கடந்த மாதம் முத்தலாக் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் ஒப்புதலுடன் ஆகஸ்ட் 1ஆம் தேதி சட்டம் ஆக்கப்பட்டுள்ளது.
ஆண் பெண் சமத்துவத்தை பாதிக்கும் எந்தவொரு சமயரீதியிலான நடைமுறைகளும் சமூகத்திற்கு புறம்பானது.பேரரசர்களின் காலந்தொட்டே பெண்கள் ஆண்களின் அடிமைகளாக நடத்தப்பட்டு வருகின்றன. நவீன தொழில்நுட்ப யுகத்தில் இதன் நிலைப்பாடு குறைந்திருக்கிறதே தவிர முற்றிலும் ஒழிந்த பாடில்லை. பல முஸ்லிம் பெண்களின் வாழ்வை கேள்வி குறியாக்கி வரும் முத்தலாக் எனும் இஸ்லாமிய திருமண விவகாரத்து முறையும் இதில் ஒன்று.
முத்தலாக் என்றால் என்ன?
இஸ்லாமிய சமூகத்தில் கணவன் மனைவிக்கு தலாக் என்று மூன்று முறை கூறி விவகாரத்து செய்யும் முறை. இஸ்லாம் மதத்தில் திருமண பந்தம் என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. இஸ்லாமிய மதத்தில் 'தலாக்' என்றால் *விவாகரத்து* என்று அர்த்தம். முத்தலாக் பெரும்பாலும் சுன்னி முஸ்லிம் பிரிவினருக்கு இடையே வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தில் ஐந்து முறைகளில் விவகாரத்து செய்யப்படுகிறது.
1 திருமண உறவிலிருந்து பிரிதல் என கணவன் மனைவி இருவரும் பரஸ்பரமாக முடிவு செய்தல்
2 மனைவி கணவனிடம் விவகாரத்து கோருதல் இதன் பெயர் குல்லா (kulla) என்றழைக்கப்படுகிறது
3 தலாக்-ஈ-ஹசான்
கணவன் மனைவிக்கு 90 நாட்களில் மூன்று முறை தலாக் என கூறி விவகாரத்து செய்தல்.(30 நாட்களுக்கு ஒரு முறை). தலாக் கூறும் கால இடைவெளி தம்பதிகள் இருவரின் மனமாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
4 தலாக் - ஈ - ஆஷான்
இம்முறையில் தலாக் கூறி 90 நாட்கள் இடைவெளிக்கு பிறகு விவகாரத்து அளிக்கப்படுகிறது
5 தலாக் - ஈ - பித்தாட்
ஒரே நேரத்தில் தலாக் என மூன்று முறை கூறி விவகாரத்து செய்யும் முறை. இம்முறை முத்தலாக் எனவும் அழைக்கப்படுகிறது. இம்முறை தான் இஸ்லாமிய சமூகத்தில் சர்ச்சைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது. இவ்விவகாரத்து முறையில் திருமண தம்பதிகளின் மனமாற்றத்திற்கு கால இடைவெளி வழங்கப் படுவதில்லை.
முத்தலாக்கை எதிர்ப்பதற்கான காரணம்
கணவன் மனைவி உறவில் பெண்களுக்கான உரிமை மறுக்கப்படுகிறது. சமுதாய வாழ்வில் முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் கணவன்மார்களால் பெரிதும் புறக்கணிக்கப்படுகின்றனர். நவீன தொழில்நுட்ப காலத்தில் குறுஞ்செய்தி மூலமாகவோ மின்னஞ்சல் வழியாகவோ தலாக் என எளிதில் கூறி விவகாரத்து செய்யப்படுகிறது. இதனால் பெரும்பாலான பெண்கள், குழந்தைகள் ஆதரவின்றி தனித்து விடப்படுகின்றன. மேலும் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானிலேயே முத்தலாக் தண்டனைக்குரியது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் முத்தலாக் மீதான தடை
2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உடனடியாக தலாக் கூறி விவகாரத்து செய்யும் முறையை தடை செய்து உத்தரவிட்டது. மேலும் பாராளுமன்றம் முத்தலாக் தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியது இதன் மூலம் இந்தியா உலகில் முத்தலாக்கை தடை செய்யும் 23 வது நாடாக உருவெடுத்தது.
பிற நாடுகளில் முத்தலாக்
உலகிலேயே முதன் முதலாக எகிப்து முத்தலாகை தடை செய்தது.பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளும் இதில் அடங்கும்.
முத்தலாக் மசோதா
16 வது மக்களவையில் மோடி தலைமையிலான அரசு முத்தலாக் மசோதாவை முதன் முதலாக தாக்கல் செய்து நிறைவேற்றியது. ஆனால், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் சட்டமாக நிறைவேற்ற இயலவில்லை. தற்போதைய நிலையில் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
#முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் கணவன்மார்களை மனைவியின் புகாரின் பேரில் கைது செய்து மூன்று ஆண்டுகளுக்கு சிறை தண்டனை அளித்தல்
#சிறையில் அடைக்கப்பட்ட கணவன் ஜாமினில் வெளிவர இயலாது
#மாஜிஸ்டிரேட் முன்பு மனைவியின் ஒப்புதலுடன் ஜாமின் வழங்கலாம்
#மேலும் இவ்வழக்கு கிரிமினல் குற்ற வழக்காக எடுத்துக் கொள்ளப்படும்
#பாதிக்கப்பட்ட பெண் அல்லது அப்பெண்ணின் உறவினர்கள் மட்டுமே வழக்கு தொடுக்க முடியும்.
# பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருளாதார உதவியினை கணவன் செய்ய வேண்டும்.
சட்டத்திற்கு எதிரான குரல்கள்
முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தை அணுகுவது கணவனுடன் வாழ்வதற்கு மட்டுமே அன்றி மூன்று ஆண்டுகள் சிறையில் அடைப்பதற்கில்லை.
சட்ட பிரிவில் பாதிக்கப்பட்ட மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருளாதார உதவிகளை கணவர் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. கணவன் சிறையில் இருக்கும் காலத்தில் மனைவிக்கு எவ்வாறு பொருளாதார உதவியினை செய்வார்கள் என்பது கேள்வி குறியாகிறது.
தலாக் சொல்லாமல் கணவன் பிரிந்து சென்றால் மனைவியின் நிலைமை என்ன ?
கணவன் மனைவிக்கிடையேயான பிரச்சினைகளை கிரிமினல் வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
நிக்காஹ் ஹலாலா (விவாகரத்து செய்து கொண்ட தம்பதிகள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் மனைவி வேறொரு ஆணை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற பின்பே முதல் கணவரை மீண்டும் திருமணம் செய்து கொள்ள இயலும்) , பலதாரமணம் குறித்து இச்சட்டத்தில் எந்த பிரிவும் இடம்பெறவில்லை. மேற்கண்ட காரணங்களால் முத்தலாக் சட்டம் எதிர்கட்சியினரால் எதிர்க்கப்பட்டது . இருப்பினும் அவைகளில் பெரும்பான்மை இருந்த ஒரே காரணத்தினால் மோடி அரசு எதிர் கட்சிகளின் ஆலோசனைகளை மறுத்து மசோதாவை சட்டமாக்கியுள்ளது.
சமூகம்-சட்டம்
இஸ்லாமிய சமூகத்தினர் முத்தலாக் சட்டத்தால் பெரிதும் திருப்தி அடைந்தவர்களாக தெரியவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்வதை சட்ட விரோதமாக்குதல், தலாக் கூறி விவகாரத்து செய்யும் உரிமையை இரு பாலருக்கும் வழங்குதல் முதலிய கோரிக்கைகளை இஸ்லாமிய பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சுதந்திர இந்தியாவில் எல்லாருக்கும் அடிப்படை உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் மக்களின் நல்வாழ்விற்காகவும் மட்டுமே சட்டங்கள் இயற்றப்படுகின்றன. வாக்கு வங்கி அரசியல் காரணமாக சட்டங்களில் சதுரங்கம் விளையாட தொடங்கி விட்டனர் அரசியல்வாதிகள். சட்டங்கள் இயற்றப்படும் பொழுது எதிர் கட்சிகள் மற்றும் பாராளுமன்ற நிலை குழுவின் பரிந்துரைகளை ஏற்க வேண்டும். தற்போது இயற்றப்படும் பெரும்பாலான சட்டங்கள் பாராளுமன்றத்தில் அதிக நேரம் விவாதிக்கப்படுவதும் இல்லை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு மசோதாவை பரிந்துரை கேட்க அனுப்புவதும் இல்லை. இதனால் அரசியலமைப்பின் ஒருமைப்பாடு நிலைகுலைகிறது .
சமூகத்திற்காக மட்டுமே சட்டம் உள்ளது. சட்டத்திற்காக சமூகம் இல்லை
Comments
Post a Comment