இவள் - கவிதை

 

வீட்டில் பெண் பிறந்ததும்

மகாலெட்சுமி வந்துவிட்டாள் என கொண்டாடுவது,

இவளைத்தானா!!!...

 

"அடுத்ததும் பெண் தானா",என அலட்சியம் செய்வதும் 

இவளைத் தானா!!!...

 

பெரிய மனிசி என்று 

ஊர் கூட்டி விஷேசம் வைத்தது;

இவளை,மாதம் ஒருமுறை 

தீட்டென ஒதுக்கிவைக்கத் தானா!!!...

 

திருமணத்திற்கு முன்

அண்ணனுக்கும் அப்பாவுக்கும் இடையே

திருமணத்திற்கு பின் 

தந்தைக்கும் தாரைவார்த்து கொடுத்தவனுக்கும் இடையே

ஆட்டிவைக்கப்படும் கைப்பாவையும்,

இவள்தானா!!!...

 

விட்டுக்கொடுக்கவும்,

விட்டுப்போகவும் முடியாமல்

விழி நீரை வீணாக்காமல் 

தேக்கிவைப்பவளும்,

இவள்தானா!!!..

 


மனதில் உள்ளதை 

சொல்லவும் முடியாமல்

மெல்லவும் முடியாமல்

நடைபிணமாக‌ வாழ்ந்துகொண்டிருப்பவளும்,

இவள்தானா!!!...

 

புண்ணான மனதை 

புன்னகையால் மறைப்பவளும்

இவள்தானா...

 

ஆயிரம் பிடித்த விஷயங்கள் இருந்தாலும்

அடுத்தவர் சொன்னதை

கேட்க மட்டுமே 

படைக்கப்பட்டவளும்,

இவள்தானா!!!...

எத்துனை துயரென்றாலும்

தன்னைத் தானே

தன்னுள் புதைத்துக்கொள்ளும்

இடுகாடும்,

இவள்தானா!!!...

- மு.சுஜித்தா

 

Comments