நான் வீழ்வேனென்று நினைத்தாயோ - பூமணி



"சூழ்நிலை நம்மை   துரத்தும் பொழுது தான்,
நாம் தப்பித்து ஓட ஆரம்பிக்கிறோம்,
அப்படி பதியப்படும் கால்தடங்கள்; பலருக்கு பாதையாகக் கூட அமையலாம்"

    பாகிஸ்தானில் அமைந்துள்ள கோவிந்தபுரத்தில் 1935 ஆம் ஆண்டு
மில்கா சிங் (Milka singh) பிறந்தார். இவர் ஒரு சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். தன் இளமைப் பருவத்தில் பள்ளிக்கு தினமும் நடந்தே சென்று வருவார். இந்த தினமும் நடக்கும் காரணம் கூட, இவர் தடகள வீரர் ஆக காரணமாய் அமைந்து இருக்கலாம். இவர் பிறந்து 15 வருடங்கள் கழித்து இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. அப்போது நடந்த கலவரத்தில் இவர் தன் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் மூவரையும் தன் கண் முன்னே அடித்து வெட்டி கொலை செய்தனர். அந்தக் கலவரத்தில் செய்வதறியாமல் தவித்து கொண்டிருந்தார். அப்பொழுது மில்கா சிங்கின் தந்தை, *ஓடி விடு, இல்லையெனில் உன்னையும் சுட்டுக் கொன்று விடுவார்கள் "* என்று கூறியதை அடுத்து, இவர் உயிருக்கு அஞ்சி காட்டுவழி ஓடி, ஒரு இரயில் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். பிறகு டெல்லியில் உள்ள தன் சகோதரியின் வீட்டில் அடைக்கலம் அடைந்த இவர், சகோதரன் உதவியால் இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் மிகக் குறைந்த நேரத்தில் 5 மைல்களை கடக்கும் முதல் 10 வீரர்களுக்கு தான் அடுத்த கட்ட பயிற்சிகள் வழங்கப்படும். அதில் ஒருவராக வந்து, 400மீ ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற பிறகு தான், தன் திறமை இன்னதென்று அறிந்து கொண்டார்.


  
     1956  ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட மில்கா சிங், அப்போது தங்கப் பதக்கத்தை வென்ற அமெரிக்க வீரர் *சார்லஸ் ஜென்கின்ஸ்* என்பவரின் பயிற்சி பெறும் முறைகளை அறிந்து, அவரைப் போல் பயிற்சி பெற்று அடுத்த இரு வருடங்களில், அந்த அமெரிக்க வீரரின் டைமிங்கை கடந்தார். பிறகு 1958 ல் நடைபெற்ற காமன்வெல்த்தில் ஒரு தங்கப் பதக்கமும், ஆசியப் போட்டியில் இரண்டு தங்கமும் மற்றும் 1962 ல் வெள்ளியும் பெற்றார். 1960 ல் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 0.1 விநாடியில் வெண்கலப்பதக்கத்தை இழந்ததால் மிகுந்த   சோகத்திற்க்குள்ளானார். 1960 ல் பாகிஸ்தானில் ஒரு ஓட்டப்பந்தயத்திற்கு அழைப்பு வந்த போது பழைய நினைவுகளால் செல்ல மறுத்தார். பிறகு அப்போதைய பிரதமர் நேரு விடுத்த வேண்டுகோளினால் பாகிஸ்தான் வீரர் அப்துல் காலிக்கைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். அங்கு நடந்த பரிசளிப்பின் போது ஜெனரல் ஆயுப் கான், மில்கா சிங்கை நோக்கி, "இன்று நீங்கள் ஓடவில்லை, பறந்தீர்கள்" என்று கூறினார். அங்கே தான் அவருக்கு *"Flying Singh"*(பறக்கும் சீக்கியர்) என்று பட்டமளிக்கப்பட்டது. அப்போது மில்கா சிங், "பாகிஸ்தானில் ஓடும்போது, சிறு வயதில் என் உயிரைக் காப்பாற்ற ஓடியது ஞாபகத்திற்கு வந்தது" என்றார்.

     சூழ்நிலைகள் துரத்தினாலும், அதனை நமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதே சாணக்கியத்தனம்



Comments