விடியலை நோக்கி- சிவபாலன்

                       
    தினமும் துயிலில் நம் எதிர்காலம் குறித்தும் வாழ்வில் நாம் அடைய விரும்பும் இலக்குகள் குறித்தும் பல கனாக்கள் காண்கின்றோம்.ஆனால் விடியும் பொழுதில் பகலவனின் ஒளியில் கனாக்கள் யாவும் கலைந்து நிஜ வாழ்வின் நிதர்சனம் புரிகிறது. கனாக்களில் பல்லக்கில் ஏறி பயணம் செய்யும் நாம், அதை உண்மையில் நிகழ்த்திக்காட்ட சிறிதளவும் முயலுவதில்லை.ஒவ்வொரு நாளும் வானம் மட்டுமே விடிகிறதே தவிர நம் வாழ்க்கை விடிகிறதா? என்றால் இல்லை.மனிதனின் மனதுக்குள் எத்தனை எத்தனை அழுக்குகள், கோபங்கள், ஆசைகள், பொறாமைகள்.. இவை அனைத்தும் சேர்ந்து மனிதனின் மனத்தை இருளிலேயே முடக்கி வைத்துவிடுகின்றன. இந்த இருளையெல்லாம் போக்கி நாம் அகவோளி அடைவது என்றோ?
ஒரு குரு தன் சீடர்களிடம், “விடியல் நேரத்தைத் துள்ளியமாக உங்களால் கூற முடியுமா?” என்று கேட்டார். அதற்கு ஒரு சீடர், “எதிரில் வரும் விலங்கு ஆடா? அல்லது மாடா? என்று ஊகிக்கும் அளவு வெளிச்சம் எப்போது வருகிறதோ அதுவே விடியல் நேரம்” என்றார். குரு அது சரியான விடை இல்லை என்று மறுத்துவிட்டார். இன்னொரு சீடர் “ எதிரில் தெரியும் மரம் ஆலமரமா? அல்லது அரசமரமா? என்று ஊகிக்கும் அளவு வெளிச்சம் வரும் நேரமே விடியல் நேரம்” என்றார். அதையும் குரு இல்லை என்று மறுத்துவிடுகிறார்.இறுதியில் குரு சொல்கிறார், “எதிரில் வரக்கூடியப் பெண்ணை எப்போது உன்னுடைய மனம் சகோதரி என்ற கண்ணோட்டத்தில் பார்க்கிறதோ அதுவே உண்மையான விடியல் நேரம்” என்றார். அந்த குரு சொல்வதை வைத்துப் பார்த்தால் நம்மில் பலருக்கு இன்னும் பொழுதே விடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.எங்கு தவறு நடக்கிறது? நடக்கின்ற எல்லாப் பெண்ணிழிவுச் சம்பவத்திற்கும் பெண்களின் ஆடையையும் அணிகளண்களையும் குறை கூறுகின்ற இந்த சமூகம் ஏன் ஒழுக்கமான ஆண் மகனை உருவாக்க தவறிவிட்டது? ஆசிபாவில் தொடங்கி இது வரை நடந்த எந்த பெண்ணிழிவுச் சம்பவத்திற்கும் கடுமையான தீர்ப்பு வழங்கவில்லையே ஏன்? சமீபத்தில் தெலுங்கானாவில் வெறும் ஒன்பது மாதக் குழந்தையைத் தாயாக்க முயன்றிருக்கிறான் ஒரு கயவன். இப்போதெல்லாம் ,” நீ நல்லா இருக்க மாட்டாய்” “வாழ்வில் விளங்க மாட்டாய்” என்றெல்லாம் சாபம் கொடுப்பதில்லை, பதிலாக “உனக்குப் பெண் குழந்தைதான் பிறக்கும்” என்று சபிக்கிறார்கள். அப்படியானால் நம் நாட்டில் பெண்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கும் என்று உணர்ந்துகொள்ளுங்கள். இந்த சமயத்தில் நான் ஆண் இளைஞர்களை மட்டும் குறை கூற விரும்பவில்லை, தந்தை வயது தாத்தன் வயது உள்ளவர்கள் கூட பெண்களை இழிவாகத்தான் பார்க்கிறார்கள்.அதுபோன்ற அயோக்கியர்களுக்கு முதலில் அறிவு வர வேண்டும்.இன்றைய சமூகம் எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி வாழ்கிறது. ‘,வாய்,கண்,மூக்கு,செவி ஆகிய ஐம்புலன்கள் வாயிலாகப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து நல்லொழுக்கத்தோடு வாழ்பவனே நீண்ட காலம் நல்வாழ்வு வாழ்வான்' என்கிறார் ஐயன் வள்ளுவர்,
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க                     
நெறிநின்றார் நீடுவாழ் வார்
  பெண்ணிழிவுச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? முதலில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர்க்கு கருணையே பாராது மரண தண்டனை வழங்க வேண்டும்.கொடியவர்கள் கொல்லப்படுவது, வயலில் வளரும் களைகளைப் பிடுங்குவதற்கு சமம் என்கிறார் வள்ளுவர்,

கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் 
களைகட் டதனொடு நேர்
ஐந்தில் வளையாதது ; ஐம்பதில் வளையுமா? என்று ஓர் பழமொழி உண்டு. அதற்கேற்ப  குழந்தைகள் மனதில் நல்ல கருத்துக்கள் மட்டுமே விதைக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடத்தில் மனம் திறந்து பேச வேண்டும். சுவாசிப்பது, உண்பது, உறங்குவது போல இனப்பெருக்கம் என்பதும் நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றுதான் என்றுப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்க வேண்டும்.  வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் நேரத்தை வீணாக்குவதைத் தவிர்த்து பயனுள்ள செயல்களில் நேரத்தைச் செலவிட பெற்றோர்கள் தத்தம் குழந்தைகளுக்கு அறிவுறை வழங்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் என்றாலே பெண்களை இரசித்து,வர்ணிப்பது என்றாகிவிட்டது. அப்படி இருந்தால்தான் மற்றவர்கள் மதிப்பார்கள் என்ற பிம்பம் உருவாகியுள்ளது. கல்லூரி மாணவர்கள் என்றால் காமக்கண்ணும் காதலிக்கப் பெண்ணும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கல்லூரி என்பது ஒரு நம் அறிவையும் திறனையும் மேம்படுத்துவதற்கானத் தளம். அங்கு சென்று நாம் படித்து சமூகத்தை வளர்ப்பதே நம் தலையாய கடமை.சமூக மக்கள் அனைவரும் சிற்றின்பத்தை விடுத்து உண்மையான பேரின்பத்தை அடைய உண்மையாகவும் நேர்மையாகவும் உழைப்போம் வாரீர்..


Comments

  1. அருமையான பதிவு சிவபாலன்... உன்னைப் போல் ஒவ்வொரு இளைஞனும் நினைத்தால் விடியல் வெகு அருகில்...

    ReplyDelete
  2. அழகான கருத்து

    ReplyDelete
  3. சிற்றின்ப மோகத்தால்
    சிதறிய உள்ளந்தனில்
    காமனை கட்டிப்போட்டு
    கல்லறையில் பூட்டவேணும்

    குறுக்கும் மறுக்கும்
    அலையும் மனதை
    குவியம் ஒன்றிலே
    நிறுத்தி வைத்தது
    கட்டுபாடை நெஞ்சில்
    சுமந்து
    கடமையினை செய்திடவேணும்
    கண்ணியத்தை கண்ணில்
    சுமந்து
    பெண்ணியம்
    போற்றிடவேணும்..

    ReplyDelete

Post a Comment