ரயில் அப்போதுதான் திருப்பாதிரிப்புலியூர் நடைமேடையை வந்தடைந்திருந்தது."சமோசா
சமோசா....சுட சுட சுண்டல் ....சமோசா சமோசா...மெதுவடை" என்று உரக்க கத்திக்கொண்டு
காலை நேரத்து வியாபாரத்தில் பரபரத்துக்கொண்டிருந்தன அந்த மனித நிழல்கள்....இரவு சரியாய்
உறங்காததால் விழுப்புரத்தினின்று ரயில் கிளம்பியபோது போட்ட குட்டித்தூக்கத்தை இவர்களின்
கூச்சலினால் கலைத்து அரைவிழி திறவ நிமிர்ந்த போதுதான் அங்கும் இங்குமாய் பரபரத்தபடி
இருக்கும் அந்த மனித நிழல்களின் பிம்பங்களை சற்றே மங்கலாய் படம்பிடித்துக் காண்பித்துக்கொண்டிருந்தன
என்
விழிகள்.
"ஏன் எம்மா எயுந்துட்ட...நீ எங்க எறங்கனும்முன்னு சொல்லும்மா....நான்
வேணுமுன்னா எயுப்பிவிட்றேன்...காதுல அந்த ரெண்டு ஒயர போட்டுக்குனு பாட்டு கேட்டுக்குனே
தூங்கு எம்மா..!" என்று அந்த ஐம்பது வயதை தொட்டிருக்கும்போல் இருந்த பெண்மணி என்னிடம்
கூறுகையில், " நான் சிதம்பரம் இறங்கனும் அம்மா" என்று கூறி லேசாய் புன்னகைத்துவிட்டு
மறுபடி அந்த சன்னல் கம்பிகள் ஊடாலே அந்த மனித நிழல்களை உற்று நோக்கத்தொடங்கினேன்.சற்று
நேரத்தில் திடுக்கென்று தூக்கிவாரிப்போட்டு திரும்பியபோது நடைமேடையினின்று ஒரு அதிகாரி
ஓங்கிய குரலில் அந்த பெண்மணியை அதட்டி கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.
" ஏம்மா உங்ககிட்ட
எத்தனை முறை சொல்றது ,இப்புடி கொய்யா கூடைகள ரயில்ல ஏத்திட்டு வரனும்னா திருப்பாப்புலியூர்
கோர்ட்டுக்குப்போயி ஆயிரத்தி நூறு ரூவா செலுத்தனுமுன்னு....ஒவ்வொரு முறையும் சொல்லனுமாம்மா....ஒங்ககூட
பெருந்தொல்லையா போச்சேம்மா....பணம் கட்டமுடிலன்னா ஏம்மா நீலாம் தொழில் பண்ணவர....ஒன்
கொய்யா கூடையெல்லாம் கீழ எறக்கிடும்மா..! என்று அந்த அதிகாரி அந்த பெண்மணியை நோக்கி
எண்ணெயில் போட்ட கடுகாய் பொறித்து வெடித்துக் கொண்டிருந்தார்.
நல்ல உடல்வாகு நேர்த்தியான நிறம் மஞ்சள் பூசிய முகத்தில் போடப்பட்டிருந்த
விபூதி பட்டையும் பச்சை நிற பெரிய பொட்டும் கழுத்தில் போடப்பட்டிருந்த சன்னமான மணியும்
கணுக்காலினின்று சற்றே தூக்கி கட்டப்பட்டிருந்த கசங்கிய சிவப்பு வண்ண காட்டன் புடவையும்
அதற்கு பொருத்தமே இல்லாத பச்சை வண்ண ரவிக்கையும் அவ்வப்போது உரசிக்கொள்ளும் கலர்போன
கண்ணாடி வளையல்களும் தடித்து கரகரத்த குரலும் அந்த பெண்மணியைவிட்டு என் கவனத்தை வேறெங்கும்
சிதறவிடவில்லைதான்.
"எஞ்சாமி....என்னால அவ்ளோ பணம் கட்டமுடியாதுய்யா....ஏதோ ஐநூறு
அறுநூறு ரூவான்னு மாசந்தோறும் திருப்பாப்புலியூரு கோர்ட்டுல கட்டீனுதான் வரோமுய்யா...எங்க
குடும்பம் நெல்ல நெலமைல இருந்தா நான் ஏன்யா
இப்புடிலாம் கஷ்டப்படப்போறேன்...கொஞ்சம் பாத்து வுடுங்கய்யா..!
என்று தன் கைகளைக் கூப்பி அந்த அதிகாரியிடம் அந்த பெண்மணியின் கனத்த குரல் ரயிலின்
சன்னல் வழியே தேய்ந்து கரைந்து கொண்டிருந்தபோது ஒன்றும் புரியாதவளாய் பேந்த விழித்துக்கொண்டிருந்தேன்.
அந்த பெண்மணியிடம் பேசலாம்
என்று வாயெடுக்கும் முன் , அவரே என் அருகில் வந்து அமர்ந்து தன் எதிரே இருந்த சமவயது
சக பெண்ணிடம் புலம்பத்தொடங்கி என்னையும் அவருடன் சேர்த்துக்கொண்டார்...."எம்மா
இது இன்னாடியம்மா நீதியா...?!நாயமா...?!இவனுவளுக்கே இதுலாம் அடுக்குமா...நாளுக்கெயம
பார்க்காம விடிக்காத்தால எயுந்து பண்ருட்டி மார்க்கெட்டுக்குப் போயி ஒரு கூடை கொய்யா
முன்னூத்தி அம்பது ரெண்டு கூட எயுனூறு ரூவான்னு கடனுக்கு வாங்கியாந்து பண்ருட்டீல இருந்து
மாயவரம் வெரிக்கும் கொய்யா வியாவாரம் பண்ணீனு ரயிலே கதீன்னு போயீனு வந்தூனுக்கீறோம்.அதுலயும்
கொய்யா சீசனுல ஒரு நாளிக்கு ஐநூறு ஆயிரம் ரூவா தேறும்.சீசனில்லாத நாளுல வெறும் அம்பது
நூறுக்கே சிங்கிடிதான்.இதுல இந்த சோழன்ல போறதுவ சிலதுவோ ஒரு கிலோ கொய்யா அம்பது ரூவான்னு
வித்தா முப்பதுக்கு குடு நாப்பதுக்கு குடுன்னு பேரம் பேச கெளம்பிடுதுவோ....இந்த மனிசாளுவள
எல்லாம் சகிச்சீனு லாபமோ நஷ்டமோன்னு பொழப்பு
ஓட்டினுக்குறோம்....இப்புடி நாய் படாத பாடா லோலோனு அலஞ்சி பண்ண வியாவாரத்துல வர துட்ட
லோனுக்கு அடச்சீனு கொய்யாக்கூடை வாங்கன கடன அடச்சீனு நாளு செலவுக்கு எடுத்துக்குனு
இன்னமோ வாழ்க்கைய நடத்தினு லோலுப்படுறோம்....இதுல இவனுவ இன்னான்னா ரயிலு சீட்டுங்களுக்கு
கீய வெச்சினு வர கொய்யா கூடைங்களுக்கு ஈடா கோர்ட்டுல பணங்கட்டூனு தொந்தரவு பண்ராணுவோ...நீயே
சொல்லு எம்மா ஒரு நாலு சொல்லு படிச்சிருந்தா இப்புடிலாம் நோவுற பேச்சலாம் வாங்கனும்னு
என் தலவிதில இருந்திருக்குமா...?! என்று அந்த பெண்மணி தன் ஆற்றமாட்டாத வேதனையை ஆதங்கத்தை
புலம்பிக்கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்த நேரம், " லொக்க்...லொக்க்க்..."
என்று என் இருமல் அவரின் பெரும்புலம்பலிற்கு வேகத்தடை இட்டது.
" எம்மா...இன்னா எம்மா இருமுற இந்தாடியெம்மா இந்தா ரவ தண்ணியக்
குடி..ஒடம்பு கிடம்பு சரியில்லயா..?! " என்றபடி தன் கொய்யா கூடையினின்று சற்றே
நொறுங்கிய ஒரு லிட்டர் பிஸ்லெரி பாட்டிலில்
நிரப்பப்பட்டிருந்த மங்கலான குழாயடி தண்ணீரை எடுத்து நீட்டினார். நானும் தொண்டையை அடைத்துக் கொண்டிருந்த
சளியை தண்ணீர் குடித்துவிட்டு லேசாய் குரலை கனைத்து சரிசெய்து கொண்டிருந்தபோது , என்
தலையை தடவ வந்த தன் கைகளை பின்வாங்கிக்கொண்டு மேலும் பேசலானார்.
" என் மவன் ஊட்டு ரெண்டு வயிசு பேத்திக்கு ரெண்டு மூனு நாளா
ஜொரம்னு பாண்டில கோரிமேட்டு ஆஸ்பத்திரில சேர்த்துக்குறாங்க...பாவம் என் மவ ரொம்ப நொந்து
என்கிட்ட வந்து..." எம்மா மவளுக்கு ஏதோ டைஃபாய்டு ஜூரமாம்....ஒடம்பு ரொம்ப வீக்கா
இருக்குதாம்...என் பொண்டாட்டிய கூட இருக்க சொல்லிட்டு கொயந்தைக்கு மருந்து வாங்ககூட
பணம்பத்தாம வேலைக்கு வந்துட்டேன் எம்மா....கட்டடத்தோட அந்தரத்துல தொங்கிக்கீனு பெயின்ட்டு
அடிக்கிற இந்த பொழப்புல ஒரு நாளிக்கு முன்னூறு நானூறு தேறும்...அதுலயும் இந்த பொழப்பு
நெரந்தரமும் இல்ல...இந்த நெலமைல நாம இந்த வருச தீவாளி கொண்டாட முடியுமான்னு தெரியல
எம்மா"ன்னு என் மவன் கண்ணுகலங்கி நான் மொத மொறையா பாத்தேன் மனசுலாம் கனமாகீதுடி
எம்மா....வாழ்க்கையே வெறுத்துப்பூடுச்சி...இன்னமோ ஓடுது இந்த நாய்ப்பொழப்புக்கு பொறக்காமயே
இருந்துக்கலாமோன்னு எரிச்சலாகூது" என்று அந்த பெண்மணி தன் புலம்பலை மேலும் மேலும்
அடுக்கிக்கொண்டே போன போது என் விழிகளினின்று சடாலென்று ஊற்றுப்பெருக்காய் பொங்கிக்கொண்டு
வழிந்தது கண்ணீர்.
இறைவா...என்னை இந்த நிலைமையில்
நன்றாக வாழவைத்துக்கொண்டிருக்கும் உனக்கு என் மனமார்ந்த கோடானு கோடி நன்றிகள்...!பண்டிகை
காலம் என்றாலே புத்தாடை குதூகலம் என்றே இருந்து பழகிவிட்ட என்னைப் போன்ற நடுத்தர குடும்பத்து
பெண்கள் பெற்றோர்களால் இளவரசியாகவே வளர்க்கப்படுவதால் இதுபோன்று
அல்லற்படும் பெண்மணிகளின் புலம்பலும் ஆற்றாமையும் வேகமும் வாழ்க்கை என்னும் மேடையின்
போர்க்களத்திரையை நன்றாய் விளக்கிக்காட்டி வாழ்வின் கோரமுகத்தை மிகக்கொடுமையாய் எடுத்துக்
காட்டுகின்றன.இதுபோன்ற நடுத்தர வர்க்கத்தில் தனது கஷ்டங்களை எல்லாம் பெற்றோர் மூடிமறைத்து
பிள்ளைகளின் மகிழ்விற்காய் ஓடி ஓடி தேய்கிறார்கள்.ஆனால் இந்த ஓட்டங்கள் எல்லாம் பிள்ளைகளின்
மகிழ்விற்காய் அவர்கள் கண்முன்னே மறைக்கப்படுகின்றன. இந்த பெண்மணியின் ஆற்றமாட்டாத
புலம்பல்களால் என் மூளையின் முடுக்குகள் எல்லாம் வாழ்க்கைப் போர்க்களத்தின் அச்ச முரசொலி
எழும்பி எழும்பி என்னை அச்சுறுத்தத் தொடங்கியது.ரயிலின் வேகத்தை மிஞ்சிய என் எண்ண ஓட்டத்தின்
ஊடாலே நான் என்னையும் மறந்து ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கடிக்கப்பட்டிருந்தபோது என்னை
ஒரு கனத்த கரம் தொடுவதாய் எண்ணி நிஜ உலகிற்கு என்னை அழைத்துக்கொண்டு வந்தேன்."
எம்மா சிதம்பரம் வந்துட்ச்சிம்மா...!"என்று அந்த பெண்மணி என்னை அறிவுறுத்த நானும்
ஒரு கிலோ கொய்யா வாங்கிக்கொண்டு, இந்த தீபாவளிக்கு வாங்கி வைத்திருக்கும் பட்டாசு பெட்டியை
எடுத்துவந்து உங்களை சந்திக்கிறேன் அம்மா ! என்று கூறி அவரது கைபேசி எண்வாங்கிக்கொண்டு
சிதம்பரம் நடைமேடையில் கால்பதித்து நடக்கலானேன்.
Ur words were bringing the exact scenario that happens everytime when we go for a train travel. Thanks for posting a daily happening(yet influential ) that makes sense what is life for a downtrodden people.
ReplyDeleteமிக்க நன்றிகள் மகிழ்ச்சிமா
DeleteNice story
ReplyDeleteநன்றி
DeleteNice, words are great in expressing the pain and feelings
ReplyDeleteநன்றிபா
DeleteGreat way of presentation
ReplyDeleteGreat way of presentation
ReplyDeleteநன்றி
Deleteஒரு நாளின் சிறு நிகழ்வை ....இவ்வளவு அருமையாக யாராலும் கூற இயலுமா என வியக்கிறேன்......
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி நன்றிகள்
Deleteகண்களில் லேசாய் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது...மனம் ஏனோ கொஞ்சம் கனமாய்த்தான் இருக்கிறது! அருமையான, வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை உணர்த்தும் கதை!
ReplyDeleteகண்களில் லேசாய் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது...மனம் ஏனோ கொஞ்சம் கனமாய்த்தான் இருக்கிறது! அருமையான, வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை உணர்த்தும் கதை!
ReplyDeleteஉளமார்ந்த நன்றிகள் பா
Deleteஅருமையின் உச்சக்கட்டம்...
ReplyDeleteநன்றிகள் மா
Deleteஉங்களின் இந்த எதார்த்த வாழ்க்கை பதிவை படித்து முடித்த பின் கண்ணின் ஓரத்தில் கண்ணீர் எட்டிப் பார்ப்பது ஏனோ?...தோழி உங்களின் தமிழ் வார்த்தை கையாடல்கள் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன
ReplyDeleteமனமார்ந்த நன்றிகள் சகோ....
Deleteஇந்த கதை நம்மையும் நம் நிலைமையையும் ஒரு நொடியில் உணர வைக்கிறது .. உண்மையில் மிகவும் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteBut,தமிழில் padipatharkul pothum pothum enru anathu.....
Vera level ka.!!😇
ReplyDeleteNandrigal thambi
Delete