எதிர்பார்ப்பு - மகாலட்சுமி



     விரும்பியது கைக்கு  எட்டினால்? நினைத்ததை சாதித்து விட்டால்? நமக்கு கிடைப்பதோ ஆத்ம  திருப்தி. ஆனால் எதிர்பார்ப்பதெல்லாம் நடப்பதில்லை என்னும் எதார்த்த நிலையில் மனதை நிலைப்படுத்த வேண்டும். இரண்டு வகையான எதிர்பார்ப்புகள் உண்டு. ஒன்று மற்ற மனிதர்கள் இப்படி இருக்க வேண்டும் அல்லது இது செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. இயந்திரமான இந்த நவீன உலகில் "ஜான் ஏறினால்;முழம் சறுக்குவது"என்பது தான் நம் வாழ்க்கை ஆகிவிட்டது. ஒருவரால் எதிர்பார்ப்பில்லாமல் வாழ்க்கை வாழ முடியுமா? அப்படி வாழ்ந்து வாழ்க்கையில் வெற்றியடைய முடியுமா? பிரச்சனைகளும், போராட்டங்களும் சூழ்ந்திருக்கும் வாழ்க்கையில் எப்படி எதிர்பார்ப்பில்லாமல் வாழ்ந்து வெற்றி அடைய முடியும்?


      எதிர்பார்ப்பு எங்கே இருந்தாலும், அங்கே ஏமாற்றத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். எங்கே ஏமாற்றம் இருக்கிறதோ; அங்கே எரிச்சல் தானாகவே வேகத் தடையாக குறுக்கிடும். காத்திருக்கப் பொறுமை இல்லாமல் கவனம் சிதறும். நீங்கள் நெருக்கமாக நினைப்பவர் மீது உங்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். பதிலுக்கு அவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் போது, அங்கே ஏமாற்றத்துக்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உங்களுக்கு மிக நெருக்கமானவர்களிடம் கூட எதிர்பார்ப்புகளை அதிகம் வளர்த்துக் கொள்ளாதீர்கள். சுத்தமாக எதிர்பார்ப்புகளே இல்லாமல் ஒருவரால் வாழ இயலாது; ஆனால் மிகக் குறைவான எதிர்பார்ப்புகளோடு வாழலாம். நம்முடைய அனுபவமும், மற்றவர்களுடைய அனுபவமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை அறிவுறுத்துவது எரிச்சலை ஏற்படுத்துமே தவிர, நாம் சொல்வதை கேட்க வைக்காது.   
      வெற்றியை எதிர்ப்பார்க்காததால் தோல்வி பற்றிய பயம் வராது. பயம் இல்லாத இடத்தில் பதற்றம் இருக்காது, பதற்றம் இல்லாத இடத்தில் கவனம் சிதறாது, கவனம் சிதறாத போது செய்வதிலேயே மகிழ்ச்சி கிடைக்கும், மகிழ்ச்சியுடன் செயல்படும்போது முழுத்திறமையும் வெளிப்பட்டால் வெற்றி நிச்சயம். ஒரு தாய் குழந்தையிடம் காட்டும் பிரியத்தின் முழுமையான தீவிரம் இருக்கும். ஆனால் எதிர்பார்ப்பு இருக்காது.
     தேவையினால் தேடல், தேடலினால் எதிர்பார்ப்பு, எதிர்ப்பினால் ஏமாற்றம், ஏமாற்றத்தினால் கோபம், கோபத்தினால் இழப்பு, இழப்பினால்  தேவை இப்படி ஏதாவது ஒன்றினால் மற்றொன்று இருக்கும். ஒரு உணர்வை மற்றொரு உணர்வு ஆளுமை செய்யும் பொழுது எண்ணங்கள் அலைக்கழிக்கப்படுகின்றது. எதிர்பார்க்கப்படும் இடத்தில் ஒருவரின் வாழ்க்கை மற்றவரால் கற்பனைத் தோற்றம் கொள்கிறது. பிடிக்காத பிம்பங்களை பார்க்காமல் இமைகள் மூடிக் கொள்ளும் வேலைகளில்; எண்ணங்கள் திறந்து கொள்கின்றன. எதிர்பார்ப்புகளை மூட மனதுக்கு தெரிவதில்லை. "திறக்கும் என்று நினைத்த எத்தனை கதவுகள் மூடப்பட்டிருக்கும்; நடக்கும் என்று நினைத்த எத்தனை வாய்ப்புகள் நழுவி போயிருக்கும்." எதிர்பார்ப்புகளும், எண்ணங்களும் வாழ்க்கையை வழி நடத்திச் செல்கின்றன, செல்லும்...குறைந்த எதிர்பார்ப்போடு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து மகிழ்வோம்!!
     வாழ்க வளமுடன்!



Comments