சிட்டுக்கள் - செல்வகணபதி

 நம் சிறுவயதில், விடிந்தவுடன் நம்மை எழுப்பிவிடும் அலாரங்கள் சிட்டுக்குருவிகளே. எழுந்தபின் அவற்றின் முகத்தில் விழித்தபின்தான் அந்நாளே விழிக்கும். மாலையின் அவை கூச்சலிட்டு கூடு திரும்பும்போதுதான் இரவு இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்மை  சூழப்போவதை உணர்வோம். இப்படி நம் உணர்வோடும், நினைவோடும் கலந்து நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவை சிட்டுக்குருவிகள்.

சிறுவயதில் சிட்டுக்குருவிகளோடு விளையாடாதவர் யாரும் இருக்கமாட்டர்.
அவற்றின் சின்னசின்ன முட்டைகளை கைகளில் உருட்டி உடைத்தமையும், நாம் விட்டுவைத்த முட்டைகளிலிருந்து எட்டிப்பார்த்து வெளிவந்த குஞ்சுகளையும், அவற்றை நாம் தொட்டுதொட்டு விளையாடி உடம்பு கூசிய தருணங்களையும், சிறகு முளைத்த சிட்டுகள் வானத்தில் சீறிப்பாயும் அழகினையும் மறந்தவர் யாருமிலர். சிட்டுக்கள் நம் சிறுவயது சிநேகிதர்கள்.

இவ்வாறு நம் இறந்தகாலத்தை இனிமையாக்கிய சிட்டுகளை நம் எதிர்காலத் தலைமுறைக்கள் ஏடுகளில் மட்டும் பார்க்கக்கூடிய நிலையை நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.

சிட்டுக்குருவியின் வாழ்க்கை விளிம்பினை எளிதில் விளக்கவேண்டும்
எனில் சினிமாக்களை உதாரணமாக கூறலாம். 80,90களில் வந்த படங்கள் சிட்டுக்குருவிகளை அழகாக படம்பிடித்து காட்டிருக்கும். பாடல்கள் பலவும் சிட்டுகளின் சிறப்பினை சில்லென மனதில் பாய்ச்சியிருக்கும். இக்கால சினிமாவில் சிட்டுக்களை காணஇயலாது...இருந்தால்தானே காண்பதற்கு.....

யாருக்கும் சிறுதீங்கும் இழைக்காத சிட்டுகள் சிதைந்து கொண்டிருக்கும்
செய்திகள் மனதில் இமயத்தை தூக்கி வைக்கின்றன. மேலும் ஏன் இவ்வாறு நிகழ்ந்தது என்ற கேள்வி கணையையும்
தொடுக்கிறது.

  # மரங்களை புதைத்து மாடிவீடு கட்டிவிட்டோம். காடுகளை அழித்து கட்டிடங்கள் எழுப்பிவிட்டோம். இதன்மூலம் சிட்டுகளின் வசிப்பிடங்களை வளைத்துப்போட்டுக் நம் வசமாக்கி கொண்டோம்.

# கிராமங்களை நகரமாக்கி, சிட்டுக்கள் வாழ்வை நரகமாக்கிவிட்டோம்.

# செல்லிடப்பேசிகளில் சிட்டுகளை அ(ழி)டைத்துவிட்டோம்.

# வயலினில் இரசாயனம் தெளித்தே, அதன் வளர்ச்சியில் விஷத்தை கொட்டி
விட்டோம்.
   
      இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.. விஞ்ஞான வேகத்தையும்
அதன் விலையான சிட்டுக்குருவிக்கான
துரோகத்தையும்....

தற்போது சிதைக்கும் விஞ்ஞானத்தில்  இருந்து மீளப்போவதை விடவும் , சிட்டுக்களை எவ்வாறு மீட்கப் போகிறோம் என்பதனை யோசிப்பதே உசிதம்.

# கோடைகாலங்களில் சிட்டுக்காக சிறுகுடில் அமைத்து, தாகம்தீர்க்க தண்ணீர் ஊற்றி வைக்கலாம்

# தானியங்களை தூவிவிட்டு அவற்றின் உணவுத்தேவை தீர்க்கலாம்.

# மரங்கள்பல நட்டுவைத்து சிட்டுகளின் மாளிகை கட்ட உதவலாம் .

# தேவைக்கேற்ப மட்டும் அலைப்பேசியை அளவாக பயன்படுத்தி
அழிவுப் பாதையிலிருந்து மீட்கலாம்.

     சிறுவயதில் குருவிக்கூட்டை தெரியாமல் கலைத்தால்கூட பாவம் தொற்றும் என நம்பிய நாம்தான், தற்போது தெரிந்தே குருவிகளை உலகிலிருந்து கூண்டோடு களைந்து
கொண்டிருக்கிறோம்.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்வோம்.
இந்த மானுடம் மனிதற்கு மட்டுமல்ல......

Comments