காலுக்கு எட்டியது வாய்க்கு எட்டல! -களையன் சிவபாலன்


                                     
    புதுவிடியலோடு புத்தாண்டையும் எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்தது மக்கள் கூட்டம்.சூரியனின் கதிர்கள் பூமிக்கு எட்டாத படி மறைக்கும் தலைகள். அத்துணைக்கூட்டமும் குழுமி இருந்தது விராலிமலை முருகன் கோவில் சன்னதியில் தான்.விழா நாயகனாய் மலை உச்சியில் வீற்றிருந்தார் முருகப்பெருமான்.ஒரு கணம் பொறுங்கள், அடடா இதென்ன இறைவன் சன்னதியைக் காட்டிலும் மலையடிவாரத்தில் இவ்வளவு கூட்டம்.சற்று நெருங்கி வந்து பார்க்கையிலே அங்கு படி பூஜை நடக்கப்போகிறது என்று தெரியவந்தது, உண்மையான கதாநாயகர்களும் தெரிந்தார்கள்.நீங்கள் நினைப்பது போல திரையில் வேடம் போடுபவர்கள் அல்ல, அவர்கள் தரையில் தாளம் போடுபவர்கள். புரியவில்லை? ஒவ்வொரு முறையும் கோரிக்கை மூட்டையோடும் காணிக்கை முடிச்சியோடும் கோவிலுக்குச் செல்லும் போது இருபுறமும் இரந்து இரந்து இறந்து கொண்டிருப்பார்களே பிச்சைக்காரர்கள் அவர்கள் தான் அன்று கதாநாயகர்கள்.அந்த பிச்சைக்காரர்கள் எல்லாம் அன்றாடம் அதே கோவிலில் முன்பு யாசகம் கேட்பவர்கள் தான்.அன்றைக்கு படி பூஜைக்கு முன்பு அவர்களுக்குப் பாத பூஜையும் நடந்தது.அங்கு நடந்தவையெல்லாம்  எனக்கு மட்டுமல்ல அவர்களுக்கே சற்று வியப்பாகத்தான் இருந்திருக்கும் . .குடுவையில் அடைத்த நீரைக்கூட வாங்க வழியில்லாத அவர்களின் கால்கள் அன்று  குளிர்ந்த நீரால் குளம் கட்டப்பட்டது. காலில் ஊற்றிய பாலோ கால்வாயாய் வீதியில் ஓடியது. காலுக்கு எட்டியது வாய்க்கு எட்டல!குடம் பாலை காலில் ஊற்றியதற்கு பதில்  தினம் ஒரு கோப்பையில் கொடுத்திருந்தால் வயிறாவது வாழ்த்தியிருக்கும்.பாத பூஜை எல்லாம் ஒருவழியாய் முடிந்தது .கூட்டமும் மெல்ல கலைந்தது.  பசி தலைக்கேறிப் பட்டினியில் பழகிப்போன அவர்களின் வயிற்றிற்கோ அன்று ஒரு நாள்  நல்ல போஜனம் கிடைத்தது.மறுநாள் காலை பொழுது விடிந்தது, வேஷமும் கலைந்தது. மீண்டும் கேட்பாரற்றுப் போனார்கள் அந்த யாசகர்கள். பாத பூஜை என்னும் பேரிலே பாதத்திற்குப் படையல் வைக்கும் அவர்களின் அறியாமையை என்னவென்று சொல்வது? அங்கு நிகழ்ந்த நிகழ்வு ஒரு சான்று தான். இதேபோல பல இடங்களில் மக்கள் அறியாமையில் மூழ்கிக்கிடக்கின்றனர். உலகிலேயே அதிகமான ஏழைகள் வாழும் நாடு நைஜீரியா.அந்த ஏழை நாடுகள் பட்டியலில் நாமும்  விதிவிலக்கல்ல.நம் நாட்டை பொருத்தமட்டில் மேற்கு வங்கத்தில் திட்டத்தட்ட எண்பது இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இந்தியா உட்பட பல நாடுகளில், பிறரிடம் யாசிப்பது சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது.நம் நாட்டில் ஏழ்மையைப் போக்க மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் என பலத் திட்டத்தில் இருந்தாலும் அவையாவும் முழுமையாக பலனளிக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.மனிதன் மனிதத்தை இழந்து சுயநலத்தோடு வாழத் தொடங்கிவிட்டான். ஐம்பதாயிரம் ரூபாய் வருவாய் உள்ள ஒருவருக்கு தானமாய் கொடுக்க ஐந்து ரூபாய் கூட  கையில் வருவதில்லை. உங்களிடம் யாசிப்பவர்கள் பொருளீட்டும் அளவிற்கு உடல் வலிமை உள்ளவராய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இரந்தவர்க்கு இரக்கம் காட்டுவது இன்றியமையாதது. அவர்களுக்குப் பணம் கொடுப்பது தேவையற்றது என்று நீங்கள் நினைத்தால் அவர்களுக்கு எதாவது உணவுப் பொருள்கள் வாங்கிக் கொடுக்கலாம் அல்லவா. குறிப்பாக உங்கள் குழந்தைகளோடு செல்லும் போது யாசிப்பவர்களுக்கு தர்மம் செய்யுங்கள், அது அவர்களின் மனதிலும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் அதோடு உங்கள் மீதான மதிப்பையும் கூட்டும். கழைதின் யானையார் என்னும் புலவர் தன் புறநானூற்றுப் பாடலில் என இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று எனக் குறிப்பிடுகிறார். அதாவது ஒருவரிடம் பிச்சைக் கேட்பது இழிந்த செயலாகும். அவ்வாறு கேட்டவர்களுக்குப் பிச்சை போடாமல் இருப்பது அதை விட இழிந்த செயலாகும் என்கிறார். நமக்குப் பல நேரங்களிலும் கையில் பணம் இருந்தாலும் கூட பிச்சை போட மனம் வருவதில்லை.வள்ளுவர்  அழகாகச் சொன்னார், இல்லை என்ற சொல்லைக் கேட்ட உடனே பிச்சை கேட்டவர்களின் உயிர் போய்விடுகிறது, ஆனால் அதைச் சொன்னவர்களின் உயிர் அவரை விட்டுப் போகாமல்  எங்கு போய் ஒளிந்து கொள்கிறதோ? என்று ,                                கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்                                                  சொல்லாடப் போஒம் உயிர்
   உங்கள் குழந்தைகளுக்குக் கண்டிப்பாக ஈகைப் பண்பை ஊட்டி வளருங்கள். தனது வருவாயில் பத்து சதவீதத்தையாவது பிறருக்கு உதவும்படி செலவழிக்கச் சொல்லிக்கொடுங்கள். நாம் மட்டும் மகிழ்ச்சியாய் வாழ்வதல்ல வாழ்க்கை, நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு  நம்மாலான உதவிகளைச் செய்து அவர்களின் வாழ்விலும் ஒளிவீசிட செய்திடுவோம்.                                                                                      
ஈதல்  இசைப்பட வாழ்தல் அதுவல்லது                                                                                   ஊதியம் இல்லல உயிர்க்கு



Comments

  1. அருமை சிவபாலன்

    ReplyDelete
  2. உயர்வான நோக்கம்.

    ReplyDelete
  3. களையனின் கவிதைகள் எல்லையில்லா வானமாய் விரிக.....

    ReplyDelete

Post a Comment