வாழி காவேரி! - களையன் சிவபாலன்


  உலக வரலாற்றில் தமிழகம் தனிச்சிறப்பு வாய்ந்தது  . தமிழகத்தின் தட்ப வெப்ப நிலையும் வாழுதற்கேற்றது. "என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்! ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்?" என்ற வரிகளுக்கிணங்க எல்லா இயற்கை வளங்களையும் நம் இயற்கை அன்னை நமக்கு அள்ளிக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறாள். அதைப்  பங்கு  பிரித்துக் கொள்வதில் தான் பங்காளி சண்டை வந்து விடுகிறது. இந்தியச் துணை கண்டத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டின் வளங்கள் யாருக்குச் சொந்தம் என்ற வினாவிற்கான விடையை உலகச் சட்டம் வரையறுக்கிறது. ஒரு பகுதியில் உள்ள வளங்கள் அனைத்தும் அப்பகுதி மக்களுக்கே சொந்தம் என்கிறது உலகச் சட்டம். ஆனால் எல்லா வளங்களையும் தாமே அனுபவிக்கும் அளவிற்கு சயநலம் பிடித்தவர்கள் இல்லை தமிழர்கள். 'யாதும் ஊரே ; யாவரும் கேளிர்' என உலகிற்கு உரக்கச் சொன்னது தமிழினம். தான் சொன்னது போலவே 'வந்தாரை வாழ வைக்கும் தமிழகமாகவே' நம் மாநிலம் திகழ்ந்து வருகின்றது  . நம் வளங்களை யார் வேண்டுமானாலும் பயண்படுத்த அனுமதிப்போம் ஆனால் ஒருபோதும் சூரையாட அனுமதிக்க மாட்டோம். இப்படி நம் தமிழகத்தின் வளங்களைச் சூரையாடும் பல திட்டங்களை எதிர்த்து மக்கள் குறள் கொடுக்கின்றனர். அவற்றில் முத்தாய்ப்பாகப் பேசப்பட வேண்டியது காவிரிப் படுகையில் அமலாகவிருக்கும் மீத்தேன் எடுக்கும் திட்டம்.
   காவிரி  படுகை, பஞ்சம் என வந்தவர்களுக்குத் தஞ்சமளித்த பூமி. நாட்டின் உணவு உற்பத்தியை உறுதி படுத்துவதோடு மட்டுமல்லாமல் தமிழ் நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்குகிறது நம் காவிரிப் படுகை. சங்க காலத்திலிருந்தே மக்களின் துயர் துடைத்திருக்கிறாள் காவிரித் தாய். தமிழகத்தில்   பாய்ந்தோடி வளம் சேர்க்கும் காவிரியைப் பற்றி சிலப்பதிகாரம் இவ்வாறாக நவில்கிறது,
   “பூவார் சோலை மயில் ஆடப் புரிந்து
குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகு அசைய நடந்தாய்
வாழி காவேரி”


         நிலவளம், நீர்வளம், தட்ப வெப்ப நிலை என விவசாயம் செய்வதற்கான அனைத்துக்   கூறுகளும் ஒருங்கே அமையப்பெற்ற நம் காவிரிப் படுகையில் விவசாயத்தை மேம்படுத்தும் 
திட்டங்கள் அல்லாது வேறுபல திட்டங்கள் தேவையற்ற ஒன்றாகும். மீத்தேன் எரிவாயு எடுத்து அதைக்கொண்டு பொருளாதாரத்தை உயர்த்துவது என்பது நல்ல திட்டம் தான். ஆனால் அதற்கான களம் நம் காவிரிப் படுகை  அல்ல! இது போன்ற திட்டங்களை அரசு விளை நிலங்களில் அமல்படுத்தாமல் களர் நிலங்களில் அமல்படுத்த வேண்டும். மீத்தேன் தான் உங்கள் ஒரே குறிக்கோள் என்றால், விளைநிலங்களை உழும்போது பெருமளவு மீத்தேன் வெளியாவதாகக் கண்டறிப்பட்டுள்ளது. அவற்றை எப்படி சேகரித்து,  பயன்பாட்டுக்கு உரியதாக மாற்றுவது என்பது குறித்து இளம் விஞ்ஞானிகளை    சிந்திக்கத் தூண்டுங்கள் .     காவிரிப் படுகை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்" ஆக அறிவிக்கப்பட வேண்டும். இன்று போல் என்றும் காவிரித் தாயின் மடியில் கதிர்கள் தவழந்து களிப்பூதிட்டம்.
          வாழி காவேரி!
              வாழி அதன் சூழ் நிலங்கள்!

Comments