இதே போல ஒரு ஜூன் மாதம் 2019ஆம் ஆண்டு 'நாங்கள்' மின்னிதழ் வலைதள வடிவில் வெளிவந்தது. வந்த இரண்டு மணி நேரத்தில் வலைதளம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் அன்று மாலைக்குள் அனைத்து படைப்புகளையும் Blog வடிவத்திற்கு மாற்றி மீண்டும் வெளியிட்டோம். இப்படித் தான் நாங்கள் மின்னிதழின் தொடக்கம் இருந்தது. அதன் பின்னர் மீண்டும் ஒரு தொழில்நுட்ப காரணத்தினால் அடுத்த ஆறு மாதங்களில் ‘நாங்கள்’ மின்னிதழ் முடங்கிப்போனது.
அங்கிருந்து இரண்டு வருடங்கள் கழித்து இன்று மீண்டும் நாங்கள் மின்னிதழ் தொடங்கப்படுகிறது. நான் நாங்கள் மின்னிதழை தொடங்குவதற்கு முக்கியக் காரணம் என்னுடைய சக மாணவ எழுத்தாள நண்பர்களுக்கு இது ஒரு படைப்புத் தளமாக இருக்கும் என்பதினால் தான். எனக்கு அந்த வலி தெரிந்திருந்தது. ஒரு படைப்பு சரியாக இல்லை என்று ஒதுக்கினால் கூடப் பரவாயில்லை. உன்னுடைய வயதுக்கு நீ இந்த இதழில் எல்லாம் பிரசுரம் செய்யக் கூடாது என்று ஆரம்பித்து நீ என்ன சாதி என்ற வரையில் என்னுடைய படைப்பு வெளியீட்டுக்கான தேடலில் எனக்குக் கேள்விகள் வந்துள்ளன. அதன் தாக்கமாக இந்த 'நாங்கள்' இருந்துள்ளது. பழைய கதைகள் இருக்கட்டும்.
இந்த இக்கட்டான கொரோனா காலத்திலும் இந்தப் பணியில் இணைந்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள். இப்போது எங்கள் குழுவில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும், ஓவியர்களுக்கும் மேலும் பல இளம் எழுத்தாளர்களுக்கு 'நாங்கள்' ஒரு தளமாக இருக்கும் என்று நம்புகிறேன். இனி எந்த இடைவெளியும் இல்லாமல் 'நாங்கள்' இதழ் வெளிவர எங்கள் பக்கத்திலிருந்து மூழுவீச்சான உழைப்பையும் படைப்பாற்றலையும் கண்டிப்பாகத் தருகிறோம். உங்கள் பக்கத்திலிருந்து ஆதரவையும் அன்பையும் எதிர்ப்பார்க்கின்றோம். நன்றி!
- ர.சிவக்குமார்
தலைமை ஆசிரியர்
Comments
Post a Comment