அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!!!
நான் உங்கள் அருள்மணிகண்டன் பாலசுப்பிரமணியம். நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்
போதே எனதுள் தோன்றிய ஓர் எண்ணம். அன்று எனக்கு அது தொடங்கிடவோ, நடத்திடவோ துணிவும்
இல்லை, துணையும் இல்லை. அன்று உதிர்த்த எண்ணம் எண்ணமாகவே மறைந்தது.
கல்லூரி நான் இணைந்த நாள் பல கடந்து சென்று கொண்டே இருந்தது. ஆனால் அவ்வெண்ணம்
எனை விட்டு விலகுவதாய் தெரியவில்லை. ஏனோ ஆசையுடனே நாட்கள் கழித்தேன்.
அன்று சரியாக மதிய வேளையில்... நான் கடைக்கு சென்றுவிட்டு என் ஹாஸ்டல் அறைக்குச்
சென்று கொண்டிருந்தேன், கையில் ஒரு பையுடன். சாலையில் ஓர் பெரிய வாகனம் சற்று சாலையின்
ஓரம் தள்ளி வேகமாக வந்தது. அனைவருக்கும் இருப்பதுதானே... நானும் பயத்துடன் சற்று ஒதுங்கினேன்.
அவ்வாகனம் கடந்து சென்றது, ஆனால் என்னால் முடியவில்லை. ஏன்? முகம் திரும்பிப் பார்த்தேன்,
கையில் பை இருந்தது என்னிடம் இல்லை, சாலை ஓரம் அமர்ந்திருந்த அந்த ஏழைத்தாயிடம். ஏனோ
அவருக்கே நான் வாங்கி வந்ததாவும் கொடுப்பதாவும் எண்ணி இருக்குமோ அவரது மனம் அந்நொடியில்.
நான் சற்று மெதுவாக அவரின் கையில் இருந்து பையை இழுத்துக் கொண்டு விரைந்தேன். ஓர் மனிதனாய்
நான் செய்திருக்க வேண்டியதென்னவோ... அதை அவரிடமே கொடுத்துவிட்டு வந்திருக்க வேண்டும்.
உண்மையில் அவரிடமே அதை கொடுத்து வர அதில் சாப்பிட ஏதும் இல்லை என்பதே என் கவலை. அதில்
இருந்ததோ... அசைன்மெண்ட் - க்கு வாங்கிய பத்து பேப்பரும் ரெண்டு பேனாக்கள் மட்டுமே.
அன்று இரவு தளர்ந்திருந்த என் எண்ணம்
மீண்டும் உதிர்த்தது. அந்த ஏழைத்தாய்க்கு என்னளவு பசி இருந்திருந்தால் அதை அவர் அப்படி
ஆர்வமாய் பிடிக்க தோன்றி இருக்கும் என்று எண்ணிக் கொண்டேன்.
என் பள்ளிப்பருவத்தில் தோன்றிய எண்ணத்தை ஈடேற்றிட
முடிவு செய்து... என் கல்லூரி நண்பன் சரண்ராஜிடம் என் ஆசையை எடுத்துரைத்தேன். நான்
துணை நிற்பதாய் அவன் என்னிடம் கூறினான்.
துணையும் வந்தது; துணிவும் வந்தது.
என் நெருங்கிய தோழிகள் மற்றும் என் ரூம்மெட்ஸ் அவர்களிடம் இருந்து வாரம் நபருக்கு
ரூபாய் பத்து வீதம் சேகரித்தேன். அவனும் அவனின் நண்பர்களிடம் சேகரித்தான். சரியாக நாங்கள்
ஒரு மாதம் கழித்து சேகரித்த பணத்தைக் கொண்டு எவ்வளவு உணவு வாங்க முடியுமோ அவ்வளவு வாங்கினோம்.
நாங்கள் ஒரு பத்து பேர் சேர்ந்து எங்கள் கல்லூரி சுற்றி உள்ள இயலாதவர்களுக்கு உணவை
அளித்தோம். அன்று என் மனம் என்னளவு குளிர்ந்து ஆனந்தமாய் இருந்தது என்பது சொல்லில்
அடங்காது.
அன்று முதல் அதை விரிவுபடுத்தி சில நூறு நபர்களை இணைத்து அனைவரின் பங்களிப்போடு
வீறு நடை போட தொடங்கியது எண்ணமாக இருந்தது ஓர் அற்புத செயலாக... அதுவே எங்களின்
"அறம் அன்றாடம்"
அன்று முதல் மாதம் ஒரு முறை எங்களால் முடிந்த வரை நாங்கள் அளித்து வந்தோம்.
சிறிது சிறிதாக செய்த எங்களின் "அறம் அன்றாடம்" குழு சற்று உயர்ந்து ஓர்
முதியோர் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு உணவளித்தது, அதுமட்டுமல்ல அங்குள்ள தாத்தா
பாட்டியிடம் உடன் அமர்ந்து சிரித்துப் பேசி மகிழ்வித்து மனக் கணம் குறைத்திட வழியாய்
நின்றது.
என் ஒருவனின் எண்ணம் அதே எண்ணத்தில் உள்ள அத்துணை நல்லுள்ளங்களையும் இணைத்து
இன்று "அறம் அன்றாடம்" என்று சில நூறு பேர்கள் அளவிற்கு சென்றடைந்திருக்கிறது
என்றால் நான் கூறுவது ஒன்றே ஒன்றுதான்...
" நல்லதை செய்ய துணிந்திடு; இணைந்திட கரங்கள் இங்கு நிறைய உண்டு
" என்பதை உணர்ந்தேன்.
"பசியென்பது இருக்கும் வரை "அறம் அன்றாடம்" கரங்கள் தாலாது என்ற
நம்பிக்கையுடன்...
-அருள்மணிகண்டன்.பா
"அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி"
துணையும் வந்தது ..துணிவும் வந்தது..👌
ReplyDeleteநான் அன்று சொன்ன வார்த்தைகள்.... மனதில் இருந்து நீங்க வில்லை... I ll support u Mani.....
ReplyDelete