குறிக்கோள் - மகாலட்சுமி


உலகில் பிறந்த அனைவருமே வாழ்க்கையில் உயரவேண்டும், முன்னேற வேண்டும், வளர வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். நாம் முன்னேற, உயர, வளர வேண்டுமானால் உயர்ந்தக் குறிக்கோள் ஒன்றை வரையறுத்துக் கொண்டு உழைக்கத் தயாராக வேண்டும். எது உங்களின் குறிக்கோள் (பேஷன்) என்பதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். எது உங்களை மிகவும் ஈர்க்கின்றது? எதனைச் செய்யும்போது உங்கள் மனம் மகிழ்ச்சியில் மலர்கின்றது?எது உங்களை உயிர்ப்புடன் உறைய வைக்கின்றது? எதனை எப்போதும் விடாப்படியாகப் பிடித்துக்கொண்டு இருக்கிறது உங்கள் மனம்? உங்கள் குறிக்கோள் என்னவென்று உங்கள் இதயம் கண்டு அடையும்வரை ஓயாதீர்கள்.
     உங்கள் குறிக்கோளை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் முடியாது என்னும் எண்ணம் உடனே வந்து நம்மிடம் ஒட்டிக்கொள்ளும். உதாரணமாக, உங்களால் ஆயிரம் கிலோமீட்டர் நடக்க முடியுமா? என்று கேட்டால் முடியாது என்னும் பதிலை உடனே கூறிவிடுவீர்கள். இதுவே உங்களால் ஆயிரம் கிலோமீட்டர் தூரம், ஆயிரம் நாட்களில், நடக்க முடியுமா? என்று கேட்டால் ஏன் முடியாது எவ்வளவு சுலபமான விஷயம் என்று உற்சாகமாக சிரித்தபடியே கேட்பீர்கள். குறிக்கோளை அடைய முடியுமா? என்று ஏன் ஒட்டுமொத்தமாக சிந்திக்கிறீர்கள். உயர்ந்த குறிக்கோள்களை காலம் தாழ்ந்து செய்து முடித்தாலும் மாபெரும் வெற்றிதான். இனி தயக்கமோ, தாமதமோ இல்லாமல் முதல் அடியை எடுத்து வைத்துவிடுங்கள். வெற்றி கிடைக்குமா என்று சந்தேகத்துடன் சிந்திக்க வேண்டாம். நான் நம்புவது நடந்தேத் தீரும் என்னும் எண்ணத்துடன் சிந்திக்கவேண்டும்.  
      குறிக்கோள் அற்ற வாழ்வு சென்றடைய வேண்டிய இடத்தை அறியாமல் பயணம் செய்வது போல ஆகும். உங்கள் நோக்கம் நிலவாக இருக்கட்டும்; ஒருவேளை அதில் தோற்றால் நீங்கள் ஒரு நட்சத்திரத்தை வெல்லக் கூடும்.
உன்னதமான குறிக்கோளை நோக்கி மனம் தளராமல், உறுதி குலையாமல், தடைகளை மீறி நடந்து கொண்டே இரு;உன் குறிக்கோள் உன்னை உயர்த்தும். ஒருவரின் வெற்றி அவரின் பேரார்வம் இரண்டும் பின்னிப் பிணைந்தவை. ஆர்வம் இல்லை எனில் வெற்றி இல்லை. குறிக்கோள் இல்லையெனில் தனிமனித அடையாளம் இல்லை. அடையாளத்தை ஏற்படுத்த அடி வைப்போம்.
    வாழ்க வளமுடன்!




Comments

Post a Comment