உண்ணுவதெல்லாம் உணவல்ல...- சிவபாலன்

 
  இந்த உலகத்திலேயே மிகவும் உன்னதமான பொருள், மிகவும் தூய்மையான பொருள் என்று சொல்லக்கூடியப் பொருள் தாயினுடைய  ‘தாய்ப் பால்'. அந்தப் புனிதமானத் தாய்ப் பாலிலே நச்சு கலந்திருப்பது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறிப்பட்டது.அந்தத் தாய்ப் பாலில் உலகின் முதன்மையானப் பூச்சிக்கொல்லியான 'கிளைபோஸேட்' ன் நச்சுப்பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படியானால் ஒரு தாய் தானே தன் குழந்தைக்குத் தாய்ப் பாலோடு விஷத்தை ஊட்டுகிறாள் என்று அர்த்தம். இந்த அவல நிலைக்கு என்ன காரணம்? வயல்களில் பூச்சிக்கொல்லிகளின் அதிக அளவிலான பயன்பாடே இதற்குக் காரணம் எனத் தெரியவந்தது. 1962 ஆம்' ரேச்சல் கார்சன்' எழுதிய ‘தி சைலன்ட் ஸ்பிரிங்' என்னும் புத்தகம் பூச்சிக்கொல்லிகளின் அதிகபடியான பயன்பாட்டால் ஏற்படும் கொடூரமான விளைவுகளை வெளிச்சம்போட்டுக் காட்டியது.இதன் விளைவாக பல பூச்சிக்கொல்லிகள் சர்வதேச சந்தையிலும் இந்தியச் சந்தையிலும் விற்பதற்குத் தடை போடப்பட்டது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் பூச்சிமருந்தின் சராசரி  தினசரி உட்கொள்ளும் அளவு 1.25மில்லிகி/கிலோ நபரின் எடை என்று கூறப்படுகிறது. ஆனால் நாம் உட்கொள்ளும் அளவு இதை விட அதிகம். அதன் விளைவாக நமக்குப் பல பெயர் தெரியாத நோய்கள் வருகின்றன. எந்த ஒரு தீயப்பழக்கங்களும் இல்லாதவர்கள் கூட புற்றுநோய் போன்ற பல கொடிய நோய்களுக்கு உள்ளாகுவதை நம்மால் காணமுடிகிறது. இதற்கெல்லாம் காரணம் நாம் உண்ணும் உணவுகளும் நம் உணவு முறையும் தான். உணவையே மருந்தாக உட்கொண்டு வாழ்ந்த நாம் இன்று மருந்தையே உணவாக உட்கொள்ள ஆரம்பித்துவிட்டோம். வயது வேறுபாடே இல்லாமல் அனைத்து வயது மக்களும் தொடர்ச்சியாக மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர். அரிசியைக் காட்டிலும் கோதுமையிலும் சிறுதானியங்களிலும் தான் அதிகம் ஊட்டச்சத்து உள்ளது என்ற ஒரு தவறான எண்ணம் நம் மக்களிடையே நிலவுகின்றது. அரிசி மிகச்சிறந்த சத்துள்ளள உணவுதான் ஆனால் நாம் அதை உட்க்கொள்ளும் முறைதான் தவறு. அரிசியின் மேலுள்ள ‘அலிரோன்’ என்னும் அடுக்கில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் அரவையின் போது நாம் அந்த அடுக்குகளெல்லாம் போகும் அளவிற்கு அரைத்து விடுகின்றோம், மீதமுள்ள கார்போகைட்ரேட்டை மட்டுமே உண்கின்றோம். அதுவே நீரிழிவு போன்ற பல நோய்களுக்கு விதை போடுகின்றது. நாம் உண்ணுகின்ற அரிசி எந்த அளவிற்கு வெண்மையாக இருக்கின்றோதோ அந்த அளவிற்கு அதன் மேலடுக்கு நீக்கப்பட்டு பட்டைத்தீட்டப்பட்டுள்ளது என்று அர்த்தம். இதற்கெல்லாம் என்ன தான் தீர்வு? மக்கள் இயற்கை முறை விவசாயத்தை ஆதரிக்க வேண்டும். இயற்கையாக உருவாக்கப்படும் பொருட்கள் அதிக அளவில் சந்தையில் விற்பனையானால் அதன் தேவை அதிகரிக்கும், பிறகு விவசாயிகள் தாமாக இயற்கை விவசாயத்தை முன்னெடுப்பார்கள். நாம் அந்த நெல்லை வாங்கி அருகிலுள்ள அரவை ஆலையில் பழுப்பு நிறத்திற்கு அரைத்துக்கொள்ளலாம். விவசாயிகளுக்கும் என்னுடைய அன்பான வேண்டுகோள்.. நீங்கள் வெறும் உணவுப் உற்பத்தியாளர்கள் மட்டுமல்ல அதே உணவை உட்கொள்ளும் நுகர்வோரும் நீங்கள் தான். ஆகையால் நம் உணவில் நாமே விஷத்தைக் கலக்கலாமா? நம்முடைய இலக்கு இலாபம் அடைவது தானே தவிர அதிக மகசூல் பெறுவது இல்லை. இன்றைய விவசாயிகள் எல்லாம் தேவைக்கு அதிகமாக பல்வேறு உரங்களிலும் பூச்சிக்கொள்ளிகளிலும் அதிக பணத்தைச் செலவிடுகின்றனர்.    பூச்சிகள் பொருளாதார சேத நிலையை ஏற்படுத்தும் பட்சத்தில் நாம் பூச்சிமருந்தின் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்தலாம். காய்கறிகளோடு கைகோர்த்து வரும் நச்சுகளுக்கு என்ன செய்வது? என்று கேட்டால்.. தக்காளி, பச்சை மிளகாய், வெண்டை போன்றவற்றை நம் வீட்டிலே வளர்க்கலாம். வீட்டில் வளர்க்க முடியாதவற்றைச் சந்தையிலிருந்து வாங்கி அவற்றை உப்பு நீரில் கழுவுவது, மேல் தோலை செதுக்கிவிட்டு பயன்படுத்துவது போன்ற செயல்கள் மூலம் ஓரளவு நம்மை நச்சிலிருந்துக் காத்துக் கொள்ளமுடியும். இத்தனையும் செய்துவிட்டு வாரத்திற்கு நான்கு நாள் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டால் நாம் இதுகாரும் எடுத்த முயற்சிக்கு பலனில்லாமல் போய்விடும். உங்களுடைய குழந்தைகளுக்கும் உணவகத்தின் ருசியைக் காட்டி வளர்க்காமல் வீட்டு சாப்பாட்டையே ஊட்டி வளருங்கள். 'அன்பு கலக்காமல் தயாரிக்கப்படும் ஒரு ரொட்டித் துண்டு கூட சுவைக்காது.. அது கசக்கும்..’ என்கிறார் கலில் இப்ரான். ஆகையால் நமக்குப் பிடித்தமானவர்களுக்கு அன்பும் அக்கறையும் கலந்த ஆரோக்கியமான உணவை சமைத்துத் தருவது நம் கடமை. ‘உண்ணுவதெல்லாம் உணவல்ல' என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவை உண்டு ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனந்தமாய் வாழுங்கள்!

Comments

Post a Comment