சனமாகிறது.
நீண்ட நதி
தீஸ்தா
எனும் நதி சிக்கிம் மாநிலத்தில் உருவாகும் மிக நீளமான நதியாகும். இந்திய எல்லையை கடந்து
வங்காள தேசத்திற்கு பாயும் வளமிக்க நதி. சிக்கிம் மாநிலத்திலிருந்து மேற்கு வங்கம்
வழியாக பிரம்மபுத்திரா நதியுடன் இணைந்து வங்காள தேசம் வரை நீண்டு இறுதியில் வங்காள
விரிகுடாவில் கலக்கிறது. பரப்பளவில் இந்நதியானது இந்தியாவில் 83 சதவீதமும் வங்காள தேசத்தில்
17 சதவீதமும் பரவியுள்ளது.
தீஸ்தா நதி விவகாரம்
1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற்ற
(அப்போதைய கிழக்கு பாகிஸ்தான்) தற்போதைய வங்காள தேசம் இந்திய நாட்டுடன் இணைந்து செயல்பட
தொடங்கியது.
1972 ஆம் ஆண்டு இணை நதி நீர் ஆணையமானது
(Join River Commission) இந்திய வங்காள நட்புறவு உடன்படிக்கையின் கீழ் நிதி நீர் தொடர்பான
அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண அமைக்கப்பட்டது. ஆனால் சில வருடங்கள் மட்டுமே
இந்த ஆணையம் செயல்பட்டது. பாகிஸ்தான் சார்பு அரசு ஆட்சியில் 1970 களிலிருந்து 2009
ஆம் ஆண்டு வரை நீடித்த காரணத்தால் இந்திய வங்காள தேசத்திற்கு இடையேயான உறவில் விரிசல்
ஏற்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கிடையேயான நீர் விவகாரத்தில் தீர்வு எட்டப்படாமலேயே
இருந்தது.
*2009* ஆம் ஆண்டு ஆவாமி லீக் கட்சி பெரும்பான்மையை
பெற்று ஷேக்ஹசினா வங்காள தேசத்து புதிய பிரதமராக
பதவியேற்றார்.இவரது தலைமையிலான அரசு இந்தியாவுடன் சூமுகமான உறவை ஏற்படுத்தியது. வங்காள
தேசத்திற்கு வழங்கும் நதி பங்கீட்டினை அதிகரித்து தருமாறு இந்தியாவை வலியுறுத்தினார்
பிரதமர் ஷேக்ஹசினா. இந்திய அரசு ஒத்துழைத்தாலும் மேற்கு வங்கம் மாநிலத்தின் தொடர் கடும்
எதிர்ப்பால் இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி ஏற்பட்டு வருகிறது.
மம்தா பானர்ஜியின் எதிர்ப்பு
2011 ஆம் ஆண்டின் இடைக்கால ஒப்பந்தத்தின் படி
தீஸ்தா நதியானது 42.5% இந்தியாவிற்கும் 37.5% வங்காள தேசத்திற்கும் பகிர்ந்தளிக்கப்படும்
என இரு நாடுகளும் முடிவு செய்தது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜூயின் கடுமையான
எதிர்ப்பால் ஒப்பந்தம் கைவிடப்பட்டது.
எதிர்ப்பின் காரணம்
தீஸ்தா
நதி நீர் மேற்கு வங்க மாநிலத்தின் நீர் பாசனத்திற்காகவும் கொல்கத்தா துறைமுகத்தை மேம்படுத்தவும்
பயன்படும் மிக முக்கியமான நீராகும். விவசாயிகளின் வாழ்வாதாரம் இந்த நதி நீரை பெருமளவில்
சார்ந்துள்ளதால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டே அரசு செயல் பட இயலும் என மம்தா
பானர்ஜி 2013 ஆம் ஆண்டு தெரிவித்தார். இதனால் 50% நதி நீர் பங்கீடு வேண்டும் என்ற வங்காள
தேசத்தின் கோரிக்கையை கடுமையாக எதிர்த்து வருகிறது மேற்கு வங்க மாநில அரசு.
மம்தா பானர்ஜியின் ஆலோசனை
மேற்கு
வங்க மாநிலத்தின் வடக்கு பகுதி முழுவதும் தீஸ்தா நதியினை சார்ந்திருக்கும் நிலையில்
டோர்சா (Torsa) போன்ற இரு நாட்டு எல்லைகளில் பாயும் நதியினை பங்கீடுவது நல்ல தீர்வாகும்.
மேலும் டோர்சா நதி வங்காள தேசத்தின் பத்மா நதியுடன் கலக்கிறது என்ற ஆலோசனையை தெரிவித்தார்
மம்தா பானர்ஜி.
வங்காள தேசத்தின் கோரிக்கை
ஆண்டின்
வறட்சி பகுதியான டிசம்பர் மற்றும் மே மாதங்களுக்கு
இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு வருடமும் 50 சதவிகித
நதி நீரினை பங்கீட்டு தருமாறு வலியுறுத்துகிறது வங்காள தேச அரசு. வறட்சியின்
காரணமாக மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். தீஸ்தா நதியானது
வங்காள தேசத்திற்கு நீர் பாசனம் மற்றும் மீன்பிடிப் பதற்காக பயன்படும் நான்காவது நதியாகும்.
இந்த நதி வெள்ளப் படுக்கை வங்காள தேசத்தில் 2,750 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது.
5 மாவட்டங்களில் ஒரு லட்ச ஹெக்டேருக்கும் அதிகமான நிலங்கள் தீஸ்தா நதி இழப்பினால் பாதிக்கப்பட்டிருப்பதாக
ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.
நதி நீரில் நட்புறவு
சிந்து
நதியை பாகிஸ்தானுடனும் சர்தார் நதியை நேபாளத்துடனும் பிரம்மபுத்திரா நதியை சீனாவுடனும்
பங்கீட்டு கொண்டிருக்கிறது நமது பாரத தேசம். மற்ற நாடுகளுடன் நதி நீர் விவகார மட்டுமல்லாமல்
நமது தேசத்திற்குள்ளும் நதி பங்கீட்டு விவகாரம் படர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியா
மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட அன்றே மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் தாவா சட்டம்,
நதிகள் வாரியம் சட்டம் 1956ல் இந்திய பாராளுமன்றத்தால் கொண்டுவரப்பட்டது. சட்டம் கொண்டு
வந்தாலும் நதி நீர் பிரச்சினை குறைந்த பாடில்லை. உதாரணத்திற்கு மகா நதி பிரச்சினை ஒடிசா
சத்திஸ்கர் மாநிலங்களுக்கு இடையேயும் வம்சதாரா நதி ஒடிசா ஆந்திர மாநிலங்களுக்கு இடையேயும்
காவிரி நீர் விவகாரம் கர்நாடகம் மற்றும் தமிழகத்திற்கு இடையேயும் இன்றளவும் இருந்து
கொண்டு தான் இருக்கிறது.
வருடம் முழுவதும் நீர் இருப்பதில்லை. வறட்சியான காலங்களில் மட்டுமே நதி நீர்
பங்கீடு முக்கியத்துவம் பெறுகிறது. மழைநீர் அதிகம் வருகையில் அதிகப்படியான நீரை வெளியிட்டு
வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. அரசுகள் இதற்கான தகுந்த வழிமுறைகளை வகுக்க வேண்டும்.வெள்ளம்
ஏற்படும் காலங்களில் வீணாகும் நீரை சேமிக்க தகுந்த நீரோடைகள் அமைக்க வேண்டும். நதி
நீர் ஒழுங்கு முறை வாரியம் நடுநிலையுடன் செயல்பட்டு வறட்சி காலங்களில் இரு தரப்பிற்கும்
சரியான அளவு நீரினை பங்கீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவையனைத்திற்கும்
மேலாக மக்கள் நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து நீர் இருக்கும் பொழுது சேமிப்பதன் அவசியத்தை
உணர்த்த வேண்டும். மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க தகுந்த முறைகளை பின்பற்ற
வேண்டும்.
இந்தியா
ஒரு வளர்ந்து வரும் நாடு. நமது நட்பு நாட்டினை ஒரு போதும் நம்மால் நிராகரிக்க இயலாது.
இதற்கான தகுந்த தீர்வினை உடனடியாக எடுக்க வேண்டும்.
ஆண்டுகள்
வளர இயற்கை அன்னையின் கரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன மனிதனின் மடத்தனமான செயல்களால்.
வளங்கள் வளர வழி வகை செய்வோம்.. எழுத்துக்கள்
இங்கே எழுச்சி பெறட்டும்!
Comments
Post a Comment