2020 ன் ஆரம்பத்திலிருந்தே கொரோனா நோய்த்தொற்று நம்மை விரட்டி வருகிறது. அது நம்மை உடலளவிலும் மனதளவிலும் பொருளாதார அளவிலும் வாட்டி வருகிறது.அண்டை நாடு, அண்டை மாநிலம், அண்டை மாவட்டம் தொடங்கி அண்டை வீடு வரையில் பின் தொடர்ந்து வருகிறது.முதல் அலை, இரண்டாம் அலை என நம்மை அச்சப்படுத்திக் கொண்டிருக்கிறது.இதில் மூன்றாம் அலைக்கான எச்சரிக்கையும் கூட. இது மட்டுமா…கருப்பு, வெள்ளை, மஞ்சள் எனப் பல நிறங்களில் பூஞ்சை தாக்குதல்கள்,கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் போன்ற தடுப்பூசிகள், ஹைட்ராக்ஸி குளோரோ குயின், ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள், ஒரு நாள், ஒரு வார, ஒரு மாத , கால வரையற்ற ஊரடங்குகள், தனிமனித இடைவெளிகள், முகக்கவசங்கள், கிருமி நாசினிகள் ஆவிபிடித்தல் போன்ற வருமுன் காப்புகள், ஆக்ஸிஜன் இல்லை, ஆம்புலன்ஸ் இல்லை, படுக்கைகள் இல்லை போன்ற நிலைமைகள், சுற்றுப்புறத்தில், காற்றில், நீர்த்திவலையால் பரவிடும் என்ற அச்சம் போன்ற பல்வேறு சூழ்நிலைகளை அசாதாரணமாகக் கடந்து வந்து கொண்டிருக்கிறோம்.
இவையெல்லாம், நாம் மறக்கவும் தவிர்க்கவும் முடியாதவை.ஆனால், இவையே நிரந்தரமானவை அல்ல. கட்டாயமாக இவற்றிலிருந்து விடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதைவிடக் கொடிய நோய்களையெல்லாம் கடந்து வந்த நமக்கு இதிலிருந்து மீள்வது பெரிய விடயமல்ல. அரசுடனான ஒத்துழைப்பும் விழிப்புணர்வும் இருந்தாலே போதுமானது. கொரோனா பற்றிய செய்தி இல்லாத நாளை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.இந்த நேரத்தில் சோர்வோ, வெறுப்போ, வேதனையோ, அழுத்தமோ கொள்ள வேண்டியதில்லை.நாம் புத்துணர்வுடன் புதுத்தெம்புடன் மீண்டெழ வேண்டும்.
இந்த ஊரடங்கு காலத்தில் முதலில் நம் உடலை பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே,சத்தான உணவு, பச்சைக் காய்கறிகள், பயறு வகைகள்,சிறு தானியங்கள் என உண்டு ஆரோக்கியத்தைப் பேண வேண்டும். பின்,புதிய விசயங்களைக் கற்றுக் கொள்வது, புத்தகங்கள் படிப்பது, சமைத்துப் பழகுவது, மறந்து தொலைத்த சிறு வயதில் களித்த விளையாட்டுகளைப் புத்தெழுச்சி செய்வது, உடற்பயிற்சி செய்வது,வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது, அலங்கரிப்பது போன்ற வேலைகளைச் செய்யலாம். இவ்வாறு செய்வதால் நம்மைச் சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ளலாம்.
இலக்குகள் இருப்பின் அதை நோக்கிச் செல்ல திட்டமிடலாம். மாணவர்களாயின் இன்னும் தங்கள் அறிவை விசாலப்படுத்தலாம். தங்களின் பெற்றோர்களுக்கு உதவி செய்யலாம்.இவ்வாறாக உங்களைச் சுற்றி ஒரு மகிழ்ச்சியான சூழலை உருவாக்கிக் கொண்டே இருங்கள். இப்படியாக மகிழ்வுடனும் உற்சாகத்துடனும் ஊரடங்கை கழித்து உலகம் நோய்த்தொற்றிலிருந்து மீண்ட பிறகு வெளியே வரத் தொடங்குவோமானால் நம்மால் பின்வரும் நாட்களைச் சரியாகவும் நலமாகவும் திட்டமிட்டபடியும் கழிக்கவும் வாழ்வில் முன்னேறவும் முடியும் என்பது திண்ணம்.
- விஷ்ணுபிரசாந்த்
Comments
Post a Comment