கோபம் நம் வாழ்வின் சாபம் - மகாலட்சுமி



கோபம் எப்போதெல்லாம் வருகிறது? நம் சுயமரியாதை சுடும்போது,நம் வார்த்தைகள் புறக்கணிக்கப்பட்டு, அலட்சியப்படுத்தப்பட்டு,நிராகரிக்கப்பட்டு,அவமானப்படுத்தும் போது கோபம் வருகிறது.அறிவை பயன்படுத்தாத கோபம் அழிவைத்தான் தரும் எனும் நிதர்சன உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
     கோபம் என்பது மனிதர்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிக மோசமான வைரஸ் ஆகும். நான் செய்வதும் சொல்வதும் தான் சரியானவை, மற்றவர்கள் செய்வது எல்லாம் தவறு என்கிற மனித எண்ணத்தின் சிறு புள்ளியில் இருந்து தான் பெரும்பாலான கோபங்கள் பிறக்கின்றன.உலகின் மாபெரும் புனிதமான செயல் தான் ஒரு தாயின் கருவறையில் இருந்து பிறக்கும் குழந்தைகள்.அதற்கு எடுத்துக் கொள்ளும் கால அளவை விட,நம்மிடத்திலிருந்து ஒரு சில வினாடிகளில் பிறக்கும் கோபம் எவ்வளவு கடுமையான செயல் என்று உணர வேண்டும்.
     இப்போது பெரும்பாலான மனிதர்கள் கோபம் என்ற சொல்லைக் கூட கோபத்தோடு தான் சொல்வார்கள்.'ஏய் நான் கோவமா இருக்கேன்' என்று ஏனென்றால் கோபமாக இருக்கும் போது தான் கோபம் என்ற சொல்லை பயன்படுத்துவோம்.நீங்கள் இயல்பான நிலையில், மன மகிழ்ச்சியில் இருக்கும் போது தனியே அமர்ந்து சினத்தைப் பற்றி சிந்தியுங்கள். கோபத்தினால் எதாவது நன்மைகள் உண்டா? என்று அப்போது தான் நம் வாழ்வின் உண்மையை உணர முடியும்.
     பூட்டு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பூட்டுகள் மட்டும் தயாரிக்கப்படுவதில்லை.அந்த பூட்டுகளோடு சேர்த்து சாவிகளும் தயாரிக்கப்படுகின்றன. அதுபோலதான்,நமக்கு கோபம் ஏற்படும் போது கோபத்தைக் கட்டுப்படுத்தி,அந்த பிரச்சினைக்குத் தீர்வான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். உலகில் எல்லாமுமே நம்முடைய விருப்பப்படியும்,திட்டத்தின்படியும் நடக்கப்போவதில்லை என்கிற யதார்த்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
     கோபம் இல்லாத மனிதனது வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் தித்திப்பாய் நகர்ந்தது கொண்டிருக்கும் என்பதை மறக்க வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்த எனக்கு தெரிந்தது 'சகிப்புத் தன்மையை அதிகப்படுத்த வேண்டும்'.
     பேசாத சொற்களுக்கு நீ எஜமான்!
     பேசிய சொற்கள் உனக்கு எஜமான்!
கோபத்தோடு கோபமான சொற்களை பேச வேண்டாம்.சினத்தோடுப் பேசி அடுத்
தவரின் மனதைக் கணப்படுத்த வேண்டாம்.
     "வாழ்க வளமுடன்".

Comments

Post a Comment