கானல் நீராய்ப் போய் விடுமோ- காவிரி? - களையன் சிவபாலன்


                                       
"  வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்,
தற்பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
வான் பொய்ப்பினும், தான் பொய்யா,    
மலைத் தலைய கடல் காவிரி;
புனல் பரந்து பொன் கொழிக்கும்;  "                
இப்பாடல்  பட்டினப்பாலை என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் வெள்ளி  கோள்   தான் இருக்கும் திசையான வடதிசையை விடுத்து தென்திசைக்குச் சென்றாலும், வானம்பாடிக் குருவிக்குத் தன்   உணவான மழைத்துளிகள் கிடைக்காமல் போகும் அளவிற்கு மழைமேகம் திசைமாறிப் போனாலும், காவிரி பொய்க்காது பொன் விளைவிக்கும் என்பதாகும்.  
    காவிரியில் இருந்து நீரைப் பெற ஒவ்வொரு ஆண்டும் நாம் பெருமவதிக்கு உள்ளாகிறோம். தமிழக மக்களின்  உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு நாம் உணவை உற்பத்தி செய்ய இயலவில்லை. 2013-14 ஆம் ஆண்டில் ஐம்பத்து மூன்று இலட்சத்து இருபத்து ஒன்பதாயிரம் டன்னும் 2014-15 இல் ஐம்பத்தேழு இலட்சத்து நாற்பத்தேழாயிரம் டன்னும் நெல் உற்பத்தி செய்தோம். மீதமுள்ள உணவுத் தேவையைப் பிற மாநிலத்திடம் இருந்து இறக்குமதி செய்து பூர்த்தி செய்ய வேண்டியதாயிற்று.  இப்படித் தமிழகத்தின் உணவு உற்பத்தியை உறுதிப்படுத்தும் காவிரியின் விரிவான வரலாற்றை ஈண்டு ஆய்வோம்.
    1924 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கும்   மைசூர் சமஸ்தானத்திற்கும் இடையே காவிரி நீர் பகிர்ந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அணைகள் கட்டும் உரிமைகளும் இதனுள்  அடக்கம். இந்த ஒப்பந்தம் ஐம்பதாண்டுகள் பூர்த்தியடைந்த நிலையில், இந்த ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது என்று  கர்னாடகம்   முழங்கியது. 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி கடானி, ஹேமாவதி, ஹேரங்கி போன்ற இடங்களில் அணைகளைக்  கட்டியது. இதனால் 11.2 இலட்சமாக இருந்த பாசன நிலங்களை    25 இலட்சமாக உயர்த்தியது.    
    1971-இல்  பெரும் தண்ணீர் தட்டுப் பாட்டைச் சந்தித்த தமிழகம் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது. பின்னர் அன்றைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்களின் வாக்குறுதியை நம்பி வழக்கைத் திரும்பப்பெற்றது. இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. 1983-ல் காவிரி விவசாயிகள் நல உரிமைச் சங்கம், உச்ச நீதி மன்றத்தில் "நடுவர் மன்றம்" அமைக்கக் கோரி வழக்குத் தொடுத்தது. உச்சநீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் வி.பி.சிங் கின் அரசு நடுவர் மன்றம் அமைத்தது. இதற்கிடையில் 1970 முதல் 1990 குள் 21 முறை நதிநீர்ப் பகிர்வு குறித்த பேச்சு வார்த்தைத் தோல்வியில் முடிந்தது. நடுவர் மன்றம், 25/6/1991-ல் இடைக்ககால தீர்ப்பு வழங்கியது. அதாவது ஒவ்வொரு ஆண்டும்  ஜூன் முதல்  மே  வரை 205 டி.எம்.சி நீர் வழங்கும் படி உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்னாடகாவில் பெரும் கலவரம் வெடித்தது.
   1992-ல் காவிரி ஆணையம் அமைக்கக் கோரி தமிழக அரசு வழக்குத் தொடுத்தது. இதன் விளைவாக 1998-ல் செயல்பாடற்ற காவிரி ஆணையம் அமைக்கக் பட்டது. மீண்டும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது.
   2007-ல் இறுதித் தீர்ப்பு வெளிவந்தது. 740 டி.எம்.சி என்ற மொத்த கொள் அளவில் 417 டி.எம்.சி நீர் தமிழகத்திற்கும் 192 டி.எம்.சி நீர் கன்னடத்திற்கும் என்று தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து கர்னாடக அரசு   மேல்முறையீடு செய்தது. 2013-ல் வந்த இறுதி தீர்ப்பில் 205 டி.எம்.சி நீர் வழங்கும் படி உத்தரவிட்டது,  உச்சநீதி மன்றம். ஆனால்  கன்னடமோ  தர மறுத்தது. பின்னர் மேல் முறையீடு செய்த  கர்னாடக அரசு, ஏற்கனவே வழங்கிய 192 டி.எம்.சி.  நீரை 177.25 டி.எம்.சி. யாகக் குறைத்தது. இந்த நீரைப் பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தும் நம்மால் சரியான நேரத்தில் சரியான அளவு நீரைப் பெற இயலவில்லை. தமிழகத்தில் மொத்தம் 17 பெரிய ஆற்றுப்  பாசனம், 61- பெரிய மற்றும்   சிறிய நீர்        பாசன அணைகள்  , 41,948   கால்வாய்கள் , ஏரிகள்  , குளங்கள் உள்ளன . 13,962 கோடி கன  அடி நீர் நிரம்பும் வாய்ப்பு  உள்ளது. ஆனால் காவிரியின்  காலடி     படாததால் அவையாவும் காய்ந்து கிடக்கின்றன.
   காவிரி நீர் கானல் நீராய்ப் போய் விடுமோ? என்ற ஏக்கம் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது. காவிரி நீரை நாம் முறையாகப் பெற அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தைத் திரும்பப் பெற்று,  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து உலகச் சட்டத்தின் கீழ் நீர் வழங்க வேண்டும். ரைபாரியன் சட்டம் மேல்நிலை      மற்றும் கீழ் நிலையின்படி,      ஒரு நதி எங்கு தொடங்குகிறது என்பதோ ; எங்கு முடிகிறது என்பதோ முக்கியமல்ல , இயற்கையாக தோன்றும் ஆற்றின் வழியைத்  தடை செய்யாமல் அந்த நீரைக் கொண்டு எப்பகுதி மக்கள் இயற்கையை வளர்கிறார்களோ     அவர்களுக்கே அந்த நதி சொந்தம். அந்த வகையில் காவிரி தமிழகத்திற்கே சொந்தம்.  தமிழகம் ஒன்றும் பிற மாநிலங்களின் வடிகால் அல்ல. காவிரி நீர் நம் உரிமை.  நம் உரிமைக்  குறளில் அணைகள்  தகர்ந்துடையட்டும். காவிரி நம் கழனிகளுக்கு அணி சேர்க்கட்டும்.   
     (குறிப்பு: மேற்கண்ட கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் பேராசிரியர் த.செயராமன் ஐயா அவர்கள் எழுதிய மீத்தேன்  அகதிகள், காவிரிப் படுகை பாதுகாக்கப் பட்ட வேளாண்   மண்டலம் ஏன்? மற்றும் ஆறுகளைப் பிடிங்கி விற்கும் இந்தியா  போன்ற புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது)                  



Comments

Post a Comment